|
|
|
ஆலோசனை- ஜெபத்துக்கு என்னோடு
தொடர்புக்கொள்பவர்கள் கவனிக்கவும்: |
ஒவ்வொரு மாதத்திலும் வாரத்தில் செவ்வாய்கிழமை முதல்
புதன் மதியம் வரை மட்டுமே நான் வீட்டில் சேலத்தில் இருப்பேன். ஆலோசனை-ஜெபத்துக்கு நேரில்
சேலம் (தமிழ்நாட்டுக்கு) வர விரும்புகிறவர்கள் முன்பதாகவே தேதிகளை கடிதத்தில் குறிப்பிட்டு எழுதி கேட்டு எங்கள் பதில் பெற்றபின் வரவும் அல்லது போனில் தொடர்புக்கொண்டு நீங்கள் வரும் நாளை உறுதிப்படுத்திக்கொண்டு வரவும்.
தொலைப்பேசியில் என்னிடம் ஆலோசனை பெறுகிறவர்கள், வேதவசன சந்தேகம் கேட்கிறவர்கள், குடும்ப பிரச்சனைக்கான ஆலோசனை பெறுபவர்கள் அல்லது ஜெப குறிப்புகளை பகிர்ந்துக்கொள்கிறவர்கள் காலை 8 மணியிலிருந்து இரவு 11 மணிவரை என்னோடு தொலைபேசியில் தொடர்புக்கொள்ளலாம்.
தினசரி மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை போனில்
தொடர்புக்கொள்ள முயலவேண்டாம். குறிப்பிட்ட அந்த நேரம் நேரில் வருபவர்களுக்காக ஜெபிக்கும் நேரமாகும். மேலும் அது நாங்கள்
ஓய்வு எடுக்கும் நேரமுமாகும். அந்த 3 மணி நேரம் தொலைபேசி ஆஃப் செய்து வைத்துவிடுவோம் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன்.
|
|
பெந்தேகோஸ்தேசபை "ஜாமக்காரன்" பாஸ்டர்.T.S.பாலன் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் |
|
|
கேரளா மாநிலத்தில் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த பாஸ்டர்.T.S.பாலன் அவர்கள் 24-7-2013 அன்று தன் 57வது வயதில் இருதய அடைப்பால் மரணமடைந்தார். பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்த பாஸ்டர்
டி.எஸ்.பாலன் அவர்கள் மிகவும் ஏழைகுடும்பத்தில் பிறந்து - இரட்சிக்கப்பட்டு பெந்தேகோஸ்தே சபையில் வைராக்கியமுள்ள விசுவாசியாக இருந்தவர். இவர் ஜாமக்காரன் வாசகராவார். ஜாமக்காரனை வாசித்தப்பின்தான் கேரளாவில்
பெந்தேகோஸ்தே சபையில் ஆங்காங்கு நடக்கும் ஊழல்களை, பாஸ்டர்மார்களின்
இரகசிய பெண் தொடர்புகளை, இரகசிய போட்டோ கருவிகளை பொருத்தி ஆதாரத்துடன் அந்த புகைப்படங்களை அந்தந்த பாஸ்டர்மார்களுக்கே அனுப்பி அறிவித்து அவர்கள் திருந்தாவிடில் அதை தன் பத்திரிக்கையான
டிஃபென்டர் (Defender) என்ற பத்திரிக்கையில் பகிரங்கமாக வெளியிடுவார்.
Defender என்ற இவரின் மலையாள பத்திரிக்கை கேரளா மாநிலத்தில் மிக பிரசித்தம். அவர் பாரமெல்லாம் தன்
பெந்தேகோஸ்தே சபை உண்மையான சபையாக மாறவேண்டும் என்பதாகும். பாஸ்டர்மார்களின் எல்லா
மாய்மாலங்களையும் பச்சைபச்சையாக வெளிப்படையாக ஆதாரத்துடன் இவர் எழுதுவதினால் பல பாஸ்டர்கள் இவரை வெறுத்தார்கள். பலமுறை கூலிபடைமூலம் இவரை தாக்கி கொல்ல ஏற்பாடு செய்தினர், பலமுறை இவர் உயிர் தப்பினார், இவர்மேல் 4 கிரிமினல் குற்றச்சாட்டை பொய்யாய் சுமத்தினார்கள். போலீஸ் இவர் அலுவலத்துக்குள் எந்த முன்அறிவிப்பும் இல்லாமல், வாரண்ட் இல்லாமல் புகுந்து 3 கம்பியூட்டர்களையும் அது சம்பந்தப்பட்ட கருவிகளையும், அலுவலக
ஃபைல்களையும், அவருடைய பழைய பத்திரிக்கைகயையும் அள்ளி எடுத்துக்கொண்டு போனார்கள். பாஸ்டர்.பாலனையும் கையில் விலங்கிட்டு கைது செய்து
குற்றபத்திரிக்கை சமர்ப்பிக்காமல் 13 நாட்கள் ஜெயிலில் அடைத்தார்கள். இவரின் மூத்தமகன் கம்பியூட்டர் எஞ்சினியர், அவரையும் கைது செய்தார்கள். ஒரு பத்திரிக்கை ஆசிரியரை, காரணமில்லாமல் கைது செய்தார்கள் என்ற செய்தியையும், விவரங்களையும் எல்லா தினசரி பத்திரிக்கைகளிலும் வெளியிட்டு டிவியிலும் அந்த செய்தியை வெளியிட்டு எல்லா பத்திரிக்கைகளும் தங்கள் கண்டனங்களை அரசாங்கத்துக்கு தெரிவித்தபின்
கேரளா கோர்ட் போலீஸ்ஸின் செயலை கண்டித்து அரசாங்கத்துக்கு சம்பந்தப்பட்ட போலீஸை தண்டிக்க அறிவுறுத்தியது. வெளிநாட்டு பண உதவி பெரும் பணக்கார பெந்தேகோஸ்தே பாஸ்டர்மார்
பெரிய தொகையை லஞ்சமாக போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்களுக்கும், மேல் அதிகாரிகளுக்கும் கொடுத்து பாஸ்டர்.பாலனை கைது செய்து பழிதீர்த்துக்கொண்டனர். ஆனால் அவர்
குற்றவாளி அல்ல என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வெளிவந்தபின் அவர் பத்திரிக்கை விற்பனை 10 மடங்காக கூடியது. அதன்பின் பாஸ்டர்.பாலன் பத்திரிக்கை அலுவலகத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை கேள்விப்பட்ட விவரமறிந்த ஏராளமான
பெந்தேகோஸ்தே விசுவாசிகள் பாஸ்டர்.பாலனுக்கு புதிய லேட்டஸ்ட் கம்பியூட்டர்களையும், நவீன கருவிகளையும் வாங்க உதவி செய்தனர்.
நான் இரண்டுமுறை கேரளாவில் அவர் வீட்டிற்க்கு நேரில்சென்று அவரை சந்தித்து அவர் துணிச்சலோடு எழுதுவதற்கு பாராட்டு தெரிவித்து ஜெபித்துவந்தேன். அவர் என்னிடம் அடிக்கடி சொல்லும் விஷயம்
ஜாமக்காரன்தான் எனக்கு முன்மாதிரி (ரோல்மாடலாக அமைந்தது). ஆனால்
அந்நியபாஷை விஷயத்தில்மட்டும் நம் இருவருக்கும் கருத்து வித்தியாசம் உண்டு. அதையும் நாம் இருவரும் உட்கார்ந்து பேசினால் ஒருமித்த கருத்தாக மாற்றலாம் என்றார்.
இவர் மரிக்கும்முன் சகல ஆயத்தங்களையும் செய்து வைத்திருந்தார். தன் மரித்தபின் அடக்க ஆராதனை எப்படி நடத்தவேண்டும் என்று 2 பாஸ்டர்மார்களிடம்
உயிலாக எழுதி சீல் வைத்து பாஸ்டர்களிடம் கொடுத்து
என் மரணத்துக்குபின் இதை திறந்துபார்த்து அதன்படி என் அடக்க ஆராதனை நடத்தவேண்டும் என்று கூறியிருந்தார். அடக்க ஆராதனையில் அவரை புகழ்ந்து யாரையும் பேச அனுமதிக்கக்கூடாது என்று எழுதியிருந்தார்.
மரணத்துக்குபின் என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தை அடக்க ஆராதனைக்கு வந்தவர்களுக்கு இலவசமாக கொடுக்கவேண்டும் என்று எழுதியிருந்தார். இப்போது அவர் பத்திரிக்கையை தொடர்ந்து நடத்த யாருமில்லை. அவரே
தன் பத்திரிக்கையை தன் மரணத்துக்கு பின் யாரும் தொடர்ந்து நடத்தக்கூடாது என்று உயிலில் எழுதி வைத்துப்போனார். அவர் துணிச்சலான எச்சரிப்புகளுக்காகவும் ஆவிக்குரிய ஆலோசனை தாங்கிவந்த அவர் பத்திரிக்கைக்காகவும், தைரியமான அவரின் எழுத்து சேவைக்காகவும் தேவனை துதிக்கிறேன். அவர் மனைவி, பிள்ளைகளுக்கு கர்த்தர் ஆறுதல் அளிப்பாராக (பாஸ்டர்.பாலன் அவர்கள்
BA., BD.Dmin (Sherampore), MSc-மனசாஸ்திரம், MA ஜெர்னலிசம், LLB-வக்கீல் பட்டம் போன்ற பலபட்டங்களை பெற்ற பெரும் பட்டதாரியாவார். அவர் பத்திரிக்கைகள்
சந்தா விவரம் எழுதிய இடத்தில் வருடசந்தா-LIFE-சந்தா என்று எழுதி,
LIFE-சந்தா என்றால் இந்த பத்திரிக்கை ஆசிரியரான
என் மரணம்வரைமட்டுமே என்று குறிப்பிட்டு எழுதியிருப்பது மிகவும் வித்தியாசமான அறிவிப்பாகும்.
|
|
வடக்கு கேரளா CSI திருமண்டலத்தின்
ஓய்வு பெற்ற பிஷப்.Rt.Rev.George Isaac அவர்கள்
கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் |
|
|
Rt.Rev.George Issac |
என்னை நேசிக்கும் கேரள மாநில CSI பிஷப்மார்களில் ஒருவர்
Rt.Rev..ஜார்ஜ் ஐசக் அவர்களாவார். இவர் கேரளாவில் எர்ணாகுளம் நகரில் பிராட்வேயில் உள்ள
CSI சபையில் ஆயராக பணியாற்றும்போது இரண்டுமுறை அவர் சபைக்கு என்னை அழைத்து கன்வென்ஷன் நடத்தியிருக்கிறார். நல்ல பாடகர். நல்ல ஆவிக்குரிய ஜெபிக்கும் ஆயராகவும் பணியாற்றியவர். அன்றைய பிஷப்புடன் ஏற்பட்ட மனதாங்கலில் தன் ஆயர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். வெல்லூர்
CMC ஆஸ்பத்திரியில் தலைமை Chaplinist-ஆக ஆஸ்பத்திரி Bபோர்டு இவரை பயன்படுத்திக்கொண்டது. அப்படியே தனக்கு குழந்தை இல்லாத குறையை தீர்க்க நீண்டநாள் பல பரிசோதனைகளையும் சிகிச்சையையும்
CMC-யில் இருந்துக்கொண்டே மேற்கொண்டார். அந்த சந்தர்ப்பத்தில்தான் நான் குடியிருந்த என் சொந்த ஊரான சேலத்தில்
CSI, மார்தோமா, யாக்கோபையா, கத்தோலிக்கர் ஆகிய சபைகளில் உள்ள மலையாளிகள் ஆராதிக்க இயலாமல் சேலத்தில் வாழ்ந்துவந்தார்கள். மேலும் கேரளத்திலிருந்து பல்வேறு கல்லூரிகளில் படிக்க வந்த கேரளவிலிருந்து வந்து தங்கியுள்ள மலையாளம் பேசும் வாலிபபிள்ளைகள் ஏராளமாக சேலத்தில் தங்கியிருந்தார்கள். இவர்களை ஒன்றுசேர்த்து சேலம் ஜங்ஷன்
Holy Trinity CSI சபையில் ஒவ்வொரு ஞாயிறும் மாலை நேரத்தில் மலையாளத்திலேயே சபை ஆராதனையை ஆயரின் ஒப்புதலோடு தொடங்கி நடத்தினேன். அப்போது சேலத்தில் குடியிருந்த சகோ.Jacobe சகோ.Johnson ஆகியவர்கள் சேலத்தில் மலையாளத்தில் ஆராதனை நடத்த எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். ஆரம்பத்தில்
திருவல்லா, கோட்டயம், கோயமுத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள
CSI (அச்சன்மார்களை) ஆயர்களை வாரம் ஒரு ஆயர்வீதம் சேலத்திற்கு வரவழைத்து மலையாளத்திலேயே ஆராதனை நடத்தி அன்றே அந்த ஆயர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்பிவிடுவார்கள். அந்த சூழ்நிலையில்
Rev.George Isaac அவர்கள் வெல்லூரிலிருந்து சேலம் வந்து மலையாள ஆராதனையையும்,
திருவிருந்து ஆராதனையையும் நடத்தி எனக்கு அவர் ஆலோசனை கூறினார். இனி நீங்கள்
கேரளத்திலிருந்து மலையாள ஆயர்களை ஒவ்வொருவாரமும் அதிக செலவு செய்து வரவழைக்கவேண்டாம்.
நானோ அல்லது வெல்லூரில் உள்ள மற்ற மலையாள ஆயர்களோ சேலம் வந்து ஆராதனையை நடத்தி உதவுகிறோம் என்று கூறி என்னை அவர் மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். அப்படியே அவரும் மாதம் இருமுறை சேலம் வந்து
மலையாள ஆராதனையை நடத்தி உதவினார். வெல்லூரிலும், சென்னையிலுள்ள வேறு
மலையாள ஆயர்களையும் ஒவ்வொருவாரமும் மலையாளபாஷையில் ஆராதனை நடத்த அவர்களை சேலத்திற்கு அனுப்பி உதவினார். இவர் வடக்கு கேரளா
CSI டையோசிஸ்க்கு பிஷப்பாக CSI சினாடால் பிஷப்பாக நியமிக்கப்பட்டார்.
|
கோயமுத்தூர் டையோசிஸ்க்கு எச்சரிக்கை |
அன்று CSI வடக்கு கேரளாவில் பிஷப் எலக்ஷன்
நடந்தும், திருமண்டலத்தில் பலர் பிஷப் லிஸ்டில்
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் பிஷப்பாக வராதபடி தடைகளை நீதிமன்ற Stay ஆர்டர் மூலமாக உண்டாக்கினார்கள். இது பல மாதமாக முடிவுக்கு வராமல் நீண்டுபோனதால்
சினாட் கமிட்டி CSI சட்டப்படி தாங்களாகவே Rev.George
Isaac அவர்களை தெரிந்தெடுத்து வடக்கு கேரளா CSI திருமண்டலத்திற்கு பிஷப்பாக நியமித்தார்கள். இவர் அந்த குறிப்பிட்ட திருமண்டல மக்களால் பிஷப்பாக ஜனநாயக முறைப்படி தெரிந்தெடுக்கப்படவில்லை. ஆனால்
சினாட் நிர்வாக கமிட்டியினால் டையோசிஸ் மக்களின் விருப்பமில்லாமலேயே பிஷப்பாக நியமிக்கப்பட்டவர் ஆவார்.
இதுதான் CSI சினாடின் சட்ட ஒழுங்காகும். கோயமுத்தூர் CSI டையோசிஸ்சுக்கும் இப்படிப்பட்ட நிலைவராமல் பார்த்துக்கொள்வது நல்லது என்று இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த கட்டுரையை 2013 செப்டம்பர் மாதம் 18ம்தேதி எழுதிமுடித்தேன். இந்த குறிப்பிட்ட தேதி வரை கோயமுத்தூர் டையோசிஸ்ஸில் தெரிந்தெடுக்கப்பட்ட பேனலில் வந்த நான்கு நபர்களில் ஒருவர் சில நீதிமன்ற தடைகளால்
பிஷப்பாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலை நீண்டுபோனால்
CSI சினாட் தலையிடவேண்டிவரும். நம் வேதத்தில் யோசேப்பு அறியாத
பார்வோன் ஆட்சியில் இருந்தான் என்று எழுதப்பட்டதைப்போல்
கோயமுத்தூர் டையோசிஸ்ஸிக்கு சம்பந்தபடாத வேறு டையோசிஸ்ஸிலிருந்து ஒரு ஆயரை
CSI சினாட் பிஷப்பாக நியமிக்க வேண்டிவரும். தூத்துக்குடி டையோசிஸ்ஸில் இப்போது பொறுப்பில் இருக்கும் மதுரை ஆயர் பிஷப் பொறுப்பில் சினாட் நியமித்ததைப்போல் ஒருவரை சினாட் கட்டாயப்படுத்தி இவர்தான்
கோயமுத்தூர் பிஷப் என்று நியமித்தால் டையோசிஸ் மக்கள் ஒன்றும் செய்யமுடியாது. கோர்ட்டுக்கும் போகமுடியாது!. அப்படி ஒரு நிலைவராதபடி இப்போதே சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற கேஸ்களை வாபஸ் வாங்கி ஒருவருக்கொருவர் ஒப்புவராகி எல்லாரும் இணைந்து ஜெபித்தால் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட நால்வரில் ஒருவர் பிஷப் ஆக அறிவிக்கப்படுவார். இப்போது பிஷப் பேனலில் தெரிந்தெடுக்கப்பட்ட நால்வரில் இரண்டுபேர்கள் மீது ஆதாரப்பூர்வமான பல குற்றச்சாட்டுகள் வருடங்களுக்குமுன்பே ஏராளமாக இருந்தது என்று கேள்விப்படுகிறோம். ஆனால் இனி வேறு வழியில்லை. இவர்களில் யாராவது ஒருவரை சீக்கிரம் பிஷப்பாக அறிவிக்கப்படவேண்டியது அவசியம். காரணம் கோவை திருமண்டலத்தில்
பிஷப் இல்லாததால் ஏராளமான புதிய திட்டங்கள், முடிவுகள் எடுக்க முடியாதபடி இருக்கிறது. ஜெபிப்போம்.
பிஷப்.ஜார்ஜ் ஐசக் அவர்கள் தன் கருத்துக்கு ஒத்துப்போகாதவர்களை தைரியமாக கண்டிப்பார். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஆவிக்குரிய நடவடிக்கைகளில் தவறை கண்டாலும் அவர்களை வெளிப்படையாக கண்டித்து பேசிவிடுவார். அவர்கள் எவ்வளவு பிரசித்திப்பெற்ற ஊழியரானாலும் டையோசிஸ்க்குள் வருவதைகூட அவர் தடைசெய்ய தயங்கியதில்லை. சகோ.DGS.தினகரனின் இயேசு அழைக்கிறார் ஊழியம் வடக்கு கேரளா மலபாரில் நடத்த அனைத்து சபைகளும் பிஷப்மார்களும், பெந்தேகோஸ்தே பாஸ்டர்களும்,கத்தோலிக்கசபை பிஷப்மார்களும் இணைந்து நடத்த கூட்ட ஏற்பாடுகளை தொடங்கினார்கள். பல லட்சரூபாய் செலவில்
கள்ளிக்கோட்டை நகரில் இயேசு அழைக்கிறார் கூட்டம் நடத்த விளம்பரமும் செய்தாகிவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் இயேசு அழைக்கிறார் அலுவலகத்திலிருந்து சகோ.தினகரன் அவர்களின் ஊழியத்துக்கு
லட்சக்கணக்கான மிகப்பெரும் தொகையை கமிட்டி கொடுப்பதாக இருந்தால்தான்(DGS.தினகரன்) பிரசங்கிக்க வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இயேசு அழைக்கிறார் பொறுப்பாளர்கள் கேட்ட தொகை
மிகப்பெரிய தொகையாக இருந்ததால் அவர்கள் கேட்ட அந்த தொகையில்
பாதி மட்டுமே பொதுமக்களிடம் வசூலித்து தாங்கள் கொடுக்க
இயலும் என்று Calicut-ல் கன்வென்ஷன் கமிட்டியில் அறிவித்தபோது பிஷப்.Rt.Rev.George
Isaac அவர்கள் வெகுண்டு இயேசு அழைக்கிறார் கன்வென்ஷன் கமிட்டியை உடனே கலைத்துவிட்டு
பணத்துக்காக பிரசங்கம் செய்யும் ஊழியர் இந்த கேரளத்துக்கே வரவேண்டாம் என்று வெளிப்படையாக அந்த கமிட்டியில் அறிவித்து அதை தினசரி செய்திதாளிலும் அறிவிப்பாக வெளியிட்ட அந்த செய்தி கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டோம். மேலும்
இயேசு அழைக்கிறார் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அவர்களின் மேடையில்
வடக்கு கேரளா CSI திருமண்டலத்திலுள்ள ஆயர்கள் யாரும் கலந்துக்கொள்ள கூடாது என்றும், அவர்களின் மேடையில் எந்த ஆயரும்
அமரக்கூடாது என்றும் பகிரங்கமாக தைரியமாக அறிவித்த கட்டளையிட்டு
ஒரே பிஷப் இவர்தான் என்பது இந்தியா அனைத்திலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
|
CSI மாடரேட்டரையே பதவியை விட்டு விலக கோரின முதல் பிஷப் |
கேரளத்தில் பிரசித்திப்பெற்ற வானொலி நிகழ்ச்சி
ஆத்மீக யாத்திரை என்பதாகும். அதில் பிரசங்கிப்பவர் சகோ.K.P.யோகன்னன் என்பவராவார். இவர் பிரசங்கம் மூலம் இரட்சிக்கப்பட்டவர்கள் குடியை நிறுத்தியவர்கள் மிக அதிகம். இவர் அத்தனை பிரச்சித்திப்பெற்ற பிரசங்கியார் ஆவார்.
இந்தியா முழுவதிலும் இவருக்கு சுமார் 6000 சபைகள் உண்டு.
விசுவாசிகளின் சபை Believers Church என்ற பெயரில் அத்தனை சபைகளும் இவர் ஸ்தாபித்ததாகும். இவரின் உண்மையான ஊழியத்தை அறிந்த உலக நாடுகளிலுள்ள வெள்ளையர்களின் ஸ்தாபனங்கள் இவருக்கு கோடிகோடியாக
டாலர்களை அள்ளிக் கொடுத்தார்கள். இவரும் அந்தபணத்தை மிக உண்மையாக செலவழித்தார். நிறைய ஊர்களில்
வேதாகம கல்லூரிகளை நிறுவினார். இப்போதும் கேரளாவில்
திருவில்லா என்ற இடத்தில் பிரசித்திப் பெற்ற
மிகப்பெரிய வேதாகம கல்லூரியை நிறுவி இப்போதும் அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவிலேயே மிக அதிகமாக வெளிநாட்டு பணம் பெரும் 2 பெரிய ஸ்தாபனங்களில் 1).
அமிர்தானந்தமாயி அம்மா அவர்களின் இந்துமத ஸ்தாபனமாகும். அதற்கு அடுத்தப்படியாக வெளிநாட்டுபணம் மிக அதிகம் பெறுபவர் பிஷப்.K.P.யோகன்னன் அவர்களின் ஸ்தாபனம்தான் என்று பத்திரிக்கையாளர்களின் கணக்கெடுப்பில் அறிவிக்கப்பட்டு பிரசித்தி பெற்றவர்.
|
|
|
Bishop.K.P.Yogannan
(Believers Church) |
|
|
Most.Rev.K.J.SAMUEL (Rtd) |
மிக எளிமையான ஊழியர் என்று எல்லாராலும் அறியப்பட்ட
சகோ.K.P.யோகன்னன் பிஷப் ஆகவேண்டும் என்று விரும்பினார். 6000 சபைகளுக்கு மேல் மிக அதிகமான சபைகளை உருவாக்கியதால் சகோ.கேபி.யோகன்னன் அவர்கள் பிஷப் ஆக பதவி ஏற்கவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டார். அந்த கட்டத்தில் இவரை பிஷப்பாக அபிஷேகம் செய்ய
5 பிஷப்மார்கள் தேவை. இவரின் பழைய பூர்வீக தாய் சபையான மார்தோமா சபையானது, பெந்தேகோஸ்தே பாஸ்டர் ஒருவரை நாங்கள் பிஷப்பாக அபிஷேகம் செய்யக்கூடாது என்று ஒதுங்கிவிட்டனர். எப்படியோ நம்
CSI-யில் அன்றைய காலத்தில் மாடரேட்டராக இருந்த Most.Rev.K.J.SAMUEL அவர்கள் தன் பால்ய நண்பருக்கு உதவ முன்வந்தார்.
தென்இந்தியாவில் தன்னோடு சேர்த்து 2 பிஷப்மார்களும், வடஇந்திய
CNI-யிலிருந்து 2 பிஷப்மார்களையும் எப்படியோ ஏற்பாடு செய்து அழைத்துவந்துவிட்டார். பாஸ்டர்.யோகன்னான் அவர்களுக்கு பெரும் தொகையை லஞ்சமாக கொடுத்ததால் அவர்கள் இந்த சாட்சியில்லா செயலுக்கு ஒத்துக்கொண்டார்கள். இதில் ஒரு முக்கிய பிஷப்புக்குமட்டும்
2 கோடி ரூபாய்கள் கொடுத்துள்ளார்கள். இந்த 5 பிஷப்மார்களையும் ஒன்றாககூட்டி அபிஷேக ஆராதனையை உலகமறிய நடத்தினார்கள். அனைத்து பத்திரிக்கைகளும் புகழ
திருவல்லா நகரில் வைத்து CSI-யின், CNI-யின் 5 பிஷப்மார்கள்
K.P.யோகன்னனுக்கு தலையில் கைகளை வைத்து அபிஷேகம் செய்து
பிஷப்பாக பிரதிஷ்டை செய்ததாக அறிவித்தார்கள். இப்போதுதான் வடக்கு கேரளா பிஷப்
Rt.Rev.Dr..ஜார்ஜ் ஐசக் அவர்கள் இது மிக மோசமான முன்மாதிரியாகும். மாடரேட்டரும், மற்ற பிஷப்மாரும்
CSI, CNI சட்டத்தை தூக்கி எரிந்துவிட்டு ஒரு பெந்தேகோஸ்தே பாஸ்டரை பிஷப்பாக அபிஷேகித்தது கண்டிக்கத்தக்கது, தண்டிக்கத்தக்கது என்று அனைத்து தினசரி செய்திதாள்களுக்கும் பேட்டி கொடுத்தார்.
CSI-யில் அங்கமாயிருக்கும் ஒருவர் பெந்தேகோஸ்தே சபைக்கு சென்று முழுகி ஞானஸ்நானம் எடுத்தாலே
CSI, CNI சட்டப்படி அவர்களை சபையைவிட்டு நீக்கி
Excommunicate செய்துவிடுகிறோம். அப்படியிருக்க மாடரேட்டர் இந்த பெரிய சட்ட மீறுதலை நடத்தி மற்ற பிஷப்மார்களையும் அந்த தவறுக்கு உட்ப்படுத்தி நம்
CSI சட்டத்தை மீறிவிட்டார். ஆகவே மாடரேட்டர் தன் பதவியை
ராஜினாமா செய்யவேண்டும் என்று அறிக்கை கொடுத்தார். ஆனால் குற்றச்சாட்டை விசாரித்து தீர்ப்பு கூறும் ஸ்தானத்தில் உள்ளவரே அந்த தவறை செய்ததால், யார் இந்த குற்றச்சாட்டுக்கு தீர்ப்புகொடுப்பது?. சட்டப்படி
உதவி மாடரேட்டர் அந்த பொறுப்பெடுத்து மாடரேட்டரை தண்டிக்கவேண்டும். ஆனால்
மாடரேட்டர் தன் பதவியை தீர்ப்பு கூறும்வரை தற்காலிகமாக ராஜினாமா செய்யவேண்டும். ஆனால் மாடரேட்டரே, மாடரேட்டர் பதவியை விட்டுக்கொடுக்கவிரும்பவில்லை. இதை அறிந்தவுடனே வடக்கு கேரளா பிஷப்பான
Rt.Rev.Dr.ஜார்ஜ் ஐசக் தன் பிஷப் பதவியிலிருந்து
ராஜினாமா செய்து கேரளத்தில் அனைத்து CSI டையோசிஸ்களிலும் பெரும் பிரளயத்தையே உண்டாக்கிவிட்டார். ஏராளமான பிஷப்மார்கள், அரசியல்வாதிகள், கேரள முதல்மந்திரி ஆகிய பலர் இதில் தலையிட்டு பிஷப்.ஜார்ஜ் ஐசக் ராஜினாமாவை திரும்ப பெற வைத்தனர். அந்த அளவு நீதி நியாத்துக்காக போராடும் குணம் படைத்தவர்தான் மரித்த
Rt.Rev.Dr.ஜார்ஜ் ஐசக் அவர்கள் ஆவார். இவர் மரணம்
CSI, CNI சபைகளுக்கு பெரும் இழப்பாகும். லஞ்சப்பணம் கொடுக்காமல் பிஷப் பதவி பெற்ற இவருக்கு பிஷப் பதவி ஆசை இல்லாதவர் என்ற பெயர் இவருக்கு உண்டு.
பிஷப் பதவிதான் இவரை தேடி வந்தது. இது
CSI சபை சரித்திரத்தில் குறிக்கப்படவேண்டியதாகும்.
இன்று தமிழ்நாட்டில் பிஷப்பாக வரும் பலர் ஏதாவது ஒரு பெயரில் பெரிய தொகை கொடுத்துதான் பிஷப் பதவி பெற்றுக்கொள்ளும் அவமானகரமான நிலை இன்னும் தொடருகிறது. அப்படி பெரும்தொகை கொடுக்க
பிஷப்பாக வரும் எந்த ஆயர்களாலும் முடியாது. ஆனால் அந்த ஆயருக்கு பின்னால் பெரும்தொகை கொடுக்க அதுவும் கோடிக்கணக்கில் பிஷப் சார்பில் பணம் கொடுக்க
பெரும் செல்வந்தர்கள் காத்திருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய
சுய ஆதாயம் இல்லாமலா! இத்தனை பெரிய தொகையை இலவசமாக கொடுத்து ஒருவரை
பிஷப்பாக கொண்டுவருவார்கள்?. தான் சொல்வதைப்போல் கீழ்ப்படியும் ஒருவர்
பிஷப்பாக இருந்தால்தான் தனக்கும் தன்னை சார்ந்தவர்களின் பதவி உயர்வு, புதிய வேலை, இடமாற்றம்,
CSI சபைக்கான கடைகளை வாடகைக்கு விடுவது, இப்படி பல வகையில் நல்ல வருமானத்தை எதிர்ப்பார்த்துதான் லஞ்சப்பணம் கொடுத்து ஒருவரை பிஷப்பாக ஆக்குகிறார்கள். இந்த இரகசியத்தை என்னிடம் கூறியவர் ஒரு ஆயர். இவர் ஒரு காலத்தில் பிஷப் எலக்ஷனுக்கு நின்று அதிக ஒட்டு பெற்றும் பதவி கொடுக்கும் இடத்தில் கேட்ட கூடுதல் பணம் இவருக்காக கொடுத்து உதவ பணக்கார பணமுதலைகள் இல்லாததால் இவர் பிஷப் எலக்ஷனில் தோற்றுப்போனவர் ஆவார். இப்படியிருக்கிறது நம்
CSI, லூத்தரன் சபை தலைவர்களின் பெருமை!.
மரித்த பிஷப்.Rt.Rev.Dr.ஜார்ஜ் ஐசக் அவர்கள் விட்டுபோன அவர்களின் மனைவியின் ஆறுதலுக்காக ஜெபிப்போம். பிஷப் அவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கவில்லை. இவரைப்போல் தெய்வபயம் உள்ள
ஜெபிக்கும் பிஷப் ஒவ்வொரு CSI டையோசிஸ்க்கும் கிடைக்கவேண்டும் என்று ஜெபிப்போம்.
|
|
வானத்தின் பொல்லாத ஆவிகளை கட்டிவிட்டோம்: |
ஏஞ்சல் டிவியில் 27.8.2013 சகோ.மோகன் சி.லாசரஸ், சாதுசெல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார் ஆகியோரின் சம்பாஷணைகளில் கூறப்பட்டது. கடந்த நாட்களில் நாங்கள் ஜெபித்தபின்
வானத்தின் பொல்லாத ஆவிகள் கட்டப்பட்டது. இனி வானத்தின் பொல்லாத ஆவிகளால் யாருக்கும் தொல்லை இருக்காது. தடையிருக்காது. நாம் வாலிபர்களையும், மற்றவர்களையும் இனி எப்படி ஜெபிக்க வேண்டும் என்று நாம் சொல்லி கொடுக்கவேண்டும். இனி செய்யும் ஜெபங்கள் தடையில்லாது நேரே பரலோகம் செல்லும்.
ஜெபிப்பவர்கள் கவனிக்கவும்: இவர்கள் கூறுவதுபோல் பிசாசை யாரும்
கட்டிவைக்க முடியாது, பிசாசை சபிக்கவும், பாதாளத்துக்கு அனுப்பவும் மனிதர்கள் யாருக்கும் அதிகாரம் கிடையாது. இது
பொய்யான செய்தி. இவர்கள் கூற்றை நம்பவேண்டாம். இப்படி இவர்கள் கூறும் புதுபுது
வெளிப்பாடுகளையும் நம்ப வேண்டாம்.
|
|
ஜாமக்காரனை போட்டு தள்ளப்போறோம்: |
27.8.2013 அன்று சேலத்தில் நான் என் அலுவலகத்தில் இருந்தபோது தொலைபேசியில் பேசியவர்கள் ஆரம்பத்தில் மிக மிக மரியாதையாகத்தான் பேசினார்கள். நான் பதில்கூறிய உடன் அவர்களின் இயல்பான வார்த்தை வெளியாயின.
"நாலுமாவடி திறப்பின் வாசல் பற்றி எழுத நீ யார்?.
அங்கு கட்டிடம் இடிந்து விழவில்லையே? நீ போய் பார்த்தாயா?
அப்படி உனக்கு சொன்னது யார் என்ற விலாசம் ஏன் ஜாமக்காரனில் எழுதவில்லை. சன் டிவியில் செய்தி வந்தது உண்மை. ஆனால் அந்த செய்தி
உண்மையா! இல்லையா! என்று ஏன் நீ கேட்கவில்லை?". இப்படி படபடவென்று அடக்கமுடியாத கோபத்தோடு வார்த்தைகள் வெளிவந்தது.
"திறப்பின் வாசல் கட்டிடம் இடிந்து
இரண்டு பேர் செத்தார்கள் உண்மைதான்!. ஆனால் கட்டிடம் ஒரு பக்கம் இடிந்து விழவில்லையே! இன்றும் அது நன்றாகத்தானே காணப்படுகிறது (27.8.2013 மதியம் 2.30) நாங்கள் வேன் வைத்து இன்று
நாலுமாவடி போகிறோம். கட்டிடம் இடிந்ததா? என்பதை நேரில சென்று விசாரிப்போம்!. அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று நாங்கள் அறிந்தால், அங்கு இருந்து நேரே
சேலம் வந்து உங்களை போட்டு தள்ளிவிட்டுதான் மறுவேலை!". நானும் அவர்களோடு
"நான் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்துவாருங்கள்" என்றேன்.
தொலைபேசி செய்தியில் அவர்களின் பெயரும், பேசும் இடம் கோயமுத்தூர் என்றும் மட்டும் கூறினார்கள். இவர்கள் என் வீட்டில் தொலைபேசியில் பேசியது
பதிவாகியுள்ளது. என்னிடம் பேசிய இவர்கள் இயேசு விடுவிக்கிறார் ஜெபகுழுவினர் என்று எண்ணுகிறேன். இவர்கள் நாலுமாவடி திறப்பின் வாசல் கட்டிடத்தைகுறித்து மிக நல்ல வைராக்கியம் கொண்டுள்ளார்கள் என்று விளங்கிக்கொண்டேன்.
திறப்பின் வாசலுக்கு எதிராக பேசுபவர்களை போட்டுதள்ளும் பாரம் உள்ள ஜெபவீரர்கள். சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களுடன் இருப்பது எத்தனை சிறப்பு பார்த்தீர்களா? இப்படித்தான் திருப்பத்தூர் 3 நாள் உபவாச ஜெபக்கூட்டத்தில் பல வருடங்களுக்குமுன், ஆண்டவரே, ஊழியர்களைப்பற்றி தவறாக செய்தி எழுதும்
ஜாமக்காரனை அழியும், எழும்பவிடாதிரும், ஊழியர்களுக்கு விரோதமாய் செய்திகளை பரப்பும் ஜாமக்காரனை அழியும். இப்படிப்பட்ட ஜெபத்தை ஏறெடுக்க சகோ.சாம்ஜெபதுரையுடன் இவரும் இணைந்து நால்வர் அணி ஜெப ஊழியர்களாக ஜெபித்ததை கேள்விப்பட்டு அந்த ஜெபத்தை என்னால் மறக்கமுடியவில்லை. ஜெபிக்க சென்ற ஜெபவீரர்கள் எப்படிப்பட்ட ஆவியை பெற்றவர்கள் என்பது இப்போதாவது வாசகர்கள் விளங்கிக்கொண்டால் சரி. இந்த ஊழியர்களுடன் அணி நிற்கும் ஜெப வீரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நான் விளக்காமலே விளங்குகிறதா? இவர்களா
பிசாசை கயிறு போட்டு கட்டி வைத்தார்கள்? இப்போது பிசாசு என்பவன் வானத்தில் இல்லை என்கிறார்கள். ஒருவேளை இது உண்மையாக இருக்குமா? காரணம், எல்லா பிசாசும் இப்போது பூமியில் என்னை போன்றவர்களை
போட்டு தள்ளவும், என் ஊழியத்தை அழிக்கவும் பூமியில்தான் உலாவிக்கொண்டு இருப்பதாக அறியமுடிகிறதே! திருப்பத்தூரிலும், திறப்பின் வாசலிலும், ஜெபகோபுரங்களிலும் ஜெபிக்கவேண்டி அங்கு கூடும் மக்களை எண்ணிப் பரிதாபப்படுகிறேன். இவர்களுக்காகவும், இவர்களை ஆசீர்வதித்தும் ஜெபிப்போம். இப்படி ஆசீர்வதித்து ஜெபிக்கதான் நம் தேவன் நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்.
|
|
வீடுகளில் சென்று ஜெபிக்கும் பொய் பேசும் பாஸ்டர்கள் |
ஆவியில் வரம்பெற்ற தீர்க்கதரிசி என்று கூறிக்கொள்ளும் பாஸ்டர் ஒருவர் ஒரு கிறிஸ்தவ வீட்டிற்கு ஜெபிப்பதற்காகச் சென்றார். அந்த வீட்டில்
ஓர் இளம்தாயார் தன் சகோதரியின் இரண்டு பெண் குழந்தைகளோடு இருந்தார். இப்பொழுது தீர்க்கதரிசி என்று கூறிக்கொள்ளும் அந்த பாஸ்டர் மகளே ஜெபிப்போம் என்றார். அந்த தாயாரும் முழந்தாழ் படியிட்டு ஜெபத்திற்கு தயாராய் நின்றுக்கொண்டிருந்தார். அந்த பாஸ்டர் உணர்ச்சி பொங்க ஜெபித்தார்.
"மகளே கடவுள் என்னோடு இப்போது பேசுகிறார். உனக்கு இரண்டு பெண் குழந்தைகளைக் கொடுத்த கர்த்தர் அடுத்ததாக
ஓர் ஆண் குழந்தையை உனக்கு தருவதாக இப்போது என்னோடு சொல்லுகிறார்". ஜெபத்தில் நின்ற பெண், பாஸ்டர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே இடைமறித்து
"ஐயா, என்னோடுள்ள இந்த 2 பெண்குழந்தைகளும் என்னுடைய சகோதரியின் பிள்ளைகள்" என்றாள். உடனே பாஸ்டர் சமாளித்து,
"அதற்கு என்ன உன் சகோதரியின் பிள்ளைகளும் உன் பிள்ளைகளைப்போல்தானே. கவலைப்படாதே நிச்சயம் என்னோடு பேசிய கடவுள் உனக்கு
ஓர் ஆண்குழந்தையைத் தருவதாக வாக்கு பண்ணுகிறார். அதில் மாற்றம் எதுவும் நிச்சயம் வராது" என்றார். ஜெபத்தில் நின்ற பெண் மறுபடியும் இடைமறித்து
"ஐயா, எனக்கு ஏற்பட்ட சுகவீனத்தின் காரணமாக சில வருடத்துக்குமுன்பே என்னுடைய கருப்பை அகற்றப்பட்டுவிட்டது. இனி எப்படி எனக்கு பிள்ளைப்பிறக்கும்?" என்றாள். மறுபடியும் பாஸ்டர் சமாளித்தார்.
"மகளே, கவலைப்படாதே? உலர்ந்த எலும்புகளை உயிரடையச் செய்கிறவர் நம் கர்த்தர். இல்லாதவற்றை புதிதாய் உருவாக்கிட அவரால் கூடும். புதிதாக ஒரு கருப்பையை உருவாக்கி உனக்கு வாக்குளித்தப்படி குழந்தை பிறந்திட கர்த்தர் வழி செய்வார், கவலையைவிடு. திடன்கொள்.அல்லலூயா - ஸ்தோத்திரம்" என்று கூறி அவசரமாக காணிக்கைகூட வாங்காமல் ஜெபத்தை முடித்து அந்த ஊழியர் புறப்பட்டுவிட்டார். அதன்பின் அந்த ஊர் பக்கமே அந்த பாஸ்டர் வரவில்லை என்று கூறினார்கள். இப்படி
தீர்க்கதரிசனம் என்றும் கர்த்தர் சொன்னார் என்றும் கூறிக்கொண்டுவரும் எந்த ஊழியரையும் உங்கள் வீட்டில் சேர்க்காதீர்கள். இப்படிப்பட்ட ஊழியர்கள் இப்போது பெருகிப்போனார்கள்! எச்சரிக்கை!
|
|
ஜெபத்தால் பணத்தை பெருக்குவதாக மோசடி் |
2 பெண்கள் உட்பட மேலும் 4 பேருக்கு வலை |
திருநெல்வேலி மே:21. தினமலர்: வாசுதேவநல்லூர் அருகே ஜெபம் செய்து
நகை மற்றும் பணத்தை பலமடங்கு பெருக்குவதாக கூறி 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சங்கனாபேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்த, அதே பகுதியைச் சேர்ந்த ராமராஜா, அவரது மகன் ஜெயபிரபு, கணேசன் மனைவி
கிரேஸ், கருத்தபாண்டி மனைவி செல்வி ஆகியோர் அவர்களை நோக்கி உங்கள் வீட்டிலுள்ள நகை, பணத்தை எங்களிடம் தந்தால் அதற்காக
நாங்கள் ஜெபபீடத்தில் வைத்து ஜெபம் செய்தால் அது பல மடங்காக பெருகும் என்று கூறினார். இதை நம்பிய சுப்பிரமணியன், 24 பவுன் நகை மற்றும் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக்கொண்ட ஜெயபிரபு,
"நாங்கள் தினமும் உங்கள் பணம், நகைக்காக ஜெபம் செய்கிறோம். தொடர்ந்து நாங்கள் ஜெபம் செய்து வந்தால் பீரோவில் உள்ள உங்கள் பணம் 2 மாதத்தில் பல மடங்காக பெருகிவிடும். 2 மாதம் கழித்து வந்து
நகை மற்றும் பணத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்" என்று கூறி, சுப்பிரமணியனை அனுப்பியுள்ளார். ஆனால் 2 மாதங்கள் கடந்த பிறகும் ஜெயபிரபு நகை மற்றும் பணத்தை சொன்னபடி கொடுக்கவில்லை. அதன் பின்னர் ஒருநாள் அந்த குடும்பத்திலுள்ள 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து சுப்பிரமணியன் நெல்லை எஸ்பி.விஜயேந்திரபிதரியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் வாசுதேவ நல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இளஞ்செழியன் விசாரணை நடத்தி
பெந்தேகோஸ்தே சபை ஜெப வீரர்களான ஜெயபிரபு அரவது தந்தை ராமராஜா செல்வி கிரேஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
ரூபாய் இரட்டிப்பு மோசடியைக்குறித்து ஜாமக்காரனில் முன்பே வாசித்திருப்பீர்கள். 2000 காணிக்கை
திறப்பின் வாசலுக்கு கொடுத்தேன். 10 லட்சம் கிடைத்தது. ஜெபகோபுரத்துக்கு கொடுப்பேன் என்று நேர்ச்சை செய்தேன். உடனே
80 லட்சத்துக்கு ஒரு புதுவீடு வாங்க கர்த்தர் கிருபை செய்தார் என்று ஒவ்வொரு மாதமும் சில ஊழியர்களின் பத்திரிக்கையில் சாட்சி கடிதங்களையும் அவர்கள் ஊழிய விளம்பரங்களையும் வாசித்திருப்பீர்கள். மேலே வாசித்த பண இரட்டிப்பு மோசடிக்கும் இந்த குறிப்பிட்ட
அற்புத ஊழியர்களுக்கும் வித்தியாசம் இல்லையே!.
ஊழியர்கள் ஜாக்கிரதை!.
|
|
வடக்கு ஆப்பிரிக்காவில் மசூதிகள்
இயேசுவண்டை வருகின்றன. |
வடக்கு ஆப்பிரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் பல்லாயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இயேசுவண்டை வந்துள்ளனர் என்ற செய்தி மனதைக் குளிரச்செய்கிறது. மசூதியில் உள்ள அனைவரும் விசுவாசத்திற்குள் வருவது எத்தனை வியப்பிற்குரிய செய்தி. நம்புவதற்குக் கடினமாகவே உள்ளது. மேற்கு
ஆப்பிரிக்காவில் திருச்சபைகளை நிறுவியவர்களின் அறிக்கைகள் இத்தகைய நிகழ்வுகள் அங்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதை அறிவிக்கின்றன. பல இடங்களிலுள்ள மசூதிகளைச் சேர்ந்தவர்கள் முழுமையான விசுவாசத்திற்குள் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மிகச் சாதாரணமாக ஆண்களையும், பெண்களையும் கர்த்தரின் நாமத்தில் அற்புதமான செயல்களைச் செய்யக் கர்த்தர் பயன்படுத்துகிறார். இஸ்லாமியப் பின்னணியிலிருந்து வந்த
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பிற சமுதாயங்களுக்கும்
சுவிசேஷம் பரவவேண்டும் என்பதற்காக உபவாசித்து மன்றாட்டு ஜெபங்களை ஏறெடுத்து வருகின்றனர் என்பது எத்தனை சந்தோஷமான செய்தி. ஒரு திருச்சபைகூட இல்லாத,
இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் இப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகள் உருவாகியுள்ளன. வேறு சில இடங்களில்
இரண்டு ஆண்டுகளுக்குள் நூறு சபைகளுக்கு மேல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் முன்னாள்
ஷேக்குகள், இமாம்கள், இராணுவ வீரர்கள் ஆகியோர் புதிய
கிறிஸ்தவத்தலைவர்களாகி உள்ளனர் என்பது எத்தனை பெரிய அற்புதம்.
நாங்கள் ஏழு ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் இருக்கிறோம். இங்கு
81 இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 50 சதவீதம் இஸ்லாமியர்கள் தங்கள் உள்ளத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்டு மாற்றம் அடைந்திருக்கிறார்கள். அங்கு வாழும் 81 இனமக்களில், 45 இனத்தைச் சேர்ந்தவர்களில் 99 சதவீதம் அல்லது 100க்கு-நூறு பேர்கள் இஸ்லாமியர் என்று அங்கு மிஷனரி பணிசெய்த
ட்ரௌஸ்டேல் என்பவர் ஒரு பேட்டியின் போது கூறினார்.
இஸ்லாமியர்களின் ஆளுகைக்குள் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள்
பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களாகவே இருந்து வருபவர்கள் ஆவார்கள். இஸ்லாமியர் மத்தியில் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும்போது பல முறைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணத்தை நெருங்கி உயிர் பிழைத்த மிஷனரி இயக்கத்தின் தலைவர் ஒருவர் கூறும்போது
கர்த்தர் அப்போஸ்தலர்களுடைய காலத்தில் செயலாற்றியதுபோல இப்போதும் அங்கு கிரியை செய்கிறார். சீஷர்கள் எண்ணிக்கை மிகவும் வேகமாகப் பெருகி வருகிறது. சமயத் தலைவர்கள்
இமாம்கள், ஷேக்குகள் ஆகியோர் சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிகிறார்கள். எனவே, இந்தத் தலைமுறையிலேயே நமது நோக்கம் நிறைவேறிவிடும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை என்று கூறுகிறார்.
ட்ரௌஸ்டேல் அவர்கள் ஆப்பிரிக்க இஸ்லாமியர் நடுவில் நடைபெறும் இந்த அற்புதமான மனமாற்றத்திற்கு கர்த்தரே பொறுப்பானவர் என்று கூறுகிறார். மேலும் இந்த மாற்றம் எங்கள் முயற்சியால் அல்ல என்றும் தெரிவிக்கிறார். இஸ்லாமியரை சீஷராக்கும் இயக்கத்தைக் குறித்தும் அவர்கள் ஊழியத்தில் கையாளும் முறைகள் குறித்தும் இவர் விவரிக்கிறார்.
|
சீஷராக்கும் இவர்களின் இயக்கம் கடைப்பிடிக்கும் சில வழிமுறைகள்: |
முதலில் மெதுவாகச் செல்லுங்கள். அப்பொழுது தான் பின்னர் விரைந்து செயல்படமுடியும்.
இயேசுகிறிஸ்து பன்னிரெண்டு சீஷர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை உலகமெங்கும் சுவிசேஷம் அறிவிக்கத் தகுதி படைத்தவர்களாக அவர்களை உருவாக்கினார்.
ஒருசிலர் மூலமாக அநேகரை ஆதாயப்படுத்துங்கள்.
இயேசுகிறிஸ்து பன்னிரெண்டு பேர்களைச் சீஷர்களாக்கி, அவர்களில் குறிப்பிட்ட நான்கு பேர்களிடம் மிகுந்த அக்கறை காட்டி, அவர்கள் மூலமாக சுவிசேஷம் உலகமெங்கும் பரவச் செய்தார்.
தனிப்பட்ட மனிதர்களை மட்டுமல்ல, குடும்பங்களை குழுக்களை ஊழியத்தில் ஈடுபடுத்துங்கள். புதிய ஏற்பாட்டில் பல குடும்பங்கள் விசுவாசத்திற்குள் குடும்பம் முழுவதுமாக வந்த வரலாறுகளைப் படிக்கிறோம். சுவிசேஷம் கேட்பதற்கு
மக்கள் ஆர்வம்காட்டும் இடங்களிலும், நேரங்களிலும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிப் பிரசங்கியுங்கள். கர்த்தர் தனிப்பட்டவர்களாக, குடும்பங்களாக, குழுக்களாக ஆயத்தம்செய்து
பண்படுத்தி இருக்கும் இடங்களில் சுவிசேஷத்தை அறிவியுங்கள்.
உங்கள் போதனைகளைக்
கிறிஸ்துவிடமிருந்து ஆரம்பிக்காமல் கர்த்தர் உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து தொடங்குங்கள்.
இஸ்லாமியர்களுக்கு ஆதியாகமம் தொடங்கிக் கற்பியுங்கள்.
கற்பிப்பதும், அறிவூட்டுவதும் முக்கியமல்ல,
கண்டறியவதும், கீழ்ப்படிவதுமே முக்கியமானது.
|
|
மின்கட்டண அதிர்ச்சியால் இலங்கை நபர் மரணம்: |
ஆசியாவிலேயே மிக அதிக மின்கட்டணம் வசூலிக்கும் நாடு இலங்கை. ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.47 வசூலிக்கப்படுகிறது.
அனல் மற்றும் புனல் மின்சாரத்தினால் இந்த நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சமீபத்தில் அந்நாட்டு அரசு மின்சாரத்திற்கு 50 சதவீத வரி உயர்வை அறிவித்தது. இதனால் மின்கட்டணம் கணிசமாக உயர்ந்தது. கொழும்பு நகரை சேர்ந்த சமரதாசா வயது 61 மரிக்கும் இரண்டு நாட்களுக்குமுன் மின்சார அலுவலகத்திற்கு வந்த அவர் மின்கட்டணம் குறித்து கேட்டார். மின்சாரத்துறை அதிகாரிகள் மிகப்பெரிய தொகையை சொன்னதால் அதிர்ச்சியடைந்த அவர் அவர்களுடன் காரசாரமாக விவாதித்தார். அதன்பின் அங்குள்ள நாற்காலியில் உட்கார்ந்த அவர் திடீரென மயக்கமடைந்தார். பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் திடீரென்று இறந்துவிட்டார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மின்கட்டண அதிர்ச்சியால் இலங்கையில் இறந்த முதல் நபர் என்று அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
|
இலங்கையில் மசூதி மீது கல்வீச்சு
சிங்களர்கள் தாக்குதலால் பதட்டம். |
2013 ஆகஸ்ட் 12: இலங்கையில் மசூதி மீது சிங்களர்கள் கல்வீசி தாக்கியதால் தலைநகர் கொழும்புவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. இலங்கையில் மொத்தமுள்ள 2 கோடி மக்கள்தொகையில் 70 சதவீதத்தினர் பவுத்த மதத்தை சேர்ந்த சிங்களர்கள். இந்துக்கள் 13 சதவீதம் பேர், முஸ்லீம்கள் 10 சதவீதம், 7 சதவீதம்பேர் கிறிஸ்தவர்கள். இந்நிலையில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் இவர்களை குறிவைத்து தாக்குவது இலங்கையில் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. தலைநகர் கொழும்புவில் கடந்த மார்ச்மாதம் முஸ்லீம்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இந்த தாக்குதல்கள் தொடர்பாக 4 புத்தபிட்சுக்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். சிலநாட்களில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள்மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
தலைநகர் கொழும்புவில் கிராண்ட் டாஸ் பகுதியில் உள்ள
மசூதியை அகற்றவேண்டும் என்று பவுத்தர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
ரம்ஜான் பண்டிகைக்கு பின்னர் அங்கு மசூதி இருக்கக்கூடாது என்று கெடு விதித்திருந்தனர். இந்நிலையில் அந்த மசூதியில் நேற்று முன்தினம் மாலை தொழுகை முடித்து வெளியே வந்தவர்கள் மீது சிங்களர்கள் கல்வீசி தாக்கினர். கிறிஸ்தவர்களானால் பதில் தாக்குதல் நடத்தமாட்டார்கள். ஆனால் இஸ்லாமியர்களோடு மோதினால் பதிலுக்கு முஸ்லீம்கள் உருட்டுகட்டைகளுடன் தெருவில் இறங்கி சிங்களர்களை திருப்பிதாக்கினர். இந்த தாக்குதலில் 2 போலீசார் உட்பட 12 பேர் காயமடைந்தனர். கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர அதிரடிப்படையினர் உட்பட நூற்றுக்கணக்கான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நிலவரம் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று காலை வாபஸ் பெறப்பட்டது. - பத்திரிக்கை செய்தி.
(இலங்கையில் கிறிஸ்தவர்களை சபைகளை சிங்களர்கள் தாக்கினர். ஆனால் கிறிஸ்தவர்கள் திருப்பி தாக்கவில்லை. இது கிறிஸ்துவை வணங்குபவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசமாகும்).
|
|
ஜாமக்காரன் வாசகர்களின் அன்பான கவனத்திற்கு: |
ஆன்லைன் மூலம் பேங்க் வழியாக காணிக்கைகளை இப்போது நிறையபேர் அனுப்ப தொடங்கியிருக்கிறார்கள். இது மணி-ஆர்டர், செக், டிராஃப்ட் ஆகியவைகளைவிட காணிக்கை அனுப்புவதற்கு மிக எளிதானதாகும், காணிக்கை அனுப்புகிறவர்களுக்கும் பணம் அனுப்பும் கமிஷன் செலவு மிகவும் குறைவானதாகவும் அமைந்துவிட்டது. ஆனால் காணிக்கை ஆன்லைனில்
IFSC CODE அல்லது SWIFT CODE மூலமாக அனுப்புபவர்கள் தங்கள் பெயர், ஊர், தொலைபேசி எண் ஆகியவைகளை இ-மெயில் அல்லது தபால் மூலமாக எனக்கு தெரிவித்தால்தான் அந்த காணிக்கையை அனுப்பியது யார் என்று அறியவும், அது தணிக்கை செய்ய ஆடிட்டடிருக்கு கணக்கு சமர்ப்பிக்கவும் உதவியாக இருக்கும். நன்றி.
|
|
|
|
|
|
|