20,00,00,000 கோடிகள் இந்திய ஆட்சியில் ஊழல்

உலகமே வியக்கும் வண்ணம், இந்தியாவுக்கு உலகளவில் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. உலக அரங்கில் இந்தியாவுக்கும், இந்தியாவை ஆளுகிறவர்களுக்கும் இருந்த நல்லபெயர் கெட்டு நாறிக்கொண்டிருக்கிறது. இதை நாங்கள் சரிப்படுத்திவிட்டோம், இப்போது ஆளுபவர்களின் கைகளில் ஊழல்மூலம் படிந்த கறைகள் கழுவப்பட்டாகிவிட்டது என்று உலக மக்களுக்கு உணர்த்த காலங்கள் நீண்டுப்போகும்.

  இந்தியாவை ஆளும் பிரதம மந்திரி கைசுத்தமுள்ளவர், நல்லவர் என்பது உண்மை என்று இந்தியாவின் எதிர்கட்சிகள்கூட கூறி பெருமைப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் கண்முன் நடைபெற்ற ஊழல், தன் டேபிளில் நடவடிக்கை எடுக்கவந்த அந்த ஊழல் ஃபைல்மேல் உடனே கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய இந்த நல்லதலைவர், ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்காததால், ஊழல்வாதிகளை கண்டிக்காததால், தன் அதிகாரத்தை சரியான விதத்தில் பயன்படுத்தாததால், இவர் தலையாட்டி பொம்மையாகி, அத்தனை பெரிய கோடிகளின் ஊழலுக்கு இவரே முழுபொறுப்பு என்று கூற வேண்டியதானது. வாய் திறக்காத பொம்மை பிரதமமந்திரியாகவும், எதற்கெடுத்தாலும் நாட்டில் இடியே விழுந்தாலும் மௌனம் சாதிக்கும் பிரதமராக இருந்ததால்தானே நாட்டுக்கு இத்தனை பெரிய அவமானம். நம் நாட்டுக்கும் இத்தனை கோடிகள் நஷ்டம் உண்டானது. பிரதமர் நல்லவர்தான், ஆனால் நடவடிக்கை எடுக்கும் தைரியமில்லாதவராக, ஆளுமைதிறமை இழந்தவராகிப்போனார். நடவடிக்கை எடுக்கமுடியாதவராக, கைகள் கட்டப்பட்டவராக ஆகிப்போனபின் இவருக்கு பதவி எதற்கு? உள்ள நல்ல பெயரையும் காப்பாற்றிக்கொள்ள தன் பதவியை ராஜினாமா செய்துவிடுவதுதான் நாட்டுப்பற்று உள்ளவருக்கு நல்ல அடையாளம் ஆகும். இப்போது இந்திய நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு சாதாரணமானதல்ல. ஊழல் செய்யப்பட்டது பல லட்சம் கோடிகள் ஆகும். அந்த பணத்தை மோசடி செய்தவர்களுக்கு தாங்கள் எடுத்த கோடிகளுக்கு எத்தனை சைபர்கள் இடவேண்டும் என்றுகூட தெரியாது. இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிகள் டெல்லியிருந்து கன்னியாகுமரி வரை கடல்நீராக வியாபித்து பரவியது. அத்தனை கோடிகளும் இந்தியர்களான நம்முடையதாகும், அது நாம் அத்தனை பேர்களும் உழைத்து கொடுத்த வரி பணமாகும். இவைகளை கேள்வி கேட்க விமர்சிக்க இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. போகட்டும்! இவைகளைப்பற்றி TVயிலும், அன்றாடம் தினசரி செய்தித்தாள்களிலும் வெளிவந்து சிரியாய் சிரிப்பதை நாம் யாவரும் அறிவோம். அதை மறுபடியும் இங்கே எழுதி அறிவிப்பதில் பிரயோஜனமில்லை.


கிறிஸ்தவ CSI சபைகளில் மெகாஊழல் கோடிக்கணக்கில்...
(CSI சபை அல்லாதவர்கள் இந்த கட்டுரையை வாசிக்கவேண்டாம்)

  நம் இந்திய அரசாங்கத்தில் நடந்த அந்த மெகா ஊழலை சுட்டிக்காட்டியதின் நோக்கம். நம் CSI கிறிஸ்தவர்கள் சபையிலும் இந்த மெகா ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு TVயிலும், செய்திதாள்களிலும் வெளிவந்து சாட்சிகெட்டுப்போய் நாம் வணங்குகிற தெய்வத்துக்கு அவமானத்தை சபையை ஆளுகிற தலைவர்களே உண்டுபண்ணிவிட்டார்கள்! CSI சபை அங்கத்தினர்களான கிறிஸ்தவர்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம்? இந்தியாவிலேயே தலைமகனாகிய பிரதமர் அவர்கள் கை சுத்தம் உள்ளவர் என்பதை யாரும் மறுக்கவேயில்லை. ஆனால் இவர் ஆட்சியில் நடந்த கொள்ளைகளுக்கு, நடந்த ஊழலுக்கு இவரே தலைமை வகித்தவராக ஆகிப்போனாரே!

ஆனால் நம் CSI கிறிஸ்தவ சபைகளில் நடந்த ஊழலில் சற்று வித்தியாசம் என்னவென்றால்! தலைமை பீடத்தில் உள்ளவர்களே கோடிகளை திருடியிருக்கிறார்கள். CSI கிறிஸ்தவ தலைமையின் கை பல டையோசிஸ்களில் சுத்தமில்லை. இவர்களின் உடலும், மனமும் சுத்தமில்லை. சில தலைவர்களின் சாட்சி கெட்டுபோய்விட்டது. அதில் ஒருவர் தன் மனைவிக்கு பிறக்காத 18 வயது பெண்ணுக்கு, இரகசிய தகப்பனாக இருக்கிறார். இவர் கோடிகளை கொள்ளையடித்து தன் பெயரிலும், தன் மனைவி பெயரிலும் அந்த பணத்தை பேங்க்கில் சேர்த்து வைத்திருக்கிறார் என்று ஆதாரத்துடன் சிலரால் குற்றம் சாட்டப்பட்டு உள்ளார். பரிசுத்த சபையின் தலைமை ஸ்தானத்தில் இப்படிப்பட்டவர் அமர்ந்து அனைத்து சபைகளையும் பரிசுத்தத்துக்கு நேராக நடத்தி செல்வது எப்படி? CSI சபைகளில் இப்படிப்பட்ட பாவம் நடப்பது முதல் முறையல்ல, இது புதிதும் அல்ல, இத்தகைய பாவம் கடந்த 20 ஆண்டுகளாகவே சில இடங்களில் தொடருகிறதே! எங்கு பார்த்தாலும் பரிசுத்த குலைச்சல் பெருகிவிட்டது. CSI சபைமக்களால் இதற்கு ஒரு முடிவுகட்ட முடியவில்லை. நீதிமன்றத்தாலும் முடிவுகட்ட முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இயேசு கிறிஸ்துவின் வருகையோ சமீபித்துவிட்டது.

CSI சபையில் உள்ளவர்கள் மணவாளனை எதிர்க்கொள்ளமுடியாதா? மணவாளனோடு இணைந்து மேகங்களில் எடுத்துக்கொள்ளப்படமுடியாதா? நாமும் நம் சந்ததியும் கைவிடப்படுவோமா? CSIயின் நிலைமை மோசமாகிறதே! இரவில் குடிக்கும் ஆயர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதே! CSI சபையினர் இந்த நிலையை சரியாக்க என்ன செய்தார்கள்? CSI சினாட் 2011 கடந்த பிப்ரவரி மாதம் அவசரமாக கூடப்போகிறது என்பதை நான் அறிந்து இந்த சினாட் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் மெம்பர்கள் மூலமாவது, CSI சினாடிலும், டையோசிஸ்களிலும் நடக்கும் பணமோசடிகள், ஆலய நில திருட்டு இவைகளைக் குறித்து இந்த CSI சினாட் கூட்டத்தில் பேசி முடிவெடுக்க சினாட் மெம்பர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதி கேட்டுக்கொண்டேன். இந்த கூட்டத்திலாவது வழி பிறக்காதா! என்ற எண்ணத்தில் சினாட் மெம்பர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதி விவரம் அறிவித்தேன். தமிழிலும் - மலையாளத்திலும் கடிதத்தை மொழி பெயர்த்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பினேன். சினாட் மெம்பர்கள் அனைவரின் விலாசங்களும் எனக்கு கிடைக்கவில்லை. சுமார் 200 பேர்களுக்குமட்டும் கடிதம் எழுதி அந்த கடித விவரத்தை மற்றவர்களுக்கும் அறிவிக்க கேட்டுக்கொண்டேன்.

2011 பிப்ரவரி மாதம் 19ம் தேதி சினாட் கூட்டம் நடந்தது. கூட்டம் நடைபெறும்முன் சினாட் மெம்பர்கள் அத்தனை பேர்களின் கைகளிலும் இக்கடிதம் போய்சேரவேண்டும் என்பதற்காக இடைவெளி இல்லாத என் ஊழிய நெருக்கங்களின் இடையேயும் இந்த கடிதத்தை தயாரித்து ஒவ்வொருவருக்கும் தனி தபாலில் என் கடிதத்தை அனுப்பினேன்.


அந்த கடிதத்தை கீழே வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

8.2.2011

To
CSI SYNAD MEMBERS
SOUTH INDIA.

கர்த்தருக்குள் அன்பான CSI சினாட் அங்கத்தினர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் யாவரையும் வாழ்த்துகிறேன்.

என் தகப்பனார் CSI சபையின் செயலாளராக பலவருடம் தொடர்ந்து ஊழியம் செய்தவராவார். நானும் CSI சபையின் திருவிருந்தில் தொடர்ந்து பங்குக்கொள்ளும் உறுப்பினனும், அங்கத்தினனும் ஆவேன். அதுமட்டுமல்ல, நம் CSIயைக்குறித்து மிகுந்த பாரமுள்ளவனும், CSIயின் உயிர்மீட்சிக்காக, முன்னேற்றத்துக்காக பல வருடங்களாக உழைப்பவனும், பாடுபடுபவனும், தினசரி ஜெபிப்பவனும் ஆவேன். அதோடு நம் CSI சபைகளில் உயிர்மீட்சி உண்டாக கன்வென்ஷன் கூட்டங்களில் பிரசங்கிக்க அனைத்து CSI திருமண்டலங்களில் CSI சபைகளிலுள்ள குருமார்களால், சபையினரால் அழைக்கப்பட்டு தொடர்ந்து பிரசங்கித்து கொண்டிருப்பவனும் ஆவேன்.

  ஜாமக்காரன் என்ற பெயரில் நான் நடத்தும் பத்திரிக்கை டெல்லி மத்திய அரசாங்க பதிவுபெற்ற பத்திரிக்கையாகும், தமிழ்நாட்டு அரசாங்கத்திலும் பதிவுபெற்ற பத்திரிக்கையாகும். அனைத்து கிறிஸ்தவ சபைகளை மனதில்கொண்டு, குறிப்பாக நம் CSI சபை மக்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும், வசனத்துக்கு விரோதமாக உள்ள கள்ள உபதேசத்தை வசன அடிப்படையில் சுட்டிக்காட்டியும், எச்சரித்தும் சபைகளிலுள்ள ஊழல்களை வாசகர்கள் மூலமாக அறிந்து அவைகளை ஜாமக்காரன் வாசகர்களுக்கு பத்திரிக்கை மூலமாக வெளிப்படுத்தி எச்சரிக்கவும், அறிவிக்கவும் செய்து வாசகர்களை அதற்காக ஜெபிக்க கேட்டுக்கொள்ளவும் அதன்மூலம் அவர்களுக்குள் விழிப்புணர்வு உண்டாகவும் இந்த பத்திரிக்கை ஊழியத்தை தேவதயவால் கடந்த 40 வருடங்களாக நடத்தி வருகிறேன்.

அதன் அடிப்படையில் நம் CSI சபைகளிலும், திருமண்டலத்திலும், CSIயின் தலைமை பீடமாகிய CSI சினாட்டிலும் கடந்த காலங்களில் நடந்த பண ஊழல்கள், குறிப்பாக CSI சினாட்டில் நடந்த சுனாமி பணக்கொள்ளைகளைக்குறித்தும், அதில் சம்பந்தபட்டவர்களைக்குறித்தும் சில பிஷப்மார்களின் பண ஊழல்கள், சாட்சியில்லா வாழ்க்கைகள் யாவையும் என் வாசகர்களுக்கு அறிவித்து ஜெபிக்க கேட்டுக்கொண்டேன். பல எதிர்ப்புகள் பயமுறுத்தல்களுக்கிடையே இந்த ஊழியத்தை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். அதன் காரணமாக பெரும்பாலான பிஷப்மார்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கிறேன்.

  CSI சினாடுக்கும், சில CSI திருமண்டலங்களுக்கும் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உண்டான அவமானங்கள் ஏராளம் ஏராளம். சினாட் அங்கத்தினர்களாகிய நீங்கள் யாவரும் இவ்விவரங்களை அறிந்திருக்கிறீர்கள்.

  இப்போது இக்கடிதத்தை சினாட் மெம்பர்களாகிய உங்களுக்கு நான் எழுதக்காரணம், பிப்ரவரி 19ம் தேதி நடக்கயிருக்கும் சினாட் அங்கத்தினர்களின் முக்கியமான கூடுகையில் கடந்த காலத்தில் CSI முழுவதிலும் உண்டான அவமானங்கள், பணக்கொள்ளைகள், சபை நிலங்கள் விற்கப்படுதல் இவைகளைக்குறித்தும், கடந்த காலங்களில் பிஷப்மார்களையும், மாடரேட்டர்களையும் தெரிந்தெடுக்கும் விஷயத்தில் நடந்த பணவிளையாட்டைக் குறித்தும் நீங்கள் பேசவேண்டும். அதோடு சட்ட விரோதமான முறையிலும், குறுக்குவழியிலும் பிஷப்மார் & மாடரேட்டர்கள் தேர்தலில் தெரிந்தெடுக்காதபடிக்கு நியாயமான முறையிலும், CSI சட்டங்கள் மீறாத வகையிலும் இந்த தலைவர்கள் தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை குறித்தும் நீங்கள் எல்லாரும் பேசவேண்டும். பிஷப்மார்கள் கோடிகள் கொடுத்து தெரிந்தெடுக்கப்பட்ட மிக கேவலமான சாட்சிக்கெட்ட செயல்கள் மீண்டும் நம் CSIயில் அரங்கேறாதபடியிருக்க இப்போதுள்ள CSI சட்டங்களில் (Constitution) எந்தெந்த பகுதிகளை மாற்றி அமைக்கலாம் என்பதை குறித்தும் யோசித்து பேசி நிறைவேற்றுங்கள்.

  பிஷப்மார்களுக்கும், மாடரேட்டருக்கும் உள்ள வானளாவிய அதிகாரங்கள் எடுத்துப் போடப்பட வேண்டும். இவர்களில் சிலர் நடத்திய பணக்கொள்ளைகள் கண்டுபிடிக்கப்பட்டும் அவர்கள் தண்டிக்கப்பட முடியவில்லை. சில பிஷப்மார்கள் மூலமாக சபை அங்கத்தினர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள், அநியாயங்களைக்கூட தட்டிக்கேட்கவோ, தடைச்செய்யவோ, குற்றம் செய்த பிஷப்மார்களை தண்டிக்கவோ இயலாதபடி இந்திய நீதிமன்றங்கள்கூட கிறிஸ்தவர்கள் சிறுபான்மை இனமக்கள் என்ற ஒரே காரணத்தால் தண்டனை கொடுக்க தயங்குகின்றதை கண்கூடாக காண்கிறோம். ஆகவே நம் CSIயின் எந்த பிரச்சனைகளும், நீதிமன்றத்துக்குபோகாமல் நம்மை நாமே நியாயம் தீர்க்கும் வகையில் சட்டவடிவமைக்க நீங்கள் அனைவரும் சேர்ந்து இந்த சினாட் கூட்டத்தில் முடிவெடுங்கள்.

  நடக்கபோகும் CSI சினாட் Amendments விவரங்களை நான் வாசித்தேன். இப்போதுள்ள CSI சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சீர்செய்ய புதிய திட்டங்கள் எதுவும் இந்த Amendmentsல் இல்லாதிருப்பதால் அனைத்து CSI சபைகளும், உலகமக்கள்முன், நம் நாட்டுமக்கள்முன் மறுபடியும் அவமானப்பட்டு, கர்த்தரின் நாமம் மேலும் தூஷிக்கப்படுமோ என்று கவலைப்படுகிறேன்.

  இதை வாசிக்கும் CSI சினாட் மெம்பர்கள் அனைவரும் இதைக் கர்த்தர் கொடுக்கும் ஒரு எச்சரிப்பாக இந்த கடிதத்தை வாசித்து உணரவேண்டும். இப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த கொஞ்சகால சினாட் மெம்பர் பதவி கர்த்தரால் அனுமதித்ததாகும் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் வகிக்கும் சினாட் அங்கத்தினர் என்றப்பெயர் பதவி அல்ல அது ஊழியம் ஆகும். முழு CSIயையும் ஆவிக்குரிய விதத்தில் உயர வைக்கவும் உங்களால் முடியும், தரைமட்டும் தாழ்த்திப்போடவும் உங்களால் முடியும். கர்த்தர் உங்களிடம் நிச்சயம் கணக்கு கேட்பார், சும்மா கூட்டம் கூடி, பிரியாணி சாப்பிட்டு திரும்பும் உல்லாச பிரயாணம் அல்ல இது! என்பதை நீங்கள் உணரவேண்டும்.

  உங்களை சினாட் மெம்பராக இந்த பீரியட்டில் கர்த்தர் அனுமதித்ததற்கு இக்கூட்டத்தில் இதுவரை என்ன செயலாற்றினீர்கள்? சினாட் எடுத்த தவறான தீர்மானங்களுக்கு கைதூக்கி, இயற்றப்படும் தவறான சட்டத்துக்கு நீங்கள் துணைப்போவீர்களேயானால் அல்லது தவறான தலைவர்களை அவர்களின் தவறான வாழ்க்கையை நீங்கள் அறிந்தும், மாடரேட்டர் பதவிக்கு, பிஷப் பதவிக்கு அவர்கள் தெரிந்தெடுக்கப்பட நீங்கள் துணைப்போனால், கர்த்தரின் தண்டனை நிச்சயம் உங்கள்மேல் வரும். ஆகவே சினாட் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் முன்பதாக அவரவர்களுடைய சபையில் உள்ள ஆவிக்குரிய நல்லவர்களிடம் இவைகளை பகிர்ந்துக்கொண்டு சினாட்டில் பேசவேண்டிய விஷயத்தைக்குறித்து கலந்து ஆலோசித்து ஜெபத்தோடு சினாட் கூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள். நம் CSIயில் காணப்படும் தவறுகளை சினாட் கூட்டத்தில் தட்டிக்கேட்க தைரியப்படுங்கள். தவறுகளை சுட்டிக்காட்டவும் தைரியப்படுங்கள். அதற்காகத்தான் சபைமக்கள் சார்பில், சபைகளின் பிரதிநிதியாக, சபை மக்களின் வாயாக CSI சபைகளின் சார்பில் நீங்கள் சினாட் கூட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளீர்கள் என்பதை மறக்கவேண்டாம். இதுவரை உங்கள் சார்பாக இதற்குமுன் நடந்த சினாட் கூட்டத்தில் என்ன பேசினீர்கள்? என்று யோசித்துப்பாருங்கள். அவைகளைக்குறித்து அறிய சபை மக்கள் எதிர்ப்பார்ப்பார்களே! சினாட்டுக்கு போகும்முன் உங்கள் சபை ஜனங்களுக்கும் நீங்கள் போகும் விவரம் அறிவிக்கவேண்டும். சினாட் கூட்டம் முடிந்தபிறகும் அங்கு நடந்த விவரத்தை சபைமக்களுக்கு அறிவிக்க வேண்டும் இது முக்கியம். காரணம், இதன்மூலம் சபைமக்கள் உங்களுக்காக ஜெபிக்கமுடியும். நம் சபையில் என்ன நடக்கிறது என்றே பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அப்படியே சினாடில் என்ன நடக்கிறது? எதற்காக இந்த சினாட் கூட்டம்? என்றே அறியாத சபைமக்கள் எப்படி சினாட் அங்கத்தினருக்காக அவர்கள் எடுக்கும் தீர்மானங்களுக்காக ஜெபிக்கமுடியும்? பிஷப்புக்காக, மாடரேட்டருக்காக சபை மக்கள் ஜெபிக்கவேண்டுமானால் அங்குள்ள நிலவரங்களை குறித்து அறிந்தால்தானே முடியும். ஆகவே சினாட் மெம்பர்கள் போய்வந்த விவரங்களை சபையரிடம் அறிவிக்கவேண்டும்.

  இந்திய பார்லிமெண்ட்டுக்குப்போன MPமார்களில் இதுவரை ஒரு கேள்வியும் கேட்காதவர் என்று ஒரு பட்டியல் சமீபத்தில் பத்திரிக்கையில் வெளிவந்தது. அதுபோல் உங்கள் பெயர் அப்படிப்பட்ட பட்டியலில் இடம்பெறாதபடி சினாட் கூட்டத்தில் நியாயமானதை பேசுங்கள். அனைத்து CSI சபைகளின் சொத்துக்கள் காப்பாற்றப்பட, மக்கள் கர்த்தருக்கென்றுபோடும் காணிக்கைகள், சில பிஷப்மார்களால் வேறு பல காரணங்கள் காட்டி கொள்ளையடிக்கப்படாமலிருக்கவும், தவறு செய்த பிஷப்மார் பதவிநீக்கம் செய்யப்படவும் அல்லது தண்டிக்கப்படவும் அதற்கான நல்ல சட்டம் இயற்ற, இந்த சினாட் கூட்டத்தை பயன்படுத்துங்கள். மறுபடியும் கூறுகிறேன். கர்த்தர் உங்களிடம் CSI சினாட்ப்பற்றி கணக்கு கேட்பார். சபை ஜனங்கள் அறியாமல் அல்லது சபை மக்கள் அனுமதிக்காமல் எந்த ஒரு பிஷப்பும், கமிட்டியும் சபையிலுள்ள நிலம், மரம் எதையும் விற்ககூடாது என்பதை சினாட் கூட்டத்தில் அறிவியுங்கள்.

  நான் விசாரித்தவரை பெரும்பாலான CSI சினாட் மெம்பர்களுக்கு சினாடில் அங்கத்தினர் மொத்தம் எத்தனைப்பேர் என்பதே தெரியவில்லை. மற்ற சினாட் மெம்பர்கள் விலாசங்களும் இவர்களுக்கு தெரியவில்லை. ஆகவே 22 டையோசிஸ் CSI சபை அங்கத்தினர்களுக்கும், சினாட் மெம்பர்களின் விலாசங்கள் அறிவிக்கப்படவேண்டும் அல்லது பிரிண்ட் செய்து கொடுக்கப்படவேண்டும். CSI சினாட் வெளியிடும் மாதபத்திரிக்கையில் சினாட் மெம்பர்கள் எல்லாருடைய விலாசங்களும் வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் சபை மக்கள் சினாட் மெம்பர் மூலமாக தங்கள் குறைகளை அறிவிக்கமுடியும். இந்த விவரத்தை சினாட் கூட்டத்தில் இந்தமுறை நீங்கள் அறிவியுங்கள். மேலும் இந்த கூட்டத்திலேயே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் சினாட் அங்கத்தினர் விலாசம் கிடைக்கும்படி சினாட்டில் விலாசங்களை கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். இது மிக முக்கியம். இதுவரை சினாட் மெம்பர்களின் விலாசங்களை இரகசியமாகவே வைத்துள்ளார்கள். இந்த நிலை மாறவேண்டும்.


பிஷப் அல்லது மாடரேட்டர்

  மேலே குறிப்பிட்ட பொருப்புக்கு அல்லது பதவிக்கு தெரிந்தெடுக்கப்படுபவரின் தகுதியை சினாட் மெம்பர்களாகிய நீங்கள் முதலில் அறியவேண்டும்.

  (பிஷப்மார்) முன்னதாக சோதிக்கப்படவேண்டும். 1தீமோ 3:10. (அவர்) குற்றஞ்சாட்டப்படாதவனும்...... துன்மார்கரென்று... குற்றஞ்சாட்டப்படாதவனும்... தன் இஷ்டப்படி செய்யாதவனும்... முற்கோபமில்லாதவனும்.... மதுபானபிரியமில்லாதவனும்... இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்.... ஆரோக்கியமான உபதேசத்திலே புத்திசொல்கிறவனு...(தீத்து 1:6-9, 1 தீமோ 3:2-10)மாக இருக்கவேண்டும். இதுதான் வேதபுத்தகம் பிஷப் பதவிக்கு தெரிந்தெடுக்கப்பட எழுதப்பட்ட தகுதியாகும். மேலே குறிப்பிட்ட வசனத்தை ஒருமுறை வாசித்து செயல்படுங்கள்.

  நான் கடந்த வருடம் சென்றுவந்த (கர்நாடகா, ஆந்திரா, கேரளம், தமிழ்நாடு) ஆகிய அனைத்து CSI சபை மக்களும் என்னிடம் கூறியதாவது: சுனாமி பெயரில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிகள், கொள்ளையடித்தவர்களிடமிருந்து திரும்பபெற்று சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிடமே கொண்டுப்போய் சேர்க்கவேண்டும். பல பொய்யான காரணங்களின் பெயரில் திருமண்டலங்களிலிருந்து எடுக்கப்பட்ட பணம் எடுத்தவர்களிடமிருந்து திரும்பபெறவேண்டும்.

  சுனாமி பெயரில் வாங்கப்பட்ட பணம் சுனாமிக்கு சம்பந்தமில்லாத வேறு காரியங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது என்பது ஆதாரத்துடன் அறியப்படுகிறது. அதை சினாட் கமிட்டி ஒரு குழுவை நியமித்து அவர்கள் நேரில் சென்று, கண்டு ஆராய்ந்து சினாட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்து, அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  ஒவ்வொரு திருமண்டலங்களிலும் நடந்த எலக்ஷனில் சபை மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டு பிஷப் பேனலில் வந்தவர்களில் ஒருவரை பிஷப்பாக 22 டையோசிஸ் பிஷப்மார்கள்மட்டும் தெரிந்தெடுக்க வேண்டும். இப்படி செய்தால் ஒருவேளை பண விளையாட்டுக்கு இடம் உண்டாகாது என்று நினைக்கிறேன். இது என் சொந்த கருத்து. வேறு சிலரும் இக்கருத்தை கூறியிருக்கிறார்கள்.

  CSIக்கு புதிய சட்டம் உருவாக்க திட்டமிருந்தால், பல வருடங்களுக்குமுன் உருவாக்கப்பட்ட பால் கமிஷன்மூலம் அளித்த பரிந்துரைகளில் முக்கியமானவற்றை புதிய சட்டத்தில் இணைத்து செயல்படுத்தவேண்டும். நான் எழுதியது அதிக பிரசங்கம் என்று நீங்கள் கருதினால் இக்கடிதத்தை கிழித்தெரிந்துவிடுங்கள். இதில் நியாயம் உண்டு என்று நீங்கள் கருதினால் நீங்கள் குழுவாக ஜெபித்து நல்லவற்றை CSI திருமண்டலங்களில் செயல்படுத்த சினாட் கூட்டத்தில் பேசி முயற்சி எடுங்கள். இக்கடிதத்தை நீங்கள் பொறுமையாக வாசித்ததற்கு நன்றி.

இப்படிக்கு
கர்த்தரின் பணியில்
(டாக்டர்.புஷ்பராஜ்)

NOTE: (PLEASE FORWARD THIS LETTER TO ALL SYNOD MEMBERS).

முன் பக்கத்தில் வாசித்த கடிதத்தில் ஒரு சில ஆலோசனைகளைமட்டுமே CSI சினாட் மெம்பர்களுக்கு எழுதினேன்.

இந்த சமயத்தில் CSI சபை அனைத்து அங்கத்தினர்களுக்கும் சில விஷயங்களைக்கூற விரும்புகிறேன். பல சபைகளாக சிதறியிருந்த சபைகளை ஒன்றாக்கி 1947ம் வருடம் CSI என்று ஒரு ஐக்கிய சபையை ஒரே தலைமையின்கீழ் ஒரே பெயரில் அழைக்கும் வகையில் CSI (Church of South India) என்ற சபையை உருவாக்கி அதற்கான சட்ட திட்டங்களையும் Constitutionயும் 1982ம் ஆண்டில் உருவாக்கினார்கள். பொதுக்குழு கூடி இந்த சட்டங்களை ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டது.

  அதன்பிறகு பிஷப்மார்கள் தங்கள் அதிகாரங்களை அதிகமாக்கிக்கொள்ள, 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுக்குழுவுக்கு தெரியாமல் நிர்வாக கமிட்டியில் உள்ள சிலர் சில புதிய சட்டங்களை உருவாக்கி பிஷப்மார்களின் எல்லை கடந்த அதிகாரத்திற்கு ஒத்துழைத்து பெரிய தவறை CSIக்கு இழைத்துவிட்டனர். இது எப்படி நடந்தது? எப்போது நடந்தது என்பது பலருக்கு தெரியாமல் இரகசியமாகவே பல வருடங்கள் கடந்துப்போனது. பிஷப்மார்களின் அதிகாரம் எல்லை கடந்ததாக இருந்ததாலும் ஒரு சில விஷயங்களில் நன்மை ஏற்பட்டதால் அந்த ஆரம்பகாலங்களில் CSIக்கு பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. ஆனால் சில டையோசிஸ்களில் சில பிஷப்மார் டையோசிஸ் பணத்தை கொள்ளையடித்து, சபை நிலத்தை களவாய் விற்கும் எண்ணமுள்ள பிஷப்மார்கள், மனந்திரும்புதலின் அனுபவம் இல்லாதவர்களாயும், தேவ பயமில்லாத பிஷப்மார்களாயும் இருந்ததால் இப்படிப்பட்ட வானளாவிய அதிகாரத்தை தவறாக உபயோகப்படுத்தி இவர்கள் தங்களுக்கு சாதகமாக இந்த சட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த சூழ்நிலையில்தான் நம் CSI முழுவதிலும் உள்ள ஒருசில பேராயங்களில் மிகப்பெரிய கெட்டபெயரும், அவமானமும் உண்டாகியது. இப்படிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க சினாட் கோர்ட் என்ற பெயரில் ஒரு நீதிமன்றம் உண்டு. அந்த கோர்ட்டின் அமைப்பென்ன? அந்த கோர்ட்டில் யார்? யார்? பொறுப்பு வகிக்கிறார்கள் என்பதைப்பற்றி சபையின் நிர்வாக அங்கத்தினர், சினாட் அங்கத்தினரில் பெரும்பாலோர் அதைக்குறித்து ஒன்றும் அறியவில்லை. ஒவ்வொருமுறை சினாட் கோர்ட் விசாரணை குழுவின் அங்கத்தினர்கள் மாறும்போது அவர்கள் பெயர் CSI சபை மக்களுக்கு அறிவிக்கப்படவேண்டுமே! ஆனால் சினாட் அதை அறிவிப்பதில்லை! பிஷப்மார்கள்மட்டுமே அதை அறிந்திருந்தார்கள். அது அறியப்படாத இரகசியமாகவே இன்றுவரை இருக்கிறது.

  டையோசிஸ்ஸிலும் ஒரு கோர்ட் உண்டு. அதில் பெரும்பாலும் பிஷப்மார்களுக்கு சாதகமானவர்களைத்தான் அந்த குழுவில் நியமிப்பார்கள். ஆகவே சபைமக்கள் தங்கள் பிரச்சனைகளை டையோசிஸ் கோர்ட்டுக்கு கொண்டுப்போனால் அங்கத்தினர்களுக்கு அங்கு நியாயம் கிடைப்பதில்லை. ஆகவே புறமதத்தை சேர்ந்தவர் அமர்ந்திருக்கும் நீதிமன்றம் நோக்கி இவர்கள் செல்ல வேண்டியுள்ளது. கிறிஸ்தவர்கள் நீதிமன்றம் போகக்கூடாது என்று பிரசங்கித்தாலும் நீதி கிடைக்காததால்தானே இவர்கள் நீதிமன்றம் போகிறார்கள்! நமக்குள்ளேயே பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று வேத புத்தகம் திட்டவட்டமாக போதிக்கிறது என்றாலும் சபையில் அல்லது டையோசிஸ்ஸில் உள்ள சிலரின் கூட்டுசதி மூலமாக சபையிலுள்ள பலர் பழிவாங்கப்படும்போது அல்லது நியாயம் கிடைக்காதபோது நீதிமன்றத்தின்படி ஏறித்தானேயாகவேண்டும்! மனம் திரும்புதலின் அனுபவம் உள்ளவர்களாக இருந்தால் வேறு வழி உண்டு. அவர்கள் சபையைவிட்டு போய்விடவேண்டும். அதாவது வேறு சபைக்கு செல்ல வேண்டும். இப்படி நம் CSI சபையைவிட்டு வேறு சபைக்குப்போனவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரம் பேர்கள் என்று கணக்கிடலாம். இப்படிப்பட்ட பிரச்சனைகள் சபையில் ஏற்படும்போது நமது CSI சட்ட புத்தகத்தில் 3 வழிகள் உண்டு. 1. சபையில் மூப்பர்கள் (கேரளத்தில் வார்டன் அல்லது டிக்கனர் என்று அழைக்கப்படுகிறார்கள்) மூலமாக பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும். 2. டையோசிஸ்ஸிலேயே கோர்ட் உண்டு அதன் மூலம் தீர்க்கப்படவேண்டும். 3. சினாட் தலைவர் மாடரேட்டர் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும். அவர்கள் அந்த விவகாரத்தை சினாட் கோர்ட்டுக்கு கொண்டுபோவார். இப்போது நான் குறிப்பிட்ட இந்த ஒழுங்கெல்லாம் சரிதான். ஆனால் பழிவாங்கும் நோக்கத்தோடு சபை ஆயர் முதல் பிஷப் வரை சபை அங்கத்தினருக்கு எதிராக செயல்படும்போது சினாட் கோர்ட் என்ன செய்யும்? பிஷப்பும் - மாடரேட்டரும் இணைந்து ஒரு முடிவுக்கு வந்தால் சினாட் கோர்ட்டுக்கு போனாலும் இவர்கள் பழிவாங்கும் முடிவுதான் அங்கு தீர்ப்பாக அறிவிக்கப்படும். இதன்மூலம் பல ஆயர்கள்கூட பாதிக்கப்பட்டுள்ளார்கள். சபை அங்கத்தினர்கள் பலர் பழிவாங்கப்பட்டுள்ளார்கள். ஆனால் பிஷப்மார்கள் தவறு செய்தால்மட்டும் தீர்ப்பு வழங்க, யாரும் இல்லை! இது என்ன நியாயமோ?


CSI யின் இன்றைய நிலை

CSIயின் 22 டையோசிஸ்களில் பல டையோசிஸ்களில் உள்ள பிஷப்மார்கள்மேல் இதுவரை கேள்விப்படாத புதிய பல குற்றச்சாட்டுகள் கூடிக்கொண்டேபோகிறது. எனக்கு தெரிந்து கடந்த 70 ஆண்டுகளில் நான் குழந்தையாக வளர்ந்து இன்றைய வயதுவரை என் அனுபவத்தில் அன்றைய நாட்களில் பிஷப்மார்களை நேரில் பார்ப்பது ஒரு பாக்கியம்போல கருதப்பட்டது என்பதை அறிவேன். அவர்கள் கைகளை நாம் தொட்டால் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று கத்தோலிக்க சபையினர் கருதுவதுபோல CSI, லூத்தரன், மார்த்தோமா போன்ற சபைகளில் உள்ள மக்களும் பிஷப்மார்களை அந்த அளவு மதித்தார்கள். ஆனால் இப்போதோ சில பிஷப்மார்கள் நம் தலையில் கை வைத்தால் அவர்கள்மேல் உள்ள பண ஆசைகளின் ஆவி, காம செயல்களின் ஆவி, தீய சக்திகள் நம்மேல் இறங்கிவிடுமோ என்று பயந்ததாக அறிவித்த கிறிஸ்தவர்கள் உண்டு.

  கேரளாவில் மார்தோமா பிஷப்மார்களில் ஒருவரைப்பற்றி இதே குற்றச்சாட்டில் அந்த சபை மக்களே துண்டுபிரதிகள் அச்சடித்து வெளியிட்ட நிகழ்ச்சிகள் உண்டு. இவர்களின் பிஷப் ஒரு சபையில் ஆராதனை நடத்தினால் ஆராதனை நடத்தி முடித்தபின் பிஷப் அவர்கள் ஆல்டர்முன் நாற்காலியில் வந்து உட்காருவார். அப்போது சபை மக்கள் வரிசையில் நின்று ஒவ்வொருவராக பிஷப்பின் கையை முத்தம் செய்யவேண்டும். இதற்கு மலையாளத்தில் கைமுத்தம் என்பார்கள். இப்போது இவர்களின் கேள்வி என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட பிஷப்பற்றி பாவமான செய்கைகளை தொடர்ந்து கேள்விப்படுகிறோம். பல இடங்களில் அவரைப்பற்றி குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. இப்படிப்பட்ட பாவசெயல்கள் செய்யும் இப்படிப்பட்ட பிஷப்மார்களின் கையை சபைமக்களாகிய நாங்கள் முத்தம் செய்யலாமா? இந்த கை முத்தத்தில் என்ன ஆசீர்வாதம் கிடைக்கிறது என்பதுதான் எங்கள் கேள்வி? என்றார்கள். இப்பிரச்சனை பெரிதாக உருவெடுத்தது. முடிவில் இதே சபையிலுள்ள சில நல்ல பிஷப்மார்கள்கூட அநேக இடங்களில் ஆராதனை முடிந்தவுடன் தாங்கள் நடத்தும் கைமுத்தம் சடங்கு இனிவேண்டாம் என்று அறிவித்து விடுகின்றனர். இப்படிப்பட்ட சில மாற்றங்கள்மட்டும் அந்த குறிப்பிட்ட சபைகளில் உண்டாகிறதே தவிர, இந்த சபையிலும் குற்றம் செய்த பிஷப்மார் தண்டிக்கப்படுவதில்லை. அதோடு நிறுத்திக்கொண்டாலும் பரவாயில்லை. பரிசுத்தமில்லாத குற்றச்சாட்டுக்கு உட்பட்ட குறிப்பிட்ட பிஷப் தற்போது தலைமை பதவி பெற்றுவிட்டார் என்பதுதான் எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது. மண்டலம் என்று அவர்களால் அழைக்கப்படும் (சினாட் கூடுகை) பொதுகுழுகூட இவரின் பதவி உயர்வுக்கு சம்மதம் தெரித்துள்ளது. உண்மையில் குறிப்பிட்ட அந்த சபைகளில் பெரும்பாலான மக்கள் இவரின் பதவி உயர்வை வெறுத்தனர். அந்த வெறுப்பை இவர்கள் மண்டலத்தில் காட்ட இயலவில்லை. ஆயர்களின் ஆதரவு அந்த குறிப்பிட்ட பிஷப்புக்கு மிக அதிகம் உண்டு. ஆயர்களின் ஆதரவை இவர் எப்படி இந்தளவு பெற்றார் என்று தெரியவில்லை. ஆகவே அந்த சபைமக்களாலும் அந்த குறிப்பிட்ட பிஷப்பின் பதவி உயர்வை தடுக்கமுடியவில்லை. அதைப்போன்றுதான் CSI, லூத்தரன் சபைகளிலும் இன்றைய தினத்தில் பல அட்டூழியங்களும், பாவங்களும், சர்வாதிகாரமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

  பிஷப்.அசரியா போன்று இன்னும் பல பிஷப்மார் அந்த காலத்தில் சபை மக்களிடத்தில் நல்மதிப்பை பெற்றதைப்போன்று இன்றைய பிஷப்மார்களில் சபை மக்களால் நன்மதிப்பை பெற்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

  கடந்த சுமார் 20 வருடங்களில் வாழ்ந்த CSI, லூத்தரன் பிஷப்மார்களில் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானவர்கள் பலவித குற்றச்சாட்டுகளில் அகப்பட்டவர்களாக அறியப்படுகிறார்கள். குறிப்பாக பெண்கள் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு பல வார பத்திரிக்கைகளிலும், தினசரி பத்திரிக்கைகளிலும் புகைப்படத்தோடு மோசமான செய்திகள் சில பிஷப்மார்களைப்பற்றி வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளில் பிஷப்மாருக்கு பாவம் செய்ய ஒத்துழைப்பு தந்தவர்கள் பெரும்பாலானவர்கள் (பெண்) ஆசிரியைகளாகவும், சில பெண் ஆயர்களாகவும், ஹாஸ்டல் வார்டன்களாகவும் ஆஸ்பத்திரியில் வேலை செய்பவர்களாகவும் குறிக்கப்பட்டுள்ளது வேதனைக்குரிய விஷயமாகிறது.

  மத்திய அரசாங்கத்தில் ஊழல் செய்த மந்திரிகளுக்கு கோடிகளுக்கு எத்தனை பூஜ்ஜியம் போடவேண்டும் என்றுகூட அறியாமல் திணருகிற அளவு, கோடிகள் விழுங்கும் மலைவிழுங்கிகள் இன்று CSIயிலும் காணப்படுவது கேவலமாக இருக்கிறது. ஒரே நாளில் கொள்ளையடித்த பல கோடிகளை ஒட்டுமொத்தமாக பேங்கில் போட்டால் ஆடிட்டர்கள், வருமானவரி இலாக்காவினர் கண்டுபிடிப்பார்களே என்றுகூட திருடிய வேகத்தில் இவர்கள் மறந்துபோனார்கள். இவை யாவும் CSIயில் சினாடில் கொள்ளையடித்த பணம் ஆகும். இவர்கள் திருடத்தெரியாமல் திருடியவர்கள் ஆவர். அதனால்தான் இவர்கள் இன்று அகப்பட்டு சிலர் ஜெயிலுக்குள் இரண்டுமுறை போய்வந்தார்கள், சிலர் மாதக்கணக்கில் கோர்ட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் தினசரி காலை ஆராதனைக்கு போவதுபோல் போய்வருகிறார்கள். சில பிஷப்மார் அங்கியுடன் போய்வருவதையும், சில பிஷப்மார் வெறும் சிலுவைமட்டும் கழுத்தில் மாட்டி அவமான சின்னமாய் போய்வருகிறார்கள் என்பதையும் செய்திதாள்களில் காணும்போது கர்த்தர் என்ன நினைப்பார்? இப்போது கேள்வி என்ன? இப்படிப்பட்ட பிஷப்மார்களுக்கு CSI சட்டத்தில் என்ன தண்டனை? என்ன நடவடிக்கை என்பதைப்பற்றி ஏதாவது எழுதியிருக்கிறதா?

Most Rt.Rev.
S.VASANTHAKUMAR

  ஒரு பிஷப் மாதக்கணக்கில் வருடாந்திர விடுமுறை ஓய்வில் இருப்பதைப்போல் நகர்வலம் வந்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாக திருமண்டலத்தில் எந்த வேலையும் நடைபெறாமல் ஸ்தம்பித்து கிடக்கிறது. இது எவ்வளவு மாதங்கள் நீண்டுபோகவேண்டும். இதற்கு ஒரு கணக்கு வரைமுறை ஒன்றும் இல்லையா?   சபை குருமார்கள், சபைமக்கள் சினாடிலுள்ள மாடரேட்டருக்கு இதைக்குறித்து எழுதினால் மாடரேட்டர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார். எல்லாரும் மிகவும் வற்புறுத்த தொடங்கியபோது மாடரேட்டர் ஒரு புது நடவடிக்கை எடுக்க முனைந்தார். அதை அறிந்தவுடன் கோடிகளில் அகப்பட்ட அந்த பிஷப் சில ஆயர்களை சென்னைக்கு அழைத்துச்சென்று மாடரேட்டர் அலுவலகத்தைச் சுற்றி தர்ணா போராட்டம் செய்ய மாடரேட்டர் பயந்து பிஷப் மீது எடுக்க இருந்த நடவடிக்கையை கைவிட்டார். இதன் மையக்காரணம் நடவடிக்கை எடுக்கவேண்டிய மாடரேட்டர் அவர்களும் சுமார் 18 வழக்குகளில் அகப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. பல கோடிகள் திருமண்டலத்திற்கு சேரவேண்டிய பணத்தை தன் பெயரிலும், தன் மனைவி பெயரிலும் பேங்கில் சேர்க்க ஏற்பாடு செய்த கேஸ்ஸில் ஆதாரத்துடன் கையும் களவுமாக பிடிப்பட்டார் என்று கேள்விப்படும்போது நம் CSIயின் இப்போதுள்ளநிலை காண சகிக்கவில்லையே!

  போலீஸ் விலங்கோடு இவரை கைது செய்ய வந்தபோது பெங்களுர் CSI ஆஸ்பத்திரியில் ICU வார்டில் போய் படுத்துக்கொண்டார். இந்த சூழ்நிலையில் மத்திய கேரளா டையோசிஸ் பிஷப் எலக்ஷனில் தெரிந்தெடுக்கப்பட்டு பேனலில் வந்தவர்கள், தேர்ந்தெடுத்த முறைகளில் உள்ள குளறுபடிகளை விசாரிக்க சினாட் கோர்ட் அமைக்கப்பட்டது. அதற்கு தலைமை தாங்க மாடரேட்டர் ICU வார்டிலிருந்து வருவாரா என்று கேரளாவில் கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு வழியாக மாடரேட்டருக்கு ஜாமீன் கிடைத்தது. இப்படி எத்தனை வழக்குகள், எத்தனை ஜாமீன்கள், இப்படிப்பட்டவர் குற்றம் செய்த மற்ற பிஷப்மார்களை எப்படி நியாயம் விசாரிக்கமுடியும். நியாயாசனத்தில் உட்கார இவருக்கு என்ன தகுதியுண்டு. நம் CSIயில் மிகப்பெரிய தலைமையே இப்படியானால் யார் நம் CSIயை இவர்களிடமிருந்து காப்பாற்றமுடியும். இவர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கலாம்.

  தீர்ப்பு வந்தால்தான் ஒருவர் குற்றவாளி என்று முடிவு செய்யலாம் என்று தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர்.மு.கருணாநிதி அவர்கள் அடிக்கடி கூறுவதுபோல கிறிஸ்தவ சபைகளில் கூறக்கூடாதே!

  ஆவிக்குரிய வைராக்கியம் ரோஷமுள்ளவர் உடனே பதவியிலிருந்து இறங்கவேண்டாமா? பத்திரிக்கையில் தன்னைப்பற்றி வந்த பிழையான செய்தியை அறிந்த குறிப்பிட்ட மந்திரி ஒருவரும், கவர்னர் ஒருவரும் செய்தியை வாசித்தவுடன் தன் பதவியை ராஜினாமா செய்தாரே அவர்கள் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். அது வெளிநாட்டு நாகரீகம். இந்த மாடரேட்டர் இப்படிப்பட்ட கோடிகள் விழுங்கிய பிஷப்மார்களை எப்படி பதவி இறக்கம் செய்யப்போகிறார்? அதற்கு வழி என்ன? அதைத்தான் 2011 பிப்ரவரி மாதம் 19ம்தேதி சினாட் கூட்டத்தில் சினாட் மெம்பர்கள் கேள்வி எழுப்பவேண்டும், அதற்கு வழி கண்டுபிடிக்கவேண்டும் என்று கடிதம் எழுதி கேட்டுக்கொண்டேன்.


அனைத்து CSI டையோசிஸ்களுக்கும்,
சினாட்டுக்கும் வரபோகும் ஆபத்து:

  மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் CSI சபைகளில் நீண்டுகொண்டேபோனால் CSI சபை ஒன்றுமில்லாமல் போகும். அரசாங்கம் தானே முன்வந்து CSI சபை நிர்வாகத்தை பொறுப்பெடுக்கும் நிலை வரும். ஜாக்கிரதை! அந்த ஆபத்து இப்போதே வருமானவரி துறை அலுவலகத்திலிருந்து கேள்வி ரூபத்தில் கடிதமாக சினாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் விவரத்தை இந்த கட்டுரையை தொடர்ந்து வாசிக்கும்போது அறியலாம்.

  ஒருவர் பிஷப்மேல் வழக்கு தொடர்ந்தார் என்ற காரணத்தால் அவரை சபையைவிட்டு சபை நீக்கம்(Excommunicate) செய்யப்பட்டார். அது செல்லாது என்று கூறி சபை நீக்கம் செய்த பிஷப்புக்கு 1 லட்சம் அபராதம் நீதிபதியால் விதிக்கப்பட்டதை தினசரி செய்திதாள்களில் வாசித்திருப்பீர்கள். ஜாமக்காரனிலும் அதன் விவரம் வெளியிட்டேன். ஆனால் மாடரேட்டர்மேல் ஒரு பிஷப் வழக்கு தொடுத்தாரே அவர்மேல் என்ன நடவடிக்கை? பிஷப் அவர்கள் சபை நீக்கம் (Excommunicate) பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? இல்லையே! என்ன நியாயம் இது!


நல்ல முன்மாதிரியான பிஷப்
Pr.K.P.Yohannan

  திரு.கே.பி.யோகன்னன் என்பவர் ஒரு பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர். பலரால் நல்ல விதத்தில் அறியப்பட்ட, நல்ல பேச்சாளர் ஆவார். பாஸ்டர் என்ற பட்டமும் அவருக்கு அவரே வைத்துக்கொண்டதுதான் என்று கூறப்படுகிறது. ஆகவே மலையாள செய்திதாள் அவரை ஐமேனி என்று வர்ணித்தது. அதாவது Laity சாதாரண பெந்தேகோஸ்தே சபை விசுவாசி என்று அர்த்தமாகும். அப்படிப்பட்டவரை CSIயை சேர்ந்த 5 பிஷப்மார், CSI மாடரேட்டர் உட்பட ஒன்று சேர்ந்து கைகளை வைத்து அவரை பிஷப்பாக அபிஷேகம் செய்துவைத்தார்களே! இது எந்த CSI சட்டத்தில் எழுதப்பட்ட ஏற்பாடு? நண்பரை சந்திக்கும் நோக்கத்தில் அந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரை சந்தித்தேன் என்பது CSI மாடரேட்டரின் பதிலாகும். நண்பரை சந்திக்கபோனவருக்கு மாடரேட்டருக்குள்ள அதிகார செங்கோல் கையில் எதற்கு? அதை கையில் வைத்து ஏன் அந்த அபிஷேக ஆராதனையை நடத்த வேண்டும்? உலக மக்கள், நாட்டு மக்கள் அத்தனைபேரும் பார்க்க நடந்த இந்த கூத்தில் தன் தவறை மறைக்க CSI மாடரேட்டர் பெரிய பொய் சொன்னார். இப்படிப்பட்ட சினாட் CSI மாடரேட்டர்மேலும் மற்ற CSI பிஷப்மார் மேலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால், இப்போது குற்றவாளி கூண்டில் CSI மாடரேட்டர் நிற்கிறார். மாடரேட்டர் குற்றவாளியானால் மாடரேட்டர் ஸ்தானத்தில் உதவி மாடரேட்டர் அமர்ந்து தீர்ப்பு கூறவேண்டும் என்பது இது CSI சட்டம். ஆனால் அந்த பழைய மாடரேட்டர்மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே! ஏன்?

R.Rev.George Isaac

  இப்போதுதான் ஒரு அதிசயம் நடந்தது. ரோஷமுள்ள, வைராக்கியமுள்ள, உண்மையுள்ள ஒரு பிஷப் Rt.Rev.GEORGE ISAAC என்பவர் வடக்கு கேரளா டையோசிஸ்ஸில் பிஷப்பாக இருந்தார். அவர் இந்த குறிப்பிட்ட மாடரேட்டர் செய்த பெரும் தவறை சுட்டிக்காட்டி மாடரேட்டர் மேலும் மற்ற பிஷப்மார் மேலும், CSI சினாட் நடவடிக்கை எடுக்காததால் தன் பிஷப் பதவியை அவர் ராஜினாமா செய்து இந்தியா முழுமைக்கும்! ஏன்? உலக கிறிஸ்தவ சமுதாயத்துக்கே முன்மாதிரியானார். லஞ்சம் கொடுத்து பிஷப் பதவியை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் அன்றைய CSIயில் இந்த குறிப்பிட்ட பிஷப் அவர்கள் பணம் கொடுக்காமல், சிபாரிசு ஏதும் இல்லாமல் பிஷப்பானவர் ஆகும். பிஷப் பதவி தானாக இவரைத் தேடிவந்தது. அவருக்கு குற்ற உணர்ச்சி ஏதும் இல்லை அதனால்தான் அவருக்கு அந்த தைரியம் வந்தது. சினாட் அவர் ராஜினாமாவை ஏற்காததாலும், மக்கள் ராஜினாமா செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாலும் மறுபடியும் அவர் பிஷப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இரண்டாவது நிகழ்ச்சி: வடக்கு கேரளா CSI டையோசிஸ்ஸில் பொருளாளர் பதவியில் இருந்த ஒரு ஆயரின் ஆதிக்கம் மிக அதிகமாகிப்போனதால் அதே பிஷப் அவர்கள் அந்த ஆயரை நீக்கமுடியாமல் போனது. சினாடும் அந்த ஆயராகிய டையோசிஸ் பொருளாளர்மீது நடவடிக்கை எதுவும் எடுக்காததால் அந்த பிஷப் Rt.Rev.GEORGE ISAAC அவர்கள் ஒரேடியாக முழு ராஜினாமாவை சமர்பித்து பிஷப் பதவியே வேண்டாம் என்று டையோசிஸ்ஸை விட்டு வெளியேறினார். வெளியேற வேறு சில காரணங்களும் உண்டு. அது வேறு விஷயம். பிஷப் பதவி ஏற்றபின் இவரும் என் ஜாமக்காரன் பத்திரிக்கையில் நான் எழுதிய சில விமர்சனத்தால் என்னை வெறுத்தவர்தான். அது அவரின் உரிமை. ஆனால் இந்த சம்பவத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புவது பிஷப் என்ற பதவியில் ஒருமுறை ஒருவர் இருந்துவிட்டால், அந்த பதவியை விட்டு இறங்கிவரமாட்டார்கள், பதவியை விடுவதற்கு மனமும் வராது! அவரை பதவி இறக்கம் செய்யவும் முடியாது! அவராக ராஜினாமா செய்தால்தான் உண்டு. அப்படி பிஷப் பதவியை ராஜினாமா செய்த அந்த சாட்சியுள்ள காரியத்தை செய்த முதல் பிஷப் என்ற பெயர் இவருக்குண்டு. இப்படியும் சில நல்ல சாட்சியுள்ள பிஷப்மார்கள் CSI யில் இருந்தார்களே!


மற்றொரு பிஷப்பின் சாட்சி:
Rt.Rev.Michael John

இவர் பெயர் Rt.Rev.மைக்கல் ஜான் என்பதாகும். மத்திய கேரளா CSI டையோசிஸ்ஸில் இணைந்திருந்த மலை பிராந்தியங்களை உள்ளடக்கிய இடுக்கி, மேலுகாவு, வண்டிப்பெரியார் போன்ற மேற்கு தொடர்ச்சிமலை பிராந்தியங்களில் உள்ள CSI சபைகளை தனியாக பிரித்து (East Kerala Diocese) கிழக்கு கேரளா டையோசிஸ் என்று பெயர் வைத்து, மத்திய கேரளா டையோசிஸிலிருந்து அது பிரிக்கப்பட்டு Rt.Rev.மைக்கல் ஜான் அவர்களை சினாட் பிஷப்பாக்கியது. இவரும் பணம் கொடுத்து(லஞ்சம் கொடுத்து) பிஷப் பதவியை வாங்கியவர் அல்ல. புதிய டையோசிஸ் உருவாகியவுடன் பிஷப் உட்கார அங்கு அலுவலகம் இல்லை, பிஷப் குடியிருக்க பிஷப் வீடும் இல்லை! சபைமக்கள் பெரும்பாலும் மலைவாழ் மக்களாவர். பெரும்பாலோர் தேயிலை தோட்டத்திலும், காட்டிலும் வேலை செய்பவர்கள். சபைகளில் காணிக்கை வரவு மிகக்குறைவு. இந்த சூழ்நிலையில் பிஷப் அவர்களுக்கு கர்த்தர் ஏற்கனவே நல்லபிரசங்கம் செய்யும் தாலந்தை கொடுத்திருந்தார். அந்த தாலந்தை கொண்டு வெளிதேசங்களுக்கு பிரசங்கிக்க செல்வார். அப்படி செல்லும் தேசமெல்லாம் தன் டையோசிஸ்ஸின் நிலைமையை எடுத்துக்கூறி அவரவர்கள் கொடுத்த காணிக்கைகளை கொண்டு வந்து பிஷப் ஆபீஸ் பணித்தார், அதன்பின் பிஷப் வீடு பணியப்பட்டது. இப்போது சகல வசதிகளும் பெற்ற டையோசிஸ்ஸாக அதை மாற்றினார். இவர் காலத்தில் பல புது ஆலயங்களை பணித்து வெற்றி கண்டார். தன் டையோசிஸ் மக்களை பிஷப் அவர்கள் அடிக்கடி சந்தித்து கர்த்தருக்கு கொடுப்பதால் உண்டாகும் ஆசீர்வாதத்தை அவர்களுக்கு விளக்கி பிரசங்கித்தார். இன்று கிழக்கு கேரளா CSI டையோசிஸ் சுயதேவைகளை தாங்களே பூர்த்தி செய்துகொள்ளுமளவு பிஷப் அவர்கள் அந்த அத்யட்சாதீனத்தை தன்னிறைவு பெற்றதாக்கிவிட்டார். இந்த சூழ்நிலையில் இவர் ரிட்டயர்ட் ஆகிவிட்டார். ஆனால் இப்போதும் இவர் தன் வீட்டில் ஆடம்பரம் ஏதும் இல்லாமல் வாழ்கிறார். ஊழியமும் செய்துகொண்டு பந்தா ஏதும் இல்லாத பிஷப்பாக எல்லாராலும் மதிக்கப்படுகிறார். தன் டையோசிஸ்க்காக பிச்சை எடுப்பதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து டையோசிஸ்ஸை இவர் உருவாக்கிய அவரின் கடினமான அனுபவ காலங்களை நான் அறிவேன். டையோசிஸ்க்காக பணசேகரிப்பு நடத்தியபோது கிடைத்த லட்சக்கணக்கான ரூபாயில் இவர் கைவைத்திருந்தால் ஓய்வு பெற்றபின் இன்று கோடீஸ்வரராக காட்சியளித்திருப்பார். இப்படியும் தியாகமுள்ள சில பிஷப்மார் நம் CSI சரித்திரத்தில் வாழ்ந்தார்கள். இன்றும் ஒன்று, இரண்டு பேர் அப்படியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

  அதேசமயம் தமிழ்நாட்டு பிஷப் ஒருவர் வெளிநாடுகளில் சென்று தன் திருமண்டல முன்னேற்றத்துக்காக என்று கூறி வசூல் செய்த பணத்தை தன் சொந்த பெயரில் பேங்க்கில் டிபாசிட் செய்துள்ளார். இவர் தன்னுடைய இரண்டு பெயர்களில் 3 வெவ்வேறு பேங்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்துள்ளார். இரண்டு பெயர்களில் ஒரு நபர் அக்கவுண்ட் ஓப்பன் செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த இரண்டு பெயர்களில்தான் இன்ஜினியரிங் காலேஜிலிருந்து கொள்ளையடித்த பெரும் பணத்தை ஒரு பேங்கிலும், பாலிடெக்னிக்கிலிருந்து மாணவ மாணவிகளின் பணத்தை கொள்ளையடித்ததை தன்னுடைய மற்றொரு பெயரில் உள்ள அக்கவுண்டிலும் டெபாசிட் செய்து இன்று CBCID போலீசாரால் அந்த கொள்ளை விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த பணத்துக்கான கணக்கை கோர்டில் காரணம் காட்டமுடியாமல் அந்த வழக்கிலிருந்து தான் காப்பாற்றப்பட பெரிய பெரிய வக்கீல்களுக்கு அந்த பிஷப் பணத்தை அள்ளிக்கொடுத்து கொண்டிருக்கிறார். இப்படியும் CSI பிஷப்மார்களில் சிலரின் சாட்சியில் உள்ள மோசமான வித்தியாசத்தை பார்த்தீர்களா?


இன்னொரு பிஷப்பின் நல்ல சாட்சி:
Most Rev.JESUDASAN

  நமது CSI பழைய மாடரேட்டரும், தெற்கு கேரளாவின் பழைய பிஷப்புமாக பல வருடங்கள் தொடர்ந்து பதவி வகித்த Most Rev.JESUDASAN (திருவனந்தபுரம்) அவர்கள் 4 பாஷைகள் பேசும், 4 மாநிலங்களில் உள்ள 22 டையோசிஸ்களிலும் உள்ள எல்லா CSI மக்களாலும் இவர் பெரிய அளவு மதிக்கப்படுகிறார். எளிமையான வாழ்க்கை, பழைய ஓட்டு வீட்டில்தான் இவர் இப்போதும் குடியிருக்கிறார்.

ஒருவர் வாழும் வாழ்க்கையை பார்த்தாலே அவர் கடந்த காலத்தில் வாழ்ந்த நிலையை ஓரளவு அறியலாம். இப்படிப்பட்ட சாட்சியுள்ள பிஷப்பும், மாடரேட்டருமானவர்கள் அலங்கரித்த அந்த CSI பிஷப் - மாடரேட்டர் ஸ்தானத்தில் பண ஆசை பிடித்த, பெண் ஆசை பிடித்த பணக்கொள்ளையர்கள் பிஷப்பாகவும் - மாடரேட்டராகவும் ஆட்சியில் அமர்ந்தால் CSI எப்படி உருப்படும்? அதனால்தான் 19ம் தேதி சினாட் கூட்டத்தில் நம் பிரதிநிதிகளாக செல்லும் சினாட் மெம்பர்களுக்கு நான் தனிகடிதம் எழுதினேன்.

  2011 பிப்ரவரி மாதம் 19ம் தேதி கூடிய சினாட் கூட்டத்தில் எடுக்கப்பட இருந்த பேராய தீர்மானம்(Amendments) விஷயமாக சினாட் மெம்பர்களுக்கு அனுப்பப்பட்ட Amendments-ல் காணப்படும் முக்கிய விஷயங்களையும் அதன் விளக்கங்களையும் இங்கு குறிப்பிடுகிறேன்.

1982- CONSTITUTION: சட்டப்பிரிவு: IV- 10 : Page - 26 : 10 FINANCE: THE BISHOP OF THE DIOCESE SHALL NOT AS BISHOP OR AS PRESIDENT OF THE DIOCESAN COUNCIL HAVE ANY SEPARATE CONTROLLING AUTHORITY OVER THE FINANCE OF THE DIOCESE.

ஆக, 1982 CSI சட்டப்படி ஒரு பேராயருக்கு பேரயாத்தின் பண நிர்வாகத்தில் எத்தகைய அதிகாரமும் வழங்கப்படவில்லை என்பதை கவனிக்கவும். இந்த சட்டம் இருந்த நாட்கள்வரை பிஷப்மார் பேராயத்தின் நிதியை கையாண்டு ஊழல்கள் செய்யவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

  திருமண்டல லே செயலரும், பொருளாளரும் கர்த்தருக்கு பயந்து பேராய பணத்தில் யாரும் கை வைக்காமல் பாதுகாத்தனர். கணக்குகளை முறையாக எழுதி செலவுகளுக்கு சரியான கணக்குகளை காட்டி நிர்வாகம் நடத்தினார். அதேசமயம் பேராய செயலரும், பொருளாளரும் நிர்வாக கமிட்டியினரும், பேராயத்தில் பிஷப் என்ற ஊழியரின் உடன் ஊழியர்களாவர். அப்படியே சபையிலும் குருவானவருக்கு சபைகமிட்டி நிர்வாகிகள் குருவானவருக்கு உடன் ஊழியராவர். சபை அல்லது பேராய நிர்வாக பொறுப்பிலுள்ளவர்கள் சரியான ஆட்களாக இல்லாமல்போனால் பேராய பணத்தில் பேராய நிர்வாகிகள் மூலம் ஏற்படும் தவறுகள், பணதிருட்டுகள் ஆகியவை பேராயத்தில் ஏற்பட்டால் பழிமுழுவதும் பிஷப்மார் மீதுதான் விழும். இதிலும் கவனமாக இருப்பது நல்லது.

  தமிழ்நாட்டில் உள்ள ஒரு பேராயத்தில் பல கோடிகள் பேராய நிர்வாகிகளால் (லே செயலர்) கொள்ளையடிக்கப்பட்டன. வங்கியிலிருந்து ஏராளமான பணம் பிஷப்புக்கு தெரியாமல் எடுக்கப்பட்டிருந்தது. காசோலைகளில் பிஷப் கையெழுத்தும், பொருளாளர் கையெழுத்தும் இருந்தது. ஆனால் பணம் லட்சக் கணக்கில் பேங்க்கிலிருந்து எடுக்கப்பட்டிருந்ததை பிஷப் அறியவில்லை. ஆடிட்டர் பிரச்சனை எழுப்பும் நேரத்தில், பிரச்சனை நீதிமன்றம் சென்றபின், பிஷப்பும் அதில் அகப்பட இருந்தார். பேராயர் நிர்வாகத்துக்காக தேவைக்கான பணம் எடுக்க உதவியாக பல காசோலைகளில் முன்பதாகவே கையெழுத்துபோட்டு கொடுத்துவிட்டார். இது பிஷப் அவர்களின் அனுபவ குறைவாகும், அந்த தவறையும் அதிலுள்ள ஆபத்தையும் தக்க சமயத்தில் பிஷப் உணர்ந்ததும், இரகசியமாக தன் கையெழுத்தை பிஷப் அவர்கள் மாற்றி அதை அரசாங்கத்துக்கு அறிவித்து, மாற்றப்பட்ட புதிய கையெழுத்து கெஜட்டில் வெளியிட்டு அதன் உத்தரவு கெஜட்டில் வந்தவுடன் தன் பழைய கையெழுத்து செல்லாது என்று எல்லா வங்கி மேலாளருக்கும் அறிவித்தார். அதனால் ஏற்கனவே பல காசோலைகளில் கையெழுத்து போட்டு நிர்வாகிகளுக்கு கொடுத்திருந்த காசோலைகள் செல்லாமல் போனது. பிஷப் அவர்களுக்கு தெரியாமல் பல லட்சங்களை எடுத்து கையாடின செயலர், பொருளாளருக்கும் பெரும் அதிர்ச்சியளித்தது, அவர்கள் அதை அறியவில்லை. அதனால் பேராயத்தின் பல லட்சங்கள் தவறான நிர்வாக பொறுப்பாளர்களால் தங்கள் இஷ்டத்துக்கு எடுத்தாள முடியாமல்போனது. அந்த பொறுப்பாளர்களும் நீக்கப்பட்டார்கள். பேராய பணத்தை தவறாக கையாடிய சிலர் ஜெயிலுக்கும் போகவேண்டியதானது.

Rt. Rev.Kuruvilla

  கேரளாவில் வடக்கு கேரளா (North Kerala Diocese)க்கு புதிய பிஷப் Rt.Rev.KURUVILLA அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார். தன் பேராயத்தின் ஒரு சபையில் உள்ள நிலம் விற்கப்பட்டது. மற்றொரு இடத்தில் மரங்கள் வெட்டப்பட்டது. இவை யாவும் டையோசிஸ் ஆபீஸ், பிஷப் வீடு ஆகியவைகளின் விரிவாக்கத்துக்காக பழைய பிஷப், பழைய கமிட்டியினரால் தீர்மானிக்கப்பட்டு, சினாட் அங்கீகாரமும் பெற்று, அதற்கான அனுமதி கடிதமும் பெற்றுவைத்திருந்தனர். நிலம் விற்கப்பட்டது. மரங்கள் வெட்டப்பட்டது. ஆனால் அனுமதி காலாவதியாகிப்போனதை அறியாது விற்பனை பத்திரத்தில் பிஷப் கையெழுத்து போட்டுவிட்டார். இப்போது விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது. பிஷப்.குருவில்லா அவர்கள் மீது பழி விழுந்தது. பேராய பொருளாளர் அவர்கள் அனுமதி காலாவதியானதைப்பற்றிய விவரத்தை பிஷப்புக்கு அறிவிக்கவில்லை. வேண்டுமென்றே பிஷப்பை அகப்படுத்தவே இந்த ஏற்பாடு என்று பிறகு பேசப்பட்டது. பிஷப் அலுவலக பொறுப்பாளர்கள் நினைத்தால் பிஷப்பை பல ஆபத்தில் அகப்படுத்தலாம். இந்த விஷயத்தில் புதிய பிஷப்புக்கு ஃபைல் விவரம் எடுத்துகூற வேண்டியது நிர்வாக பொறுப்பாளரின் கடமை, பிஷப்பும் கையெழுத்து இடும்முன் அதை கவனித்திருக்கவேண்டும்.

அனுபவமில்லாத புதிய பிஷப்பானதாலும், நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டதாலும் பிஷப் அவர்கள் டிவியிலும், தினசரி செய்திதாள்களிலும் பேசப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். இன்னும் இந்த விஷயம் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. தவறு பிஷப்மேல்தான் என்றாலும், பேராய நிர்வாகத்தினரின் மோசடி காரணமாகவும், பிஷப்பின் அலட்சியம் காரணமாக பிரச்சனை நீதிமன்றத்தில் கொண்டுபோகப்பட்டு பெருத்த அவப்பெயர் பிஷப்புக்கு ஏற்பட்டது.

  இதை ஏன் கூறுகிறேன் என்றால் ஒரு பேராயத்தில் நிர்வாகிகள் தாங்கள் வகிக்கும் பதவியை ஊழியம் என்றும், பணம் சபைமக்களின் காணிக்கை என்றும் அது தேவனுடையது என்றும் உணராததால் இன்று பல பேராயங்களின் உள்ள நல்ல பிஷப்மார் பேராய நிர்வாகிகளால் பொதுமக்கள்முன் அவமானப்பட்டுப்போனார்கள்.

  இந்திய ரயில்வேயில் திடீரென்று கோடிக்கணக்கில் லாபம் ஏற்பட்டது, உலகமே வியந்தது. குறிப்பிட்ட மந்திரியான திரு.லாலு பிரசாத் யாதவ் என்பவர் பதவி ஏற்றப்பின்தான் இத்தனை பெரும்மாற்றம் ரயில்வேயில் ஏற்பட்டது. ஆகவே உலகம் மந்திரியை புகழ்ந்தது. ஆனால் இந்த புகழுக்கு காரணம் மந்திரியின் மூளை அல்ல, மந்திரி மாட்டுக்கு வைக்கும் வைக்கபுல் செலவுக்காக 9 கோடி செலவு என்று அரசாங்கத்தில் பொய் கணக்கு காண்பித்து ஊழல் வழக்கில் பிடிப்பட்டவர். இவர் முதன்மந்திரியாக பதவி வகித்தபோது பல கோடிகள் அரசாங்கத்திலிருந்து கையாடி பல ஊழல்களில் அகப்பட்டு இன்னும் அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. ஆனால் இரயில்வேதுறையின் லாபத்தின் இத்தனை பெருமைக்கு அதன் நிர்வாகிகளும், அந்த இலாகாவின் ஆலோசகர்களும்தான் காரணம் ஆகும். அதுபோல ஒரு பேராயத்துக்கு அல்லது ஒரு சபைக்கு நல்ல ஆவிக்குரிய பொறுப்புள்ள தேவபயமுள்ள நிர்வாகிகள் அமைந்தால் எந்த பேராயமும், சபையும் முன்னுக்கு வரும். பிஷப் ஊழல் செய்ய துணிந்தாலும் நல்ல நிர்வாகிகள் அந்த பாவத்துக்கு உடந்தையாக இருக்கமாட்டார்கள்.

  பழைய காலத்தில் இருந்தமாதிரி தெய்வபயம் உள்ள நிர்வாகிகள் இப்போது இல்லாததால்தான் பிஷப்மார் பேராய கணக்கிலிருந்து கோடிகள் திருட, நிர்வாகிகளே ஒத்துழைப்பு தந்ததால்தான்தானே இன்று CBCID பிடியில் சிக்கி சில CSI பிஷப்மார் அகப்பட்டுள்ளனர். தவறான வழியில் பணம் பெற்றுதரவேண்டும் என்று பிஷப் கேட்டாலும் ப் நான் இணைங்கமாட்டேன் என்றும் கையெழுத்து போடமாட்டேன் என்றும் கூறி பதவி விலகி தன் சாட்சியை காண்பிக்கும் நல்ல நிர்வாகிகள் இன்று இருந்திருந்தால், பல பிஷப்மார், ஆயர்கள் (ஏரியா சேர்மேன்கள்) போலீஸில் அகப்படாமலும் பணத்திருட்டுக்கு துணைப் போகாமலும் தன் சாட்சியை காத்துக்கொண்டிருக்கமுடியுமே! எனவே நல்ல நிர்வாகிகள் சினாட்டில், திருமண்டலத்தில் அமர்த்தப்பட அந்தந்த திருமண்டல சபை மக்கள் ஜெபிக்கவேண்டும்.


2003ம் வருடம் CSI சட்டத்தில் பிஷப்மார்களுக்கு
ஏற்படுத்திய சாதகமான மாற்றத்தை கவனிப்போம்:

10 - FINANCE PAGE 37, THE BISHOP OF THE DIOCESE SHALL HAVE A GENERAL OVERSIGHT OF THE FINANCIAL ADMINISTRATION OF THE DIOCESE, BUT SHALL NOT EXERCISE ANY DIRECT CONTROL OVER THE FINANCE என்று புதுதிருத்தம் கொண்டுவரப்பட்டது. ஒருவர் இதைப்பற்றி எழுதும்போது கூறுகிறார். மேல்வாரியாக இதை வாசிக்கும்போது இதன் ஆபத்தை காணமுடியாது. ஆனால் அதன் விளைவுகள் இப்போது பல பிஷப்மார் பேராயத்தில் நடத்தும் சர்வாதிகாரம், நிர்வாகத்தினரை தன் இஷ்டம்போல் நியமிப்பது, தன் இஷ்டம்போல் சபை நிலங்களை, கல்லூரி நிலங்களை விற்பதன் மூலமும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமும் புது திருத்தத்தின் ஆபத்து விளங்குகிறதல்லவா! என்று சுட்டிக்காண்பிக்கிறார். எவ்வளவு உண்மை இது. யோசித்துப்பாருங்கள்.

  கோயமுத்தூர் டையோசிஸ் பிஷப், பெங்களூர் பிஷப்பும் CSIயின் மாடரேட்டருமானவர், சென்னை பிஷப், மதுரை பிஷப், பழைய மாடரேட்டர்.சுகந்தர், கிருஷ்ணா - கோதாவரி பிஷப்.தெய்வாசீர்வாதம் இன்னும் சில பிஷப்மார்களும், பேராய நிதிகளை கையாடல் செய்தவர்கள் லிஸ்ட்டில் காணப்படுகிறார்கள். இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டாமா? இப்படியெல்லாம் பிஷப்மாரின் ஊழல்களை வாசகர்களுக்கு அறிவிக்கும்போது அனைத்து பிஷப்மாரும் அவமானம் காரணமாக இவைகளை சுட்டிக்காட்டி எழுதிய என்னை மகா கோபத்துடன் வெறுக்கிறார்கள். பிஷப்மார்களை அவமானப்படுத்துவது என் நோக்கமல்ல என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ளவதில்லை.


இப்போதுள்ள AMENDMENTS-ல்

PAGE 69 - SECTION 2 - C,
Nomination மூலம் வருகிற உறுப்பினர்களால்தான் பிஷப்பின் அதிகாரம் எல்லை கடக்கிறது. Nomination மூலமாக வரும் உறுப்பினர்களை தேர்வு செய்வது யார்? என்ற விஷயத்தில் வரையறுக்கப்பட்ட நிலை சட்டத்தில் இல்லாததால் பிரச்சனை எழும்புகிறது.

இப்போது பிப்ரவரி 19ம் தேதி சினாட் கூடுகையில் திருத்தப்பட உள்ள ஷரத்துப்படி இந்த Nomination - அதிகாரத்தை அங்கீகரிக்கப்பட்ட பேராயர், செயலர், துணைத்தலைவர், பொருளாளர் ஆகியவர்கள் இணைந்த நிர்வாக குழுவிலிருந்து அந்த அதிகாரத்தை முற்றிலும் பறித்துவிட்டு அந்த அதிகாரம் முழுவதையும் பிஷப்புக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த கூடுதல் அதிகாரத்திட்டம் பிஷப்பின் அதிகாரத்தை மேலும் கூட்டக்கூடியதாகும். இதனால் பிஷப்மார் பணம் திருடவும், சிலரை பழிவாங்கவும் தனக்கு சாதகமானவர்களை Nomination செய்தால்தான் பிஷப்புக்கு வசதியாக இருக்கும்.

PAGE 70 - SECTION 5 PARA 2,
இந்த பிரிவில் பத்தி 2ல் Diocesan Council-ன் தலையாய கடமை என்ன என்று வரையறுக்கப்பட்டுள்ளது. சபைகுருமார்களும், மற்ற ஊழியர்களும் தங்கள் அன்றாட கடமைகளைக்குறித்து அறிக்கைகளை Diocesan Councilக்கு சமர்பிக்கவேண்டும். ஆனால் இப்போது இவர்கள் யாரும் அப்படி செய்வதில்லை. ஆகவே குருமார்களின் கமிட்டி தங்கள் சவுகரியத்துக்காக இந்த சட்டதிருத்தத்தை கொண்டுவர இருக்கிறார்கள். இதற்கு மெம்பர்கள் சம்மதிக்ககூடாது. மேலும் இந்த ஷரத்தை நீக்கி விட்டால் CSI டையோசிஸ்ஸில் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துமனைகள் மற்றும் உள்ள போர்டுகளுக்கு கரஸ்பான்டன்ட்டுகளை நியமிக்கிற கவுன்சிலின் அதிகாரம் எடுக்கப்பட்டுவிடும். அந்த இடங்களுக்கு பிஷப் அவர்களே தன்னிச்சையாக கரஸ்பான்டன்டை அமர்த்துவார். அதன்பின் என்ன நடக்கும் என்பதை மெம்பர்களே அறிவார்கள்! ஆகவே அந்த பழைய ஷரத்தை நீக்கம் செய்வது நல்லதல்ல.

PAGE 72 - SECTION 10,
Diocesan Councilலானது, இன்றைய நிலையில் Executive Committee-யை Appoint செய்வதில்லை. ஆனால் அந்த கமிட்டியை தேர்தல் மூலம் Diocesan Council Constitute செய்கிறது. எனவே இந்த ஷரத்தில் Appoint என்று வருகிற வார்த்தையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக Elect என்று சேர்க்கவேண்டும் என்று நல்ல அனுபவமுள்ளவர் அறிவிக்கிறார்.

PAGE 70 - SECTION 10 Para 2,
இதில் காணும் புதிய திருத்தத்தால் ஒரு மாற்றமும் உண்டாகப்போவதில்லை. பழையப்படி டையோசிஸ்ஸின் கமிட்டிகளிலும் (போர்டுகளிலும்) பிஷப் விரும்பினால் தலைமை ஸ்தானம் ஏற்கலாம் என்பது ஒன்றும் புதியதல்ல.

PAGE 73/74 -  SECTION 12,
இதில் 3வது பத்தியில் Consecutively என்ற வார்த்தையை முற்றிலும் நீக்கிவிடவேண்டும். CSI டையோசிஸ்ஸில் எவரும் எந்தவிதமான பதவியிலும் இரண்டு முறைக்குமேல் பதவி வகிக்கக்கூடாது. அது தொடர்ந்தால் தவறுகள் உண்டாக வழி உண்டாகும். "No person shall hold any Elected or Appointed office within Diocesan council for more the two terms".

PAGE 53 - SECTION 9 (பக்கம் 5)
பேராயரை தெரிந்தெடுக்க வயதுவரம்பு 50 என்பதை மாற்றி 55 என்று திருத்தம் கொண்டு வரவேண்டும். இப்போதுள்ள சில பண ஆசை பிடித்த ஊழல் நிறைந்த பிஷப்மாரைபோல் தேர்ந்தெடுக்கப்படும் புதிய பிஷப் 50 வயதுள்ளவராக அமைந்துவிட்டால் 15 நீண்ட வருடங்கள் அவர் பதவியில் இருப்பார். அது பார்வோன் கையில் அகப்பட்ட இஸ்ரவேல் மக்களின் நிலைபோல் ஆகும். ஆகவே 10 வருடம் பிஷப் பதவியில் இருக்கும் வகையில் வயதுவரம்பு 55 என்று மாற்றினால் 65ல் ரிட்டயர்ட் ஆகலாம். இதுவே அதிகம் என்றும் ஒரு பிஷப் 5 வருடம் பதவியில் இருக்கும்படி தெரிந்தெடுக்கப்படவேண்டும் என்று பால்கமிஷன்முன் பலர் கோரிக்கையை வைத்ததாக அறிந்தேன்.

  இதை வாசிக்கும்போது CSI சினாட் மெம்பர்களின் கூட்டம் நடந்துமுடிந்திருக்கும். CSIயின்மேல் பாரமுள்ள சில அனுபவஸ்தர்களை சினாட் விஷயமாக கலந்து ஆலோசித்து, அவர்கள் எனக்கு எழுதிய கருத்தில் சிலவற்றை இதில் சேர்த்து எழுதியுள்ளேன். இதே சிந்தையுள்ளவர்கள் 19ம் தேதி நடந்த சினாட் கூட்டத்தில் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கலாம் என்று நம்புகிறேன். அதனால்தான் பிஷப்மாருக்கு அளிப்பதாக இருந்த கூடுதல் அதிகாரம் பற்றிய தீர்மானத்தை சினாட் மெம்பர்கள் தோற்கடித்துவிட்டனர். அவர்களை வாழ்த்துகிறேன். எப்படியோ இனிமேலாவது நம் CSIயில் பிஷப்மார்களுக்கும், மாடரேட்டர் அவர்களுக்கும், அனைத்து நிர்வாகிகளுக்கும் ஒரு ஆவிக்குரிய தெய்வ பயம் உண்டானால் CSIயிலுள்ள கடந்த கால அவமானம் நீக்கப்படும். இல்லையென்றால் ஊழலும் தொடரும், பணக்கொள்ளையும் தொடரும், CSIக்கு அவமானமும் தொடரும். யோசியுங்கள். ஜெபிப்போம்.

  வருமானவரி அலுவலகம் சினாட்டுக்கு அனுப்பிய கடிதம் எப்படியோ என் கைக்கு வந்தது. வாசித்துப்பாருங்கள். வருமானவரி அலுவலகம் CSI அனைத்து திருமண்டல கணக்குகளையும் சுனாமி பணவரவு - செலவு சகல விவரங்களையும் கேட்கிறதை கடிதத்தை வாசித்தால் விளங்கும். இரகசியமாக விற்ற சபை நிலத்துக்கும் கணக்கு கேட்கிறது. சினாடும் - சில டையோசிஸ்களும் தவறான செலவு விவரங்களை சமர்பித்தவர்கள் பலர் அதில் அகப்படுவார்கள்.

  இக்கடிதத்தை தொடர்ந்து வாசித்து நம் CSIயில் தவறு செய்யும் தலைவர்களை என்ன செய்யலாம் என்பதைக்குறித்து CSI சபையை சேர்ந்தவர்கள்மட்டும் உங்கள் ஆலோசனைகளை ஜாமக்காரனுக்கு எழுதுங்கள். காணிக்கை பணத்தை ஒழுங்காக செலவழித்திருந்தால் சினாட் வருமானவரி துறைக்கோ - அரசாங்கத்துக்கோ நாம் பயப்படதேவையில்லையே! நம் CSI மக்களை முன்னேற்ற உதவும் நோக்கில் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட உதவி பணத்தை சினாட் நியாயமாய் செலவு செய்திருந்தால் அந்த பணத்தை கொள்ளையடிக்காமலிருந்திருந்தால் மத்திய அரசு அல்லது மாநில வருமானவரி அலுவலகம் CSIக்குள் நுழைய முயலுமா? இது வழமையாக வருமானவரி துறையினரால் எழுதப்படும் கடிதம் என்று யாரும் இம்முறை சமாளிக்க இயலாது. இம்முறை சினாட்டோ, டையோசிஸ்களோ ஒழுங்கான கணக்கு காட்டாமல் போனால் நம் CSI டையோசிஸ்கள் அரசாங்கம் தலையிட்டு பொறுப்பெடுக்கவேண்டிய நிலைமை வரும். பல வருடங்களுக்குமுன் கன்னியாகுமரி CSI டையோசிஸ்ஸில் பிரச்சனைகள் வலுத்து முன்னாள் பிஷப்பும், லே செயலரும் மாறிமாறி வாங்கிய ஸ்டே ஆர்டர் காரணமாக டையோசிஸ் ஸ்தம்பித்தது. அது காரணமாக கோர்ட்டுதானே தற்காலிக பொறுப்பாளர்களை நியமித்து குருவானவர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலிருந்து டையோசிஸ்ஸின் முழு நிர்வாகத்தையும் சில மாதங்கள் கோர்ட்தானே நடத்தியது. அந்த நிலைமை முழு CSI சபைகளுக்கு வந்துவிடவேண்டாம். ஜாக்கிரதை!

  எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும்..... பணத்தைக் குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கை(யாய் இருக்கிறோம்).

  கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம். 2கொரி 8:20,21.


முடிவாக என்னைப்பற்றி:

அன்பான வாசகர்களே, இதுவரை நான் நம் CSI சபைகளின் முன்னாள் - இந்நாள் பிஷப்மார்கள், மாடரேட்டர்கள் பலரைப்பற்றி ஜாமக்காரனில் விமர்சித்ததால் பெரும்பாலான பிஷப்மார்கள் என்மேல் வெறுப்புற்றிருக்கிறார்கள். குற்றம் செய்யாத, என்னால் ஜாமக்காரனில் விமர்சிக்கப்படாத, ஒன்று அல்லது இரண்டு பிஷப்மார்கள்கூட தங்கள் மனதில் என்னை வெறுப்பார்கள் என்று நினைக்கிறேன். மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள பிஷப்மார்களையும் அவர்கள் இரகசிய தவறுகளையும் உலகம் அறியும் வண்ணம் சபை மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் வெளிச்சமிட்டுகாட்ட இவர் யார்? மற்ற பிஷப்மார்களுக்கு அவமானமென்றால் அது தங்களையும் பாதிக்கும் அல்லவா! இப்படி சில பிஷப்மார் யோசித்து இவர்களில் குற்றம் செய்யாத பிஷப்மார்கள்கூட என்னை வெறுப்பார்கள்.

  டையோசிஸ்க்குள் நான் ஊழியத்துக்கு அழைக்கப்படாதபடியிருக்க தனிப்பட்ட முறையில் பிஷப்மார்கள் ஆயர்களிடம் என்னைப்பற்றி கூறி எழுதப்படாத சட்டமாக என் ஊழியங்களை சில பிஷப்மார் தடை செய்யலாம். இவைகளையெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே நான் எதிர்ப்பார்த்துதான் கர்த்தர் கொடுத்த இந்த எச்சரிப்பின் பத்திரிக்கை ஊழியத்தை தொடர்ந்தேன். ஆகவே விளைவுகளைக் குறித்து நான் எப்போதுமே கவலைபடுவதில்லை! பயப்படுவதுமில்லை! நான் எழுதி அறிவித்த விஷயங்களில் யாரையும் அவமானப்படுத்தும் நோக்கம் இல்லை என்பதையும், எந்த டையோசிஸ்க்கும் கெட்டபெயர் அல்லது அவமானம் உண்டாக்கவேண்டும் என்ற நோக்கம் சிறிதேனும் இல்லை என்பதையும், பொய்யான தகவல் எதையும் எழுதவில்லை என்பதை யாவரும் அறிவீர்கள்.

  இந்த ஜாமக்காரனில் வெளியிட்டுள்ள Income Tax Office கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல டையோசிஸ்களின் கணக்கு, செலவு விவரங்களை சமர்பிக்க கட்டளையிட்டுள்ளது. அதில் டையோசிஸ்ஸின் பெயர்களை குறிப்பிட்டுள்ளதையும் நீங்கள் வாசிதிருப்பீர்கள்.

  இதைப்போலத்தான் சுனாமி பணம் ஊழல் விஷயமாக அமெரிக்க உதவி ஸ்தாபனம் ERD வெளியிட்ட அறிக்கையில் பல டையோசிஸ் பெயர்களும், டையோசிஸ் பிஷப்மார் பெயர்களும் குறிப்பிடப்பட்டதை போட்டோ காப்பி எடுத்து அப்படியே வெளியிட்டேன். இதில் என் தவறு என்ன? அதில் சில பிஷப்மார் பெயர் வெளியிட்டதால் தங்கள் டையோசிஸ்ஸிக்கு அவமானம் என்று எழுதினார்கள். டையோசிஸ்ஸை அவமானப்படுத்தும்வகையில் பெயர் குறிப்பிட்டது நானா? இல்லையே! ERD அறிக்கையை அல்லது வருமானவரிதுறை கடிதத்தையும் அப்படியே போட்டோ காப்பி எடுத்து வாசகர்களுக்காக வெளியிட்டேன், வெளியிட்டது அவர்கள், இதற்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள்பட்ட அவமானத்துக்காக நாகரீக அடிப்படையில் ஆதாரம் கிடைக்கும்முன் மன்னிப்பு கேட்டேன். அந்த குறிப்பிட்ட டையோசிஸ்ஸைக் குறித்து சில மேலும் சில தகவல்களை சிலர் எனக்கு அனுப்பி நீங்கள் மன்னிப்பு கேட்டு இருக்கக்கூடாது. நாங்கள் அனுப்பியுள்ள இந்த விவகாரங்களையும், விவரங்களையும் வெளியிடுங்கள் என்றனர். நான் வெளியிடவில்லை. இதைக்குறித்து மனசாட்சி உள்ளவர்கள் தங்களை சரிப்படுத்திக் கொள்ளட்டும்.

  இன்று இந்தியாவில் ஒலிம்பிக் ஊழல் - ஸ்பெக்ட்ரம், 2G ஊழல்களை கோடிகோடியாக செய்த பண கையாடல்கள் யாவையும் மீடியாக்கள் (பத்திரிக்கை - TV) மூலமாக இந்திய மக்கள்முன் அவர்கள் வெளியிட்டு காட்டியதால்தானே இந்திய மக்களாகிய நமக்கு நாம் கொடுத்த வரிபணம் எப்படியெல்லாம் அரசியல்வாதிகளால், மந்திரிகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடிந்தது! இதனால்தானே இந்திய மக்களாகிய நமக்கும் இந்திய மாணவ உலகம் யாவருக்குள்ளும் இப்போது பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது! இந்த விஷயத்தில் பத்திரிக்கை - டிவி போன்ற மீடியாக்களின் துப்பறிந்து வெளிப்படுத்திய செயல் பாராட்டுக்குரியதாகும்.

  அதுபோல ஜாமக்காரன் மூலமாக பேராய ஊழல்களை வெளியே கொண்டுவந்ததால் நல்ல பல சபைமக்களுக்குள்ளே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதே! இப்போது சினாட் மெம்பர்களுக்காக எழுதப்பட்ட என் கடிதத்துக்கு கைமேல் பலன் கிடைத்ததே! 2011 பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற சினாட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த பிஷப்மார்களின் அதிகாரம் அதிகமாக்கல் விஷயத்தை சினாட் மெம்பர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து நிராகரித்துவிட்டார்களே! இப்படி நல்ல ஒரு விழிப்புணர்வு CSI கிறிஸ்தவர்களிடையே உண்டாகிக்கொண்டிருக்கிறது என்பது ஜாமக்காரன் பத்திரிக்கையின் வெற்றிதானே! சினாட் கூட்டம் நடந்த மாலை நேரமே ஏராளமானவர்கள் e-mail செய்தி மூலமாக சினாட் மெம்பர்களுக்கு தக்கசமயத்தில் எழுதி அறிவித்த கடிதத்துக்கு எனக்கு நன்றி கூறினார்கள். அது என்னை ஆறுதல் படுத்தின. இந்த விவரங்களை கடிதம் மூலம் அறிவித்து நான் எழுதியதற்கு நன்றி கூறி ஏராளமான சினாட் மெம்பர்களும், குருவானவர்களும் e-mail மூலமாகவும், கடிதம் மூலமாகவும், தொலைப்பேசி மூலமாகவும் எனக்கு நன்றி கூறி அறிவித்தது என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது.

  CSI சபைகளுக்காக இந்த சிறிய உதவியாவது என் ஜாமக்காரன் மூலமாகவும், சினாட் மெம்பர்களுக்கு எழுதிய கடிதம் மூலமாகவும் செய்யமுடிந்ததே என்ற ஆத்துமதிருப்தியுடன் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கு நன்றி கூறுகிறேன். ஆகவே முடிவாக நான் சொல்லவிரும்புவது CSIக்காக என்னால் செய்ய முடிந்தது இவ்வளவுதான்!

  இனி என் எழுத்தினால் உண்டாகும் விளைவுகள், நன்மைகள் யாவும் தேவ சித்தத்தின்படி அமைவதாக. என் வாசகர்களாகிய நம் CSI சபைகளின் உயிர் மீட்சிக்காகவும், விழிப்புணர்வுக்காகவும் தொடர்ந்து ஜெபிப்போம்.

  மத் 10:22, என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

  மத் 10:27.நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிசத்திலே சொல்லுங்கள். காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம் பண்ணுங்கள்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM