எங்களது குடும்ப முகாம் (Blessing Youth Mission) ஒன்றில் கணவரும் மனைவியரும் நிரப்பிக் கொடுக்க (form) படிவங்கள் விநியோக்கிக்கப்பட்டன. அதில் ஒருவர் "என் மனைவி எனக்குக் கீழ்ப்படிவதில்லை" என்று எழுதியிருந்தார். பரிதாபப்பட்டேன். ஆனால் அவரது மனைவியின் படிவம் வந்தபோது. என் கணவர் குடிக்காரர். என்று எழுதியிருக்கக்கண்டேன். அழுவதா, இல்லைச் சிரிப்பதா? மது, மாது விவரங்களில் மனைவிக்கு கீழ்ப்படியாத கணவன், மனைவியின் கீழ்படிதலுக்குத் தகுதியற்றவன். இதனால் அவரை அலட்சியம் செய்யவேண்டுமென்பதல்ல. எப்போது கீழ்ப்படியக்கூடாது என்பதில் விழிப்பாயிருக்கவேண்டும்.1 பேதுரு 3:1-4ஐக் கைக்கொள்ளளும்போது அதில் குறிப்பிட்டுள்ள நடக்கை என்பது விவேகமான கீழ்படிதலையும் உள்ளடக்கும் என்பதை நினைவிற்கொண்டு, கீழ்ப்படியாதிருக்கவேண்டிய சூழ்நிலையில் பெண்கள் சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியோடிருக்கவேண்டும்.

"மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள், என்கிறது." கொலே 3:18. உங்கள் கீழ்படிதலை அங்கீகரித்து தேவன் ஆனந்தமாய் தலையசைப்பாரா? என்பதை அந்த சூழ்நிலையில் யோசித்துபாருங்கள். பின்வரும் கேள்விகளையும் கேட்டுப்பாருங்கள். எனது கீழ்ப்படிதல் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருமா? என் குடும்பத்தைக் காயப்படுத்துமா? யாருக்கேனும் பங்கம் விளைவிக்குமா? நல்ல சாட்சியாக இருக்குமா? என் மனச்சாட்சியை களங்கப்படுத்துமா? சந்தோஷமாய் மற்றவர்களுடன் என் அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள முடியுமா? என் கீழ்ப்படிதலினால் தேவனைப் பின்பற்றுகிறவளாயிருப்பேனா? அன்பிலே நடந்துக் கொள்கிறவளாயிருப்பேனா?. ஞானத்திற்கும் கணவனுக்கும் கீழ்ப்படிதலுக்கு இடையிலுள்ள கத்திக் கூர்மை விளிம்பில் நடப்பதைபோல் ஒரு பெண் நடக்கவேண்டும். கயிற்றின்மேல் நடக்கும் இந்த வித்தையைக் கற்பிக்க அனுபவமே அவளுக்கு ஆசிரியை. எஸ்தர் அதைச்செய்தாள். உங்களது கீழ்ப்படியாமை உங்கள் கணவரை கௌரவிக்குமானால் அதைத்தான் ஞானம் எனலாம்.


3. எனக்கு ஞானமில்லை:

யார் சொன்னது? பெண்கள் பலர் தங்களுக்கு ஞானமில்லையென்று அங்கலாய்க்கிறார்கள். சமுதாயம் "பெண்புத்தி-பின்புத்தி" என்று மொழிந்ததால் அதை நம்பி ஏற்றுக்கொள்கிறார்கள். புத்தியீனமாய் நடந்துகொண்டால் தங்களையே நொந்துக்கொள்கின்றனர். நீங்கள் ஞானத்தில் வளரவேண்டுமேயொழிய வேறொன்றுமில்லை. ஞானத்திற்கான இறைவாக்கு ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும்தான் (யாக் 1:5). நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தேவனிடம் கேட்க வேண்டியதொன்றே, பெரிய காரியங்களுக்குமட்டுமல்ல, அன்றாடத் தீர்மானங்களுக்கும்தான். திடீர் ஜெபம் மட்டுமல்ல. அனுதின ஆழமானவிடாப்பிடி அங்கலாய்ப்புள்ள ஜெபம் அப்படிப்பட்ட ஜெபத்தில் நீங்கள் கேட்டால் ஏராளமாய் தாராளமாய்க்கிடைக்கும். எழுதுகிறநானும் ஞானத்திற்காய் இறைவனடியைப்பற்றிக்கொண்டு மன்றாடினேன். மாற்றத்தைக் கண்டேன். அதன்பின் எவ்வளவோதூரம் ஆவிக்குரிய முதிர்ச்சியில் கடந்து வந்திருக்கிறேன். "கேட்டல்" என்ற எளிமையான காரியத்தை எத்தனை பேர்செய்கிறோம்? சந்தேகமின்றி நம்பிக்கையோடு கேளுங்கள். தலையே பெண்ணுக்குத் தலை சிறந்த ஆயுதம். ஞானம் என்பது ஞானத்திற்காய் ஜெபிப்பது மட்டுமல்ல. ஞானமான காரியங்களைச் செய்வதுமே. இயேசுகிறிஸ்து மத்தேயு 7:24ல் வரைந்த கோட்டில் வழுவாமல் நடக்கவேண்டும். "நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனை... புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன்" நீதிமொழிகள் 3 அத்தியாயம் ஞானத்தின் புகழைப்பாடுகிறது. ஆனால் அதைச்சொந்தம் கொண்டாடுபவர் யார்? "நீ உன்னை ஞானியென்று எண்ணாதே, கர்த்தருக்குப் பயந்து தீமையை விட்டுவிலகு" (நீதி 3:7) என்ற இந்த வார்த்தைகள் இதைவிடத் தெளிவாய் இருக்க முடியுமா? கடவுளுக்கு நடுங்கி தீமையைக் கண்டால் தூர ஓடுவதே புத்திசாலித்தனம். சந்தேகமான காரியமாயிருந்தால் சாதுரியமாகக் கைக்கழுவிவிடுங்கள் உங்களுக்கு சந்தேகம் வருமானால் வேதத்தை ஆராயுங்கள். தேவன் நமக்குத் தெளிந்த புத்தியுள்ள ஆவியைக் கொடுத்திருக்கிறார். (2தீமோ 1:7).


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM