பிழையுள்ள பாட்டின் வரிகள்...

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவன் யார்?
     வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவன் யார்?

இப்படி தொடங்கும் இப்பாடல் மிகவும் அர்த்தம் உள்ளதும், தேவனுக்கு மகிமையையும், புகழ்ச்சியையும் உண்டாக்கக்கூடியதுமாகும். இப்பாட்டில் வரும் எல்லா சரணங்களும் அற்புதமானது.

ஆனால்...

ஒரு சரணத்தில் "தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷத்தீரே" என்ற வார்த்தை அர்த்தம் இல்லாதது என்று நினைக்கிறேன். காரணம் பரலோகத்தில் யாருக்கும் பசி கிடையாது?. வியாதி கிடையாது. உறவுகள் யார் என்று யாரும் யாரையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி அமைந்துள்ளது. பரலோகம் போகும் யாவரும் அங்கு தூதர்களைப்போல இருப்போம் என்று இயேசு கிறிஸ்துவும், பவுலும் கூறுகிறார்கள்.

அப்படியிருக்க தூதர்கள் சாப்பிடும் உணவு என்று எப்படி கூறமுடியும். ஒருவேளை பாட்டு எழுதியவர் இஸ்ரவேல் மக்களை அன்று கர்த்தர் மன்னாவாலும், காடை இறைச்சியாலும் வானத்திலிருந்து இறக்கி போஷித்தார் என்று வேதம் கூறுகிறபடியாலும், அந்த ஆகாரம் வானத்திலிருந்து வந்தபடியால் பாட்டு எழுதியவர் அவைகள் தூதர்களின் ஆகாரம் என்று எண்ணிவிட்டார் என்று நினைக்கிறேன்.

ஒருவேளை வேதத்தில் சங் 78:25ம் வசனத்தில் "தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான் அவர்களுக்கு ஆகாரத்தை பூரணமாய் அனுப்பினார்" என்று அந்த குறிப்பிட்ட சங்கீதத்தை எழுதிய ஆசாப் என்பவன் இஸ்ரவேலர்களை கர்த்தர் வழிநடத்திய பழைய வரலாறுகளை மனதில்கொண்டு அந்த பாடலை எழுதினான்.

எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்களை கர்த்தர் அழைத்துவந்தபோது கர்த்தர் மக்கள்மீது காட்டிய அன்பு, அவர்களுக்காக செய்த அற்புதம், யாவையும் கூறி மேலும் அவர்கள் ஆண்டவரை கோபப்படுத்தின விஷயங்களையும் பாட்டாக சங்கீத புத்தகத்தில் எழுதி வைத்துள்ளான். இதில் தூதர்கள் சாப்பிட்ட அப்பம் என்பதாக கூறாமல் தூதர்களின் அப்பம் என்று கூறுகிறான். இது ஒரு விஷயத்தை மிகைப்படுத்தி வர்ணிக்க உபயோகப்படுத்திய வார்த்தையாகும். இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் வேதத்தில் நிறைய உண்டு.

இஸ்ரவேல் மக்களை நான் பாலும், தேனும் ஓடும் தேசமாகிய கானானுக்கு கொண்டுபோவேன் என்று ஆண்டவரே கூறுகிறார். பாலும், தேனும் எந்த தேசத்திலும் நதியாக ஓடாது. அப்படி ஓடினாலும் அதை மட்டும் குடித்து மக்கள் வாழமுடியாது. அந்த தேசத்தின் செழிப்பை புகழ கர்த்தர் உபயோகப்படுத்தின வார்த்தை அது.

தூதர்கள் சில சமயம் ஆபிரகாமை, லோத்தை, ஏனோக்கை சந்திக்க மனித உருவத்தில் வந்தார்கள். அவர்களுக்கு மாவு பிசைந்து அப்பம் உண்டாக்கி அவர்கள் கொடுக்க தூதர்கள் சாப்பிட்டார்கள். பின் தூதர்கள் பயணிகளைப்போல நடந்து மறைந்துபோனார்கள் என்று காண்கிறோம். மனித உருவில் தூதர்கள் காணப்படும்போது மனிதன் மாதிரி பேசினார்கள். மனிதர்களை போல் சாப்பிட்டார்கள். இயேசுகிறிஸ்துவும் மனிதானாக பூமியில் வாழ்ந்தபோது பசிக்கிறது என்று கூறினார். சாப்பிட சீஷர்கள் ஆகாரம் கொண்டுவந்தபோது அவர் அதை சாப்பிடவில்லை.

சிலுவையில் தொங்கும்போதும் தாகமாக இருப்பதாக கூறினார். தண்ணீரில் துணியை நனைத்து உரிந்து குடிக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அவர் அதை குடிக்கவில்லை. ஆனால், பரலோகத்திலோ யாருக்கும் பசி இருக்காது, அங்கு சாப்பிடவேண்டிய அவசியமும் இருக்காது ஆகவேதான் தூதர்கள் உண்ணும் உணவு என்ற வார்த்தை பிழையானது என்கிறேன்.

தேவன் பரலோகத்திலிருந்து மனிதன் சமைக்காத ஆகாரத்தை தன் அற்புதத்தின் மூலம் தன் மக்களுக்கு கொடுத்தார். இவர்கள் அதை சமைத்து சாப்பிட்டார்கள் என்பதுதான் சரியான விளக்கமாகும்.

மேலும் அந்த குறிப்பிட்ட பாடல்வரிகளை கீழ்கண்டவாறு திருத்திப்பாடலாம்.

"வனாந்திரத்தில் மன்னாவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே". இப்படி திருத்தி பாடிப்பாருங்கள்.

(இந்த நல்ல அர்த்தமுள்ள பாடல் இலங்கை தமிழர் ஒருவரால் எழுதப்பட்டதாக அறிந்தேன்).


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM