அந்த சூழ்நிலையில்தான் FEBA வானொலியில் பேசி ஒலிப்பரப்ப தயாராக இருந்த சகோ.தினகரனின் பிரசங்க நிகழ்ச்சிக்கு பெயர் வைக்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்டார். அப்போது ஈரோடு நகரில் பிரப்மெமோரியல் CSI சபையினர் என்னையும், சகோ.தினகரனையும் குழுவினரையும் அழைத்து ஒரு பெரிய கூட்டத்தை ஈரோடு CSI ஆஸ்பத்திரி மைதானத்தில் நடத்தினர். அந்த கூட்டத்தை பெரிய அளவில் மேடை அமைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.


ஈரோடு பிரப் CSI சபை கன்வென்ஷன் கமிட்டி இட்ட இயேசு அழைக்கிறார் பெயர் பின் திரையில் பார்க்கலாம்.

முதல்நாள் கூட்டம் ஆரம்பமானது. மேடையில் சகோ.லைனல், சகோ.பென்னி (இப்போது அவர் பாஸ்டர்.பென்னி, அன்று கோவை PSG கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றியனார்) அவர்களோடு சகோ.எட்வார்ட் பால் அவர்களும், குடும்பமாக பாடல்வேளையில் பாடல்களை நடத்திக்கொண்டிருந்தனர். அவ்வேளையில் நான் மேடையில் அமர்ந்திருக்கும்போது சகோ.தினகரனிடம் FEBA நிலையத்தினர் வானொலி பிரசங்க நிகழ்ச்சிக்கு பெயர் கேட்டு கடைசி எச்சரிக்கையாக கடிதம் அனுப்பியுள்ளனர். ஆகவே இனி தாமதிக்கக்கூடாது என்றேன். சகோ.தினகரனோ அமைதியாக அமர்ந்திருந்தார். மேடையில் நான் என் அருகே சகோ.தினகரன், சகோதரர் அருகே மறைந்த Rev.எபிநேசர் ஆயர் அவர்களும் அமர்ந்திருந்தோம். பின்னால் ஈரோடு நகர முக்கிய பிரமுகர்களும், ஊழியர்களும் அமர்ந்திருந்தனர். சகோதரி.ஸ்டெல்லா தினகரன் அவர்களும் பின்னால் உட்கார்ந்திருந்தார். சகோ.தினகரனின் கூர்மையான கண்கள் அவர் மேடைஏறி நாற்காலியில் அமரும்போதே அந்த மேடை அலங்காரத்தை கவனித்திருந்தது. அப்போதுதான் அந்த சரித்திர நிகழ்ச்சி நடந்தது.


நானும் - சகோ.DGS.தினகரனும் இதே மேடையில்தான் இயேசு அழைக்கிறார் பெயரை பிரதிஷ்டை செய்தோம்.

திடீரென்று சகோ.தினகரன் என்னிடமாய் திரும்பி டாக்டர் மேடையின் பின்னால் கவனித்தீர்களா?. பிரப் CSI சபையினர் நீல நிறத்தில் பெரிய திரை சீலை தொங்கவிட்டிருந்தனர். அதில் அவர்களால் எழுதப்பட்ட அந்த வாசகத்தை வாசியுங்கள் என்றார். அதில் இயேசு அழைக்கிறார் என்று பெரிய எழுத்தில் எழுதியிருந்தனர். அந்த பெயரை நம் வானொலி நிகழ்ச்சிக்கு வைத்தால் என்ன? என்றார். உடனே நான் அது மிக நல்ல பெயர்தான் அந்த பெயரையே வானொலி நிகழ்ச்சிக்கும், நீங்கள் சொந்தமாக ஆரம்பிக்க ஆசைப்படும் பத்திரிக்கைக்கும் வைத்தால் மிக பொருத்தமாக இருக்கும் என்றேன். உடனே சகோ.தினகரன் என் கையை பிடித்து மேஜைமீது வைத்து, தன் கையை என் கையின்மேல் வைத்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் இயேசு அழைக்கிறார் என்ற இந்த பெயரை கர்த்தாவே பிரதிஷ்டை செய்கிறோம். இந்த பெயரின் மூலம் எங்கள் எல்லாவித ஊழியங்களும் நடைபெற்று உம் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென் என்று கூறி ஜெபித்து முடித்தார். நாங்கள் ஜெபித்தது அருகில் அமர்ந்திருந்த ஆயர் எபிநேசர் அவர்களுக்கும் தெரியாது. பின்னால் அமர்ந்திருந்த சகோதரி.ஸ்டெல்லா தினகரன் அவர்களுக்கும் தெரியாது. இப்படித்தான் முதன் முதலாக இயேசு அழைக்கிறார் என்ற உலக பிரசித்திப்பெற்ற பெயரும் உருவானது. ஊழியரும் உருவானார்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM