தவறான தெரிந்தெடுப்பு

ஆதியாகமம் 19ம் அதிகாரத்தில் லோத்தைப்பற்றி கூறப்பட்டுள்ள சம்பவம் முழு வேதாகமத்திலும் கூறப்பட்டுள்ள சம்பவங்களிலேயே மிகவும் விவரிக்கப்படத்தக்க வகையில் கூறப்பட்டுள்ளது. வேதத்தை அதிகம் அறிந்திராதவர்கள்கூட சோதோம் கொமோராவின் அழிவையும், தேவதூதர்கள் லோத்துவை சந்தித்ததையும், லோத்துவும் அவன் குடும்பமும்மட்டும் தப்புவிக்கப்பட்டதையும், அதேசமயம், லோத்தின் மனைவி பின்னிட்டு பார்த்து உப்புத்தூணாக மாறியதையும் அறிந்திருப்பார்கள். அது மட்டுமல்ல, அந்த அதிகாரத்தின் இறுதியில் லோத்துவின் குமாரத்திகள் மிகவும் கீழ்தரமாக தங்கள் தகப்பனோடு உறவு கொண்டு பிள்ளைகள் பெற்றெடுத்ததையும் அறிந்திருப்பார்கள்.

வேறு கோணத்தில் இந்த சம்பவத்தை நாம் காணும்போது, இப்படியொரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பேயில்லை என்று வேதத்தை நம்ப மறுப்பவர்கள் கூறுவர். ஏனெனில் சோதோம் கொமோரா பட்டணங்கள் அழிக்கப்பட்டிருந்ததானால், அதினுடைய சிதலமடைந்த பகுதிகள் ஒன்றும் இப்போது காணப்படவில்லையே! என்று கூறுவர். அது உண்மையில்லை. ஏனெனில் சமீப காலங்களில் சவக்கடலின் தென்பகுதியின் இறுதியில் சிதலமடைந்த பண்டைய பட்டணங்களை கண்டறிந்துள்ளனர். இந்த பட்டணங்கள் ஒரு காலத்தில் சடுதியாக ஏற்பட்ட பெரும் தீயினால் அழிவைக் கண்டதாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த கண்டுபிடிப்பு, ஆதியாகம் 19ம் அதிகார சம்பவத்தோடு ஒத்துப்போகிறது.

இந்த அதிகாரத்தில் வச.1ல் ஆரம்பத்தில் லோத்து நகரத்தின் வாசலில் அமர்ந்திருப்பதாக வாசிக்கிறோம். நகரத்தின் வாசலில் அமர்ந்திருப்பது என்பது நமக்கு பொருளற்ற செயலாக காணப்படக்கூடும். ஆனால் பண்டைய காலத்தில் அப்படி அமர்வது ஒரு மனிதன் தான் அடையவேண்டியதை அடைந்துவிட்டதாக பொருள்படும். பொதுவாக நகரத்தின் வாசலில்தான், அனைத்து அலுவல்களும் நடைபெறும், வழக்குகள், விவாதங்கள், வியாபாரங்கள், மற்றும் அலுவல்கள் நடைபெறும் இடமாகவும், மக்களின் தேவைகள் சந்திக்கப்படும் இடமாகவும் இருந்தது. நகரத்தின் முதன்மையான அதிகாரிகள், ஆட்சியாளர்கள் இங்கு கூடி வருவார்கள். தற்காலத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் அல்லது நகரமேயர் பதவிக்கு சமமான ஒரு தலைவன் பதவியில் தான் லோத்து சோதோமில் காணப்பட்டான்.

கவனியுங்கள் இப்போது ஒரு தேவனுடைய மனிதன். பெரும் அழிவை சந்திக்கவிருக்கும் பாவம் நிறைந்த ஒரு நகரத்தின் தலைவனாக காணப்படுகிறான். அவனுடைய வாழ்வை உற்று நோக்கும்போது, லோத்தின் பயணம் அது அழிவை நோக்கிய பாதையாகதான் உள்ளது.

முதலாவதாக சோதோமை பார்த்தான். (13:10).

இரண்டாவதாக, அவர் சோதோமுக்கு நேராக கூடாரம் அமைத்திருந்தான் (13:12).

மூன்றாவதாக சோதோமிலே குடியிருந்தான் (14:12)

நான்காவதாக, சோதோமை ஆளும் தலைவனாக விளங்கினான். (19:1).

ஒரு பெரிய நகரத்திற்கு இடம் பெயர்வதன்மூலம் தனக்கோ, தன் குடும்பத்திற்கோ தீமையை வருவித்துக்கொள்ளும் நோக்கத்துடன் லோத்து, செயல்படவில்லை என்று இங்கு கூறவிரும்புகிறேன். புறவின மக்களுடன் வசிப்பதன் மூலம் ஏதோவொரு நன்மை செய்யவே அவன் விரும்பியிருந்திருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் சோதோம் போன்ற தேவனை அறியாத நகரங்களில் வசிப்பதினால், அவர்கள் அங்குள்ளவர்களை தேவனுக்கு நேராக வழி நடத்த வாய்ப்புகளுண்டு. எனவே பாவம் நிறைந்த, தேவனை அறியாத புறவின நகரங்களில் கிறிஸ்தவர்கள் வாழ்வது தவறல்ல. ஆனால் நோக்கம் சரியானதாக இருக்கவேண்டும். இன்று பலர், பல இடங்களுக்கு இடம் பெயர்வதற்கு காரணம், அங்கு காணப்படும் செல்வம், ஆடம்பரம் மற்றும் கவர்ச்சியினால், அந்த தவறை தெரிந்தெடுக்கிறார்கள். வேறு சிலர் கர்த்தருடைய அன்பை அவர்களோடு பகிர்ந்துகொள்வதற்காக, புது இடத்தை தெரிந்தெடுக்கிறார்கள். சிலர் தங்களுடைய பணியினிமித்தம் இடம் பெயர நேரிட்டாலும், அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அந்த இடத்திலேயே சாட்சிப் பகருகிறார்கள். எனவே இடம் பெயர்தல் தவறல்ல, அதன்பின்னே உள்ள நோக்கமே முக்கியமானது. லோத்து இந்த உலகத்தின் மீது அன்புவைத்து அந்த ஊரின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டதால் சோதோமில் குடியிருந்தான்.


லோத்துவும் - தேவ தூதர்களும்:

வேதம் கூறுகிறது: மாலை நேரத்தில் இரண்டு தூதர்கள் சோதோமுக்கு அந்நியர்களைப்போல் வந்தார்கள். லோத்து இரக்கமுள்ளவனாக இருந்தான், மேலும் அந்த நாட்களின் வழக்கத்தின்படியேயும், அந்த தூதர்களையும் தன் வீட்டினுள் அழைத்து இராத்தங்கச் செய்தான். அவர்கள் தேவ தூதர்கள் என்பது அவனுக்குத் தெரியாது. அவன் செய்தது பிரயாணகளுக்கு செய்யும் உபசரிப்பின் ஒரு பகுதியே ஆகும்.

அந்த மனிதர்கள் லோத்துவை சந்திக்க வந்த செய்தி, சோதோமுக்குள் பரவியபோதுதான் சோதோமின் உண்மையான குணாதிசயம் வெளிப்பட்டது.

அவர்கள் படுக்கைக்குச் செல்லும்முன், அந்த நகரத்தைச் சேர்ந்த வாலிபர் முதல் கிழவர் வரை அனைவரும் லோத்துவின் வீட்டை சூழ்ந்து கொண்டு, லோத்துவை வெளியே அழைத்து "இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படி அவர்களை அனுபவிக்கும்படி வெளியே கொண்டுவா என்றார்கள்" (வசன 5).

சோதோமின் புருஷனர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் (ஹோமே செக்ஷுவல்). எனவேதான் அந்த இரண்டு புதிய மனுஷர்களையும் வெளியே கொண்டுவரும்படி லோத்துவை வற்புறுத்தினார்கள். இந்த இயற்கைக்கு மாறான இப்படிப்பட்ட வெட்கக்கேடான சம்பவத்தைப் போன்ற ஒன்றை வேதத்தில் வேறு எங்கும் காணமுடியாது. மாம்ச இச்சையினால் தூண்டப்பட்டு, வாலிபர் முதல் கிழவர் வரை திரளான மனிதர்கள் அந்த புதிய ஆண் மனிதர்களை தேடிவந்து வெட்கமின்றி வெளிப்படையாகக்கேட்டனர்.

அவர்கள் கூக்குரலுக்கு பதில் செய்யும்படி லோத்து கூறிய காரியம் அதிலும் பயங்கரமானது. அந்த ஆண்களுக்கு பதிலாக "தன்னுடைய இரண்டு வாலிப பெண்களைத் உங்களுக்கு தருகிறேன் என்றும், தன் சொந்த மகள்களை அவர்கள் தங்கள் இஷ்டம்போல் பயன்படுத்திக்கொள்ளட்டும்" என்றும் கூறினான். அதில் விருப்பமில்லாத அந்த கூட்டம், வீட்டிற்கு வந்த ஆண்கள்(புருஷர்கள்)தான் வேண்டும் என்றுக்கூறி வீட்டின் கதவை உடைக்க முயற்சித்தனர். அதனால், லோத்துவை, அந்த தேவ தூதர்கள் வீட்டிற்குள்ளாக இழுத்துக்கொண்டதுடன் அந்த மனிதர்களுக்குக் குருட்டாட்டம் பிடிக்கச் செய்தனர். அவர்களுக்கு வாசல்படி எது என்று தெரியாதபடி தவித்தனர் என்று அர்த்தம் கொள்ளலாம்.

அந்த நேரத்தில்தான், லோத்துவுக்கு தன்னிடத்தில் வந்த அந்த இரண்டு மனிதரும் யார் என்பதை உணர்ந்து கொண்டான். அவர்கள் சோதோமை அழிக்கும்படி தேவனால் அனுப்பப்பட்டவர்கள். ஆனால் அதற்க முன்னதாக, லோத்தும் அவனது குடும்பமும் அழிவிலிருந்து தப்புவிக்க கடைசி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். லோத்து தன் மருமகன்களிடம் சென்று வருகிற அழிவைக்குறித்துக்கூற, அவர்களோ அதைக்கேட்டு லோத்து ஏதோ நகைச்சுவையாகக் கூறுகிறார் என்று சிரித்தனர். கிழக்கு வெளுக்கும் வேளையில், லோத்து, அவன் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளும் சோதோமை விட்டு வெளியேறுமாறு தேவதூதர்கள் அவர்களை துரிதப்படுத்தினார்கள் (வ15). இல்லையெனில் அவர்கள் அனைவரும் பட்டணத்திற்கு வரும் தண்டனையில் அகப்பட்டு அழிய நேரிடும் என்று கூறினார்கள். ஆனால் வ.16ல் "லோத்து தாமதித்துக்கொண்டிருக்கும்போது.." என்று வாசிக்கிறோம். ஏன் அவன் தாமதித்தான்? ஏனெனில் அவன் பட்டணத்தை நேசித்தப்படியால் அங்கு அவன் நண்பர்கள், அயலகத்தார், உடன் ஊழியர்கள் என்று அனைவரும் இருந்தனர். அதே சமயம் இங்குதான் உலகத்தின் அனைத்து சந்தோஷமும் இருந்தது. லோத்தும் அவன் மனைவியும் மகிழ்ந்திருக்கும்படியான நல்ல வாழ்க்கை இருந்தது. அவன் ஓரினச்சேர்க்கையாளன் (ஆண்புணர்ச்சியாளன்) அல்ல. அதே சமயம் அவன் அதை எதிர்த்து செயல்படவும் இல்லை. மாறாக சோதோமின் கீழ்தரமான செயல்களோடு அவன் வாழ விரும்பினான். ஏனெனில் லோத்து சோதோமின் அனைத்து காரியங்களோடு சோதோமை நேசித்ததினால் அப்படி வாழ விரும்பினான்.

லோத்து உலகத்தில் அன்பு கூர்ந்தான். தேவன் உலகத்தில் அன்பு கூர்ந்ததைப்(யோ 3:16)போல் அல்ல. மாறாக, "உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும்" (1யோ 2:15) என்று யோவான் குறிப்பிட்டுள்ளதை போன்று அவனின் அன்பு காணப்பட்டது.

தேவனின் அன்பு பரிசுத்தமானது. மீட்கும் தன்மைக்கொண்டது. அது முற்றிலுமாக உலகத்தின் தீமையின்று வேறுபட்டது. டி.எல்.மூடி அவர்கள் மிக அழகாக இந்த சத்தியத்தை ஒரு உதாரணத்தின் மூலம் கூறியுள்ளார். படகு தண்ணீரில் காணப்பட்டால் அது நல்லது. ஆனால் படகில் தண்ணீர் காணப்பட்டால் அது அழிவுக்கேதுவானது. லோத்து தாமதித்தன் காரணம். படகில் தண்ணீர் இருந்ததினால், அவன் சோதோமை நேசித்தப்படியால் அவனும் அழிந்து போகத்தக்கதாக அழிவின் விளிம்பில் காணப்பட்டான். லோத்துவிடம் காணப்பட்ட குழப்பத்தைக்குறித்து டான் கோல் என்பவர் இவ்விதம் எழுதுகிறார். லோத்துவின் ஆத்துமா மிகவும் சாதுரியமானது. ஆனால் அதுவே அவனை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச்சென்றது. அவன் வெறுப்பும், கோபமாய் இருந்திருக்கவேண்டிய வேளையில் அமைதியாய் இருந்தான். பாவத்தைக்கண்டு சாதுரியமாய் இருப்பதைவிட கூர்மையற்ற கத்தியாய் இருப்பதே மேல்.

லோத்து ஒரு அரசியல்வாதி. பிரச்சனைகளின் மத்தியில் சமரசம் பேசுவதில் வல்லவன். அவன் நாவு மிக மென்மையானது. அதனால்தான். அவன் பிழைக்கச் சென்ற இடத்திலும் பாவம் நிறைந்த அம்மக்கள் மத்தியில் தலைவனாக உயர முடிந்தது. ஆனால் அவனுக்கு நேரிட்ட சம்பவத்தில் அவன் அநீதியைக்கண்டு, தேவ நீதியினால் பொங்கி எழுந்திருந்திருக்கவேண்டும். மென்மையான போக்கையோ, சமாதானப்படுத்தும் வார்த்தைகளையோ சமரச வார்த்தைகளைத்தான் அவன்பேசியிருந்திருக்கக்கூடாது.

லோத்து, அவனுடைய மனசாட்சியில் மிகவும் பெலவீனமாய் காணப்பட்டான். பாவத்தைக்குறித்து உணர்வு சோதோமுக்குள்ளே அவன் வசிப்பதற்கு அசௌகரியமாய் காணப்பட்டாலும், சோதோமை வெறுத்து அதைவிட்டு வெளியேறுவதற்கு அவன் விரும்பவில்லை. எனவே சோதோமின் சூழலோடு அவன் இணக்கமாய் இருந்தான். அப்படியில்லாதிருந்திருந்தால் அவன் என்றைக்கோ சோதோமைவிட்டு வெளியேறி இருந்திருப்பான். போதுமான மனசாட்சி இல்லாததே அவனை அங்கு தங்கச்செய்தது. ஆனால், ஆபிரகாமோ, தேவனுக்குப் கீழ்ப்படிந்து வாழ்ந்து, பிள்ளைகளைக்குறித்த வாக்கு நிறைவேறாத சூழலிலும், வாக்குப் பண்ணப்பட்ட நாட்டில் வாழ்ந்து வந்தார்.

வக்கிரங்கள் நிறைந்த நகரத்தின் மதிப்பீடுகளைக்குறித்து லோத்துவின் உணர்வுகளும் வக்கிரங்களாக மாறிப்போயின. உண்மையில் லோத்து இந்த உலகத்தோடு ஒன்றி, அதன் மயக்கத்தில் காணப்பட்டதால்தான், தன்னால் மலைக்கு ஓடிப்போகமுடியாதென்றும், உயிர் பிழைக்க அருகிலுள்ள நகரத்திற்கு ஓடிப்போக உத்தரவு அருளவேண்டும் என்று தூதர்களிடம் கெஞ்சினான். சோதோமை விட்டு வெளியேறுவது அவனுக்கு கடினமாய் இருந்திருக்கவேண்டும். அல்லது அந்த தேவ தூதர்களின் வார்த்தையை அவன் நம்பாதிருந்திருக்கவேண்டும். உண்மை எதுவாயினும், அந்த தூதர்கள் அப்படியே ஒத்துக்கொண்டனர். ஏனெனில் லோத்தும் அவன் குடும்பமும் சோதோமைவிட்டு வெளியேறும் வரை அவர்களால் ஒன்றும் செய்யக்கூடாதிருந்தது.

அதன் தொடர்ச்சியாக அநேக சம்பவங்கள் நடந்தேறின. முதலாவதாக, இரட்டை நகரங்களான, சோதோம் - கொமோரா ஆகிய இரு நகரங்களும் வெளிச்சம் மிகுந்த அந்த பகல் நேரத்தில், கந்தகத்தாலும் அக்கினியினாலும் அழிக்கப்பட்டன (வ23-25).

இரண்டாவதாக, லோத்துவின் மனைவி பின்னிட்டுப்பார்த்து உப்புத்தூண் ஆனாள் (வ 25),

மூன்றாவதாக, அதற்கு அடுத்த நாளில் ஆபிரகாம் அழிவைக்கண்ட பட்டணங்களைப் பார்வையிட்டான். (வச 27).

நான்காவதாக, லோத்துவின் சொந்த மகள்கள் தன் சொந்த தகப்பனுக்கு மதுவைக் குடிக்க கொடுத்து அவனோடு தகாத சரீர உறவுகொண்டனர். (வ 30-38). இது எத்தனை பெரிய பயங்கரம். உலகம் கேட்டிராத பயங்கரமாகும்.

இந்த கடைசி சம்பவம் மிகவும் இழிவானது. இது ஏன் வேதத்தில் ஏன் இடம் பெற்றுள்ளது என நம்மில் அநேகர் வியப்படைவதுண்டு. அம்மோனியர் மற்றும் மோவாபியரின் துவக்கத்தைக்குறித்து கூறுவதற்காக இந்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றுயிருக்கலாம் அல்லது லோத்துவின் குடும்பம் எவ்வளவாக கறைபடிந்த தீமை நிறைந்த குடும்பம் என்பதை அது தெரிவிக்கிறது. சோதோம் அழிந்துவிட்டது என்றாலும், சோதோமின் பாவஆவி, லோத்து தங்கியிருந்த குகையில் மறுபடியும் பிறந்தது. எனவே பாவம் என்பது இடம் சார்ந்தது அல்ல. அது இருதயம் சார்ந்தது என்பதை அறிகிறோம். நகரங்கள் தீமையானது அல்ல, நகரங்களில் வாழும் மக்களே தீமையானவர்கள். இருதயங்கள் மாற்றம் பெறாவிட்டால், எத்தனை நகரங்களை நாம் அழித்தாலும், பாவம் பள்ளத்தாக்குதல்களிலும், வயல்வெளிகளிலும் வேர்ப்பற்றி வளரக்கூடியது.

ஏன் ஆண்டவர் இந்த இரட்டை நகரங்களை அழித்தார்?.

ஆதி 19ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களை நாம் தொகுத்துப்பார்க்கும்பொழுது, அநேக கேள்விகள் நமக்குள் எழும்பக்கூடும். இந்த சம்பவங்கள் அனைத்தும் தேவனின் செயல்களை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. ஏன் இந்த இரட்டை நகரங்களைமட்டும் தேவன் அழித்தார், மற்ற அநேக நகரங்களும் திராளான பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது ஏன் இந்த நகரங்கள் மட்டும் அழிவைக் காணவேண்டும்? அக்கினியும், கந்தகத்தினால்? இவ்வளவு சீக்கிரத்தில்? அது அழிக்கப்படவேண்டும்?

1. ஒழுக்கக்கேடு அதிகம் நிறைந்து காணப்பட்டது. ஓரினசேர்க்கையைக் (ஆண்புணர்ச்சியைக்) குறித்து தேவன் என்ன எண்ணுகிறார் என்று ஒருவர் அறிந்துக்கொள்ள வேண்டுமெனில், அதற்கான அனைத்துப் பதில்களையும் இந்த அதிகாரத்தில் பார்க்கமுடியாது. ரோமர் முதலாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு உதாரணமாக ஆதி 19ம் அதிகாரம் அமைந்துள்ளது. ஓரினச் சேர்க்கையை(ஆணோடு-ஆண், பெண்ணோடு-பெண் தவறான புணர்ச்சிக்கு) அனுமதிக்கும், ஆதரவளிக்கும் எந்தவொரு நாடும் அல்லது நகரமும் தேவனின் நியாயத்தீர்ப்பின் கீழ்வரும் என்பதை மறக்கக்கூடாது.

பாலியல் (Sex) உறவில், தேவனுடைய வழிகளை முற்றிலும் தள்ளிவிட்டதற்கு ஓரினச்சேர்க்கை (ஆணோடு-ஆண் சேர்க்கை) அடையாளமாக உள்ளது. தேவனுடைய பரிசுத்த வழிகளைத் தள்ளிவிட்டதற்கு ஆதாரமாக மூன்றுவித மாற்றங்களைக் மனிதன் ஏற்படுத்திக்கொண்டதைக்குறித்து ரோம 3:23-27ல் கூறுகிறது. முதலாவது, வ 23ல் அழிவில்லாத தேவனுடைய மகிமையை, அழிவுள்ள மனுஷர், மிருகம், பறவைகளின் ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். அடுத்ததாக, தேவனுடைய சத்தியத்தைப் பொய்யாக மாற்றினார்கள் (வச 25). இறுதியாக, சுபாவ அநுபோகத்தை சுபாவத்துக்கு விரோத அநுபோகமாக மாற்றினார்கள் (வ.26,27). தேவனையும், தேவனுடைய வழிகளையும் வெறுப்பவர்களுக்கு ஓரினச் செயலே இறுதியாக உள்ளது.

எனவேதான் ஓரினச் சேர்க்கையைக்குறித்து
...அக்கிரமம் (ஆதி 19:7). என்றும்,
....அருவருப்பு (லேவி 18:22 20:13) என்றும்,
...மதிகேடானது (நியா19:23-24) என்றும், சுபாவத்திற்கு மாறானது,
...உணர்ச்சிமயமானது (ரோ1:27) என்றும்,
...விபச்சாரம் (யூதா 7) என்றும் வேதம் ஒரே குரலில் கண்டிக்கிறது. இது இயற்கையான வாழ்விற்கு மாற்றானது அல்ல, மாறாக, தேவனுடைய திட்டத்திற்கு எதிரானதும், வருத்தத்தையும், பாவத்தையும் மரணத்தையும் பலனாக கொண்டது.

2. தேவனற்ற மனிதர்களுக்கு இது திருஷ்டாந்தமாக உள்ளது. யூதா வ 7ல்..."சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவர்களைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல விபச்சாரம் பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்." தேவன் இந்த பாவமான நகரங்களை அழித்ததன் மூலம், தேவன் பாவத்தை தண்டிக்கிறவர் என்பதை தேவனற்ற மக்கள் அறிந்துக்கொள்வார்கள். சவக்கடலைப்போன்று இன்று பண்டைய நகரங்களான சோதோமும் கொமோராவும் இன்று ஒன்றுமில்லாமல் பயனற்று காணப்படுகின்றன.

3. சுற்றிலுமுள்ள நகரங்களுக்கு தேவன் இரக்கம் செய்யும் செயலாக அந்த அழிவு காணப்பட்டது. சோதோமையும் கொமோராவையும் சடுதியாய் அழித்ததினால், அங்குக் காணப்பட்ட அக்கிரமம் மேலும் பரவாதபடி தேவன் உறுதி செய்தார். ஒட்டு மொத்த தண்டனை, பொதுவான நன்மைக்கு வழி வகுத்தது. இந்த நகரங்கள் மிகவும் அக்கிரமம் நிறைந்து காணப்பட்டு தேவன் அவற்றை அழித்ததின் மூலம் இந்த பூமியிலிருந்து ஒழுக்கக்கேட்டை அகற்றினார்.

4. நீதி, வித்தியாசத்தை ஏற்படுத்த தோற்றுப்போனதினால் தேவன் அழிவை கட்டளையிட்டார். உப்பு சாரமற்றுபோனால், அதன் பயன் எப்படியோ, அப்படியேதான் சோதோமுக்கும் நடந்தது. 2 பேதுரு 2:8ல் "அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு, நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமான்" என்று லோத்துவைக்குறித்து நாம் வாசித்தாலும், லோத்து அந்த நகரத்தின்மீது அன்பு கொண்டடிருந்ததினால், அதில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பெலன் சற்றுமின்றி காணப்பட்டான். அதனால், அவன் தன்னுடைய சாட்சியை இழந்ததுடன், தன்னுடைய குடும்பத்தையும் இழந்ததுடன், இறுதியில் ஏறத்தாழ தன் சொந்த வாழ்வையும் இழந்தவனாகத்தான் காணப்பட்டான். இந்த சம்பவத்திலிருந்து நான்கு பாடங்கள்:


1. பாலுணர்வை தூண்டும் சிறிய தீர்மானங்கள்:

லோத்து, சோதோமில் ஒரே இரவில் தலைவனாகிவிடும் நோக்கத்தோடு வரவில்லை. அவன் துவக்கத்தில் தவறான தெரிந்தெடுப்பைச் செய்ததின் விளைவாக நடந்தேறியது. இன்றைக்கு நாம் செய்யும் சிறிய, ஆனால் தவறான தீர்மானங்கள் நாளைய தினத்தில் பெரும் அழிவுக்கு வித்திடும். ஒவ்வொரு தீர்மானமும், ஒன்று வெளிச்சத்திற்கு நேராக அல்லது ஆழமான இருளுக்கு நேராக வழிநடத்தும் என்பதை அறியுங்கள். ஒருபோதும் அர்த்தமற்ற தெரிந்தெடுப்பைச் செய்யாதிருங்கள். இந்த நாளுக்கென்று இந்த பொழுதுக்கென்று நாம் தெரிந்தெடுக்கும் தெரிந்தெடுப்புகள்கூட மிகப்பெரும் விளைவுகளைக் கொண்டு வரும்.


2. ஒழுக்கக்கேட்டோடு ஒத்துப்போகுதல்:

கொஞ்சம் கொஞ்சமாக லோத்து, சோதோமின் தீமைகளை கண்டும், காணாதவனாக இருந்தான். தீமைகளை கண்டும், காணாதவனாக இருந்தான். தீமை நிறைந்த அந்த மனிதர்களோடு இணைக்கமாய் அந்த மனிதர்களோடு இணைக்கமாய் இருப்பதையே அவன் விரும்பியிருந்திருக்கவேண்டும். துவக்கத்தில் அவனுக்கு அசௌகரியமாய், அருவருப்பாய் தோன்றின காரியங்கள், நாளடைவில் அவனுக்குள், எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நீரின் உஷ்ணம் அதிகரிப்பதை உணராமல், கொதிநிலையில் தவளை தன்னுயிரை இழப்பதுபோன்ற செயல்தான் லோத்துவிடம் காணப்பட்டது. 20ம் நூற்றாண்டில் வாழும் நம்மிடமும் இந்த செயல் காணப்படுகிறதல்லவா? பாவத்தைக் கண்டு துவகத்தில் கொதித்து எழுந்த நாம் விலகி ஓடிய நாம். இன்று பாவ செயல்களைக் கண்டும் காணாதவரைப்போன்று காணப்படுகிறோமல்லவா? ஒழுக்கக்கேடு நம்முடைய வீடுகளிலும் நுழைந்து, இன்று அவை ஒன்றுமில்லாதவைப் போன்றும், நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டதல்லவா?


3 சந்தேகத்திற்கிடமில்லாமல், தேவனுடைய நியாயத்தீர்ப்பு, பாவத்தின் மீதே காணப்பட்டது:

இன்று தேவன் பொறுமையாய் இருக்கிறாரெனில் அவர் பாவச் செயலை அங்கீகரிக்கிறார் என்று தவறாக எண்ணிக்கொள்ளவேண்டாம். பாவ மனிதன் இரட்சிக்கப்படுவதற்காகவே அவர் பொறுமையாய் இருக்கிறாரேத் தவிர வேறு காரணங்கள் ஏதுமில்லை. தேவன் இன்று பாவம் நிறைந்த நகரங்களை அழிக்கவில்லை எனில், அவர் சோதோம் கொமோரா நகரங்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.


4. இரு உலகங்களில் வாழ்வதற்கு செலுத்த வேண்டிய பயங்கரமான விலைக்கிரயத்தை இங்கு காண்கிறோம்:

நீங்கள் ஒன்று உலகத்தைக் கொண்டிருக்கவேண்டும். அல்லது தேவனைக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் நிச்சயமாக இரண்டையும் ஒருசேர கொண்டிருக்கமுடியாது. இரண்டு எஜமான்களுக்கு ஒருவன் ஊழியம் செய்யமுடியாது. ஒருவேளை அப்படி வாழ நினைத்தால், லோத்துவைப்போல் அனைத்தையும் இழந்து காணப்படவேண்டும். நீங்கள் உலகத்தோடு வாழ எண்ணினால், காலப்போக்கில் பின்னிட்டுப்பார்க்கும் போது, வசதிகளையும், வாய்ப்புகளையும் இழந்து ஒன்றுமில்லாமல் எரிந்துப்போன நிலையில் காணப்படுவீர்கள்.


5. ஒத்துப்போகுதலின் விலைக்கிரயம் அதிகம், விளைவுகளோ மிகவும் பயங்கரம்:

லோத்து இந்த சம்பவத்தினால் காயப்பட்டது மட்டுமல்ல, தான் அதிகம் யாரை நேசித்தானோ அவர்களை அழிவில் கண்டான். அவன் நேசித்த அந்த பட்டணம் புகைவதைக் கண்டபோது அவன் உள்ளம் எவ்வளவாய் உடைந்திருக்கவேண்டும், அவன் மனைவி உப்புத்தூணாய் மாறியபோது அவன் எவ்வளவாய் நொறுங்கியிருந்திக்க வேண்டும்? தீமையோடு ஒத்துப்போகுதலினால் ஏற்பட்ட விளைவை எண்ணிப்பாருங்கள்.

நாம் எவற்றின்மீது மதிப்பு வைக்கிறோம் என்பதை நம்முடைய பிள்ளைகள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஆராதனைக்குச் செல்வதையும், அங்கு காணிக்கைக் கொடுப்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதேவேளையில் இந்த உலகத்தினால் நீங்கள் எவ்வளவாக கவர்ந்து இழுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் வருமானம் பெருக, எந்தெந்த வழிகளில் அதை அடைய முயற்சிக்கிறீர்கள் என்பதையும் அறிந்திருக்கிறார்கள்.

நீங்கள் காண்கின்ற காட்சிகளையும், பேசுகிற வார்த்தைகளையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நீங்கள் உண்மையிலேயே ஆவிக்குரியவர்களா அல்லது ஆவிக்குரிய போர்வையில் உங்களை மறைத்துக்கொண்டவர்களா என்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். உங்கள் பணத்தை, ஊழியத்திற்க்கா அல்லது உலக காரியங்களுக்கா? எதற்கு செலவழிக்கிறீர்கள் என்பதையும் உங்கள் பிள்ளைகள் அறிந்திருக்கிறார்கள். இப்படி அறிந்திருப்பதனால் என்ன நடக்கும்?.

நாளடைவில், அவர்கள் வேதம் வாசித்து ஜெபிப்பதை நிறுத்திவிடுவார்கள். ஆலயத்திற்குச் செல்வதைத் தவிர்க்க விரும்புவார்கள். இன்றைய சோதோமின் நன்மதிப்பை பெற வாஞ்சிப்பார்கள்.

மேலும், இந்த உலகத்தின் கவர்ச்சியாலும், ஆசைகளாலும் இழுக்கப்பட்டு தேவனை விட்டுவிலகி காணப்படுவார்கள். அவர்களைக்குறித்த வருத்தம், நம்முடைய கல்லறை வரை தொடரும். உங்களுடைய ஒத்துப்போகும் தன்மையினால், உங்களுடைய பிள்ளைகளை இழந்து காணப்படுவீர்கள். லோத்துவின் வாழ்வில் காணப்பட்ட பரிதாபமான சம்பவங்கள், இன்று நம்முடைய வாழ்வில் காணப்படுகிறதா? இரண்டு குறிப்புகளோடு இந்த செய்தியை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

முதலாவது லோத்துவுக்கு சம்பவித்ததுபோல் நமக்கும் சம்பவிக்க வேண்டும் என்பதல்ல. ஆதி 13ல் லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தவறான தெரிந்தெடுப்புக்குள் கடந்து சென்றதைப்போல உலகமும், மாம்சமும் அளிக்கும் மதிப்பீடுகளின் அடிப்படையில் நம்முடைய தெரிந்தெடுப்பு காணப்படாமல், விசுவாசத்துடன் தேவனின் வழிநடத்துதலுக்கு நம்மை அர்ப்பணித்திடவேண்டும்.

இரண்டாவதாக, தேவன் இந்த உலகை நியாயம் தீர்க்கும்போது, அதை முதலில் நம்மிலிருந்து துவக்குகிறார். மத் 11:20-24ல் தம்முடைய பலத்த செயல்களைக்கண்ட நகரங்கள் மனந்திரும்பாததினால், அந்த நகரங்களை ஆண்டவர் இயேசு கடிந்து கொள்வதைக்காண்கிறோம்.

தேவன் நியாயத்தீர்ப்பின் நாளில் தங்களை மெதுவாய் நடத்துவார் என்றோ, அல்லது தப்புவிப்பார் என்றோ எண்ணவேண்டாம்.

ஏனெனில் அவரது பலத்த கிரியைகளைக் கண்டும், அவரை ஏற்றுக்கொள்ளாததால், கப்பர்நகூம், சோதோமைக்காட்டிலும் அதிக ஆக்கினையை அமையும் என்று கூறுகிறார். அங்கு அதிகம் செய்யப்பட்டது. ஆயினும் அவர்களுடைய அக்கிரமம் பெரிது. ஏனெனில் ஒருவேளை கப்பர்நகூமில் செய்யப்பட்ட கிரியைகள் சோதோமில் செய்யப்பட்டிருக்குமானால், அவர்கள் மனந்திரும்பியிருந்திருப்பார்கள் என்று ஆண்டவர் கூறினார்.

லோத்து நகரத்தை நேசித்து தாமதித்தினால், அனைத்தையும் இழந்தான். இயேசு கூறினார். லோத்துவின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள் (லூக் 17:32) என்று அவளை மட்டுமல்ல, அவளுடைய புருஷனையும் நினைத்துக்கொள்வோம்.

ஏனெனில் லோத்து போதுமான அளவிற்கு செயல் மிகுந்து காணப்படவில்லை. ஆண்டவரைக்காட்டிலும் இந்த உலகை அதிகம் நேசிப்பவர்களுக்கு லோத்துவிற்கு நிகழ்ந்தது சம்பவிக்கலாம்.

லோத்து அருகிலுள்ள மலைக்கு ஓடினதைப்போல், நாம் கல்வாரி சிலுவையண்டைக்கு ஓடி, விசுவாசத்தோடு ஆண்டவர் இயேசுகிறிஸ்துவைப் பற்றிக்கொள்வோம்.

நாம் மன்னிப்படையும்படி அவர் மரித்தார். நாம் நீதிமானாகும்படி அவர் உயிர்த்தெழுந்தார். நாம் உலகை மேற்க்கொள்ளும்படி தமது வல்லமையை நமக்களித்தார்.

சோதோம்கள் இன்று நம்மில் காணப்படக்கூடும். நாம் ஆபிரகாமை பின்பற்றி தேவ வழிநடத்துதலைப் பெறுவோமா? அல்லது லோத்துதைப் பின்பற்றி அழிவை சந்திப்போமா?

லோத்தை நாம் மறந்துவிட்டால் நாம் நிச்சயமாக அவனது தவறுகளை நாமும் செய்கிறவர்களாக் காணப்படுவோம். எனவே, லோத்தை நினைத்துக்கொள்ளுங்கள். (ஆதி 19:1)

- அருள்திரு.டி.ஜான்ராஜா.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM