அரேபியா நாடுகளில் என் ஊழியங்கள்
SHARJAH - BAHRAIN - KUWAIT

2013 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் கர்த்தருடைய நடத்துதலின்படி 8 வருடங்களுக்குப் பிறகு CSI மத்திய கேரளா டையோசிஸ்ஸின் மலையாள பாஷை பேசும் சபைகளில் (UAE) Sharjah, Kuwait ஆகிய நாடுகளிலும் Bahrain நாட்டில் தமிழ் கிறிஸ்தவ சபை(BTCC)யிலும் கர்த்தருடைய செய்தியை பகிர்ந்துக்கொண்டேன். கடந்தமுறை இந்த நாடுகளில் என் மூலமாக கர்த்தர் நடப்பித்த அற்புதங்களையும், மனந்திரும்புதலின் அனுபவங்களையும் அங்குள்ள சபை மக்கள் சொல்ல கேட்டு உயிருள்ள நமது தெய்வத்தை நான் துதித்தேன். கர்த்தருக்கே மகிமை.

ஒவ்வொரு GULF நாடுகளிலும் விமான நிலையத்திலிருந்து என்னை கூட்டிச்செல்ல விசேஷ அரசாங்க ஆட்களை விமான நிலையத்துக்குள் அனுப்பி என்னை Imigration அதிகாரிகள் உள்ள இடத்தில் நீண்டவரிசையில் என்னை நிற்கவிடாமல், மற்ற கண் பரிசோதனைகளிலும் நீண்ட வரிசையில் நின்று நான் காத்துக்கிடக்காமல் என்னை அந்தந்த அதிகாரிகளிடம் என்னை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட அந்த அதிகாரிகளே என் பாஸ்போர்ட்டையும், விசாவையும் தாங்கள் எடுத்துக்கொண்டு என்னை அழைத்து சென்று VIPகள் செல்லும் வாசல்வழியாக அழைத்து சென்று விமான நிலையத்திலிருந்து வெளியில் என்னை கொண்டுபோய்விட்டதும், அங்கு விமான நிலையத்தில் பூச்செண்டுடன் என்னை வரவேற்க சபை ஆயர்களும், சபை செயலர் மற்றும் சபை பொறுப்பாளர்களும் வந்து அழைத்துச்சென்று என்னை கவுரவித்ததை நினைத்து தேவனை துதித்தேன். என்னை பத்திரிக்கை எழுத்து மூலமாக என்மேல் அபிப்ராய வித்தியாசமுள்ளவர்களும், இம்முறை அவர்கள் என்னை நேசிப்பதையும், என் ஊழியத்தைக்குறித்து அவர்கள் நல்ல எண்ணம் கொண்டிருப்பதையும், அவர்கள் என்மேல்கொண்ட அவர்களின் பழைய அன்பு மாறாதிருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டு தேவனை துதித்தேன். என்னையும் நான் பத்திரிக்கையில் விமர்சிக்கும் விஷயங்களையும் புரிந்துக்கொண்ட பெரும்கூட்டம் ஆங்காங்கு கர்த்தர் எனக்காக ஆயத்தப்படுத்திவைத்திருக்கிறார் என்பதை நான் அறிந்தபோது உள்ளத்தில் தேவனை துதித்தேன்.


UAE- Sharjah CSI Annual Convention 2013

(இந்த நாட்டில் நடந்த ஒவ்வொரு கூட்டத்திலும் எல்லா சபை அச்சன்மார்களும் கலந்துகொண்டு தலைமை வகித்தார்கள். Rev.Jiji John Jacob, (CSI Church, Dubai), Rev.N.M.Albert (St.Thomas Evangelical Church of India - Sharjah), Rev.M.T.Varghis Thomas (Marthoma Church - RAS Al Khaimah), Sharjah CSI Church Vicar Rev.Jacob John Mullacal அவர்களையும் படத்தில் காணலாம்).

Rev.Jacob John Mullackal (Vicar) அவர்கள் சபை செயலர் Mr.M.C.Thomas அவர்களும் கமிட்டியுடன் சேர்ந்து கன்வென்ஷன் ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர். வேதத்தில் உள்ள பல வசனங்களுக்கு விளக்கம் தெரிந்துக்கொள்ள பலர் வாஞ்சையாக இருந்தததை ஆவியானவர் அறிந்து அதற்கான பதிலை என் பிரசங்கத்தின் வழியாக ஆவியானவர் பேச வைத்தார். அதை அவர்கள் கேட்டபோது ஆச்சரியப்பட்டார்கள். உள்ளத்தை அறிகிற தேவன் இப்படியாக பலருக்கு வசனத்தை விளங்கவைத்து அவர்களுடைய குறைகளையெல்லாம் அறிக்கை செய்து விட்டுவிடசெய்தார். பெரும் உயிர்மீட்சி அச்சபையில் உண்டானது. CSIயின் அடுத்த கட்டிடத்தில் உள்ள மார்தோமா சபையிலும் வேண்டுமென்றே அதே நாட்களில் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனாலும் மார்தோமா சபையிலிருந்து மக்களும், ஆயரும் திரளாக வந்து கலந்துக்கொண்டார்கள். மார்தோமா சபைகளில் என் பழையகால ஆவிக்குரிய நண்பர்களை அநேக ஆண்டுகளுக்குப்பின் நேரில் சந்தித்ததில் என் மனதில் திருப்தி உண்டானது. கர்த்தருக்கே மகிமை.


BAHRAIN - பஹ்ரைன்
BAHRAIN TAMIL CHRISTIAN CHURCH - (BTCC)
சிறப்பு நற்செய்தி கூட்டங்கள்:

Bahrainல் National Evangelical Church ஆலய கட்டிடத்தில் தமிழ் CSI சபை மக்களும், CSI மலையாள Congregation-னும், மார்தோமா சபை விசுவாசிகளும் இணைந்து சபை ஆராதனை நடத்தப்பட்ட பல வருடங்களுக்குமுன் உள்ள அந்த ஆரம்ப காலத்திலேயே, அதே ஆலயத்தில் நான் பிரசங்கித்திருக்கிறேன். அதன்பின் இப்போது மார்தோமா சபை பிரிந்து தங்களுக்கென்று சொந்தமாக சபை கட்டிடத்தை கட்டி ஆராதிக்கிறார்கள். CSI மலையாள சபையும் தனி ஆராதனை நடத்துகிறார்கள்.

மீதியுள்ள தமிழ் சபை இப்போது கண்ணாடியைப்போல் உடைந்து சிறுசிறு துண்டுகளாகி இப்போது ஏறக்குறைய 60 தமிழ் சபைகளாக பெஹரினில் ஆராதிக்கிறார்கள்.

அவர்களில் பலர் பிரிந்துபோனாலும் நான் பிரசங்கித்த இந்த சபை ஒரு பெரும் கூட்டமாக பெஹரின் தமிழ் கிறிஸ்தவ சபை என்ற பெயரில் இயங்கிவருகிறது. இவர்கள் கன்னியாகுமரி டையோசிஸ்ஸிலிருந்து ஒரு ஆயரை இவர்கள் தெரிந்தெடுத்து இப்போது சிறப்பாக ஆராதித்து வருகிறார்கள். பெஹரினில் இப்போது உள்ள மற்ற அனைத்து 60 தமிழ் சபைகளும் இந்த சபையிலிருந்து பிரிந்தவையாகும். இந்த BTCC சபைதான் GULF ராஜ்யங்களிலேயே முதன்முதல் இந்திய மிஷனரிகளை தாங்க முன்வந்தது ஆகும்.

நான் பிரசங்கித்த அந்தகால ஆரம்ப நாட்களில் இனிமேல் நாங்கள் இந்திய மிஷனரிகளை தாங்குவோம் என்று தீர்மானித்த இந்த சபை மக்கள் இப்போது அரேபியாவிலேயே மிக அதிகமான மிஷனரிகளை இவர்கள் தாங்கியும், இந்தியாவில் பல சபைகளை கட்டிக்கொடுத்தும், பல சமூக சேவைகளுக்கும், இவர்கள் பணஉதவி செய்து இன்று அங்குள்ள எல்லா சபைகளிலும் சிறந்த சபையாக முன்னிலை வகிக்கிறது. அதற்காக இதுவரை இந்த சபையில் பொறுப்பு வகித்த சபை தலைவர்களையும், சபை செயலர்களையும், சபை அங்கத்தினர்களையும் வாழ்த்துகிறேன்.

நமது Tribal Mission-க்காக 15 லட்ச ரூபாயில் ஒரு ஆலயம் கட்டிக்கொடுக்க இவர்கள் தங்கள் ஆவலை தெரிவித்துள்ளார்கள். கர்த்தர்தாமே பெஹரின் தமிழ் கிறிஸ்தவ சபையையும் அங்கத்தினர்களையும், பொறுப்பாளர்களையும் ஆயரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

பெஹரின் தமிழ் கிறிஸ்தவ சபையின் (BTCC) ஆயர் Rev.Samuel Thurai அவர்கள் இக்கூட்டங்களை தலைமை வகித்து ஆரம்பித்து வைத்தார்கள். செயலர் திரு.விக்டர் பெனட் அவர்களும், உதவி தலைவர், பொருளாளர், பாடல் குழுவினர் யாவரும் இணைந்து என் கூட்டங்களை சிறப்பாக நடத்தினார்கள். ஆண்டவரின் நாமம் மகிமைப்பட்டது.

இந்தமுறை அரேபியா நாடுகளில் (ஷார்ஜா, பஹ்ரைன், குவைத்) என் ஊழியங்கள் அங்கு வாழும் தமிழ், மலையாளம் மொழி பேசும் மக்கள் ஆண்டவரின் வார்த்தைகளை மிகவும் பய பக்தியுடன் கேட்டு ஆவியில் பெலனடைந்தார்கள். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!.

அநேக ஆண்டுகளுக்குமுன் இதே பெஹரின் சபையில் பிரசங்கம் செய்யும்போது இந்திய மிஷனரி ஊழியங்களை தாங்கவேண்டிய அவசியத்தை கூறினேன். உடனே கமிட்டி தீர்மானம் செய்து அரேபிய நாட்டிலேயே முதன்முதல் மிஷனரிகளை பெஹரின் தமிழ் கிறிஸ்தவ காங்கிரிகேஷன் அங்கத்தினர்கள் ஏகோபித்து இணைந்து மிஷனரிகளை தொடர்ந்து தாங்க தொடங்கினார்கள். இப்போது 50 மிஷனரிகளையும் Nava Jeevan ஸ்தாபனம்மூலம் 10 அனாதை பிள்ளைகளையும், 6 கண்பார்வையற்றவர்களையும், IELE Bargur, 6 மூளைவளர்ச்சி இல்லாதவர்களை IELC Vellore மூலமாக தாங்குகிறார்கள். 5 காதுகேளாத - ஊமை பிள்ளைகளையும், 2 குஷ்டரோகிகளையும் (St.Lukes) தூத்துக்குடி மூலமாக தாங்குகிறார்கள். இந்தியாவில் 3 ஆலயங்களை கட்டி கொடுத்துள்ளார்கள். இப்படி இன்னும் அதிகமான சமூக சேவைகளுக்கு கொடுக்கும் பாரம் இந்த சபையினர் எல்லாருக்கும் உண்டு. கர்த்தர் பெஹரின் தமிழ் கிறிஸ்தவ காங்கிரிகேஷன் சபையை ஆசீர்வதிப்பாராக.


KUWAIT - குவைத்
St.PETER'S CSI MALAYALA CHURCH கூட்டங்கள் (குவைத்)

Kuwait மலையாள CSI சபையில் நான் 1998ம் வருடம் முதன்முதல் Rev.Abraham C.Pragash என்பவர் ஆயராக இருந்தபோது இங்கு பிரசங்கித்தேன். அதன்பின் சுமார் 15 வருடங்களுக்குபிறகு இப்போதுதான் 2013 Rev.Samji K.Sam என்ற ஆயர் தலைமையில் Mr.Satheesh MP செயலராக உள்ள இந்த நாட்களில் இக்கூட்டங்களில் பேச முதல் அழைப்பை பெற்றேன். அரேபியா நாடுகளில் முதல் அழைப்பு இங்கு இருந்துதான் வந்தது. அதன்பிறகு Sharjah, Bahrain ஆகிய தமிழ் சபைகளிலிருந்து அழைப்பை பெற்று Gulf ராஜ்யங்களில் பல கூட்டங்களில் பிரசங்கித்து வெற்றிகரமான ஊழியங்களை முடித்து இந்தியா திரும்பினேன். கர்த்தரின் நாமம் மகிமைப்பட்டது.

குவைத் சபை ஆயர் Rev.Samji K.Sam, குவைத் அஹமதி CSI சபை ஆயர் Rev.Johniandros அவர்கள் இக்கூட்டங்களில் பங்குகொண்டு கூட்டங்களை சிறப்பித்தனர். CSI தமிழ் சபை ஆயரான Rev.Samuel Nithiyanantham ஆகியோரும் இக்கூட்டங்களில் பங்குகொண்டனர். ஆண்டவரின் நாமம் மகிமைப்பட்டது. இந்த சபையில் மத்திய கேரளா சபைமக்கள் அதிகமாக உள்ளனர்.

தெற்கு கேரளா டையோசிஸ், வடக்கு, கிழக்கு கேரள டையோசிஸ் CSI சபை மக்களும் இந்த சபையில் கலந்துக் கொள்கின்றனர்.

நான் சென்று வந்த அனைத்து GULF ராஜ்யங்களின் CSI சபை அனைத்திலும் சபைமக்கள் என்னை என்றும் இல்லாதளவு நேசித்தனர். அவர்கள் காட்டிய அன்பு, உபசரிப்பு யாவும் என்னை மிகவும் நெகிழச்செய்தது.

இந்த பாலைவனத்தில் கஷ்டப்பட்டு உழைத்து வாழும் இவர்களையும் இவர்கள் குடும்பத்தையும், பிள்ளைகளையும் இந்தியாவில் விட்டுவந்த குடும்பங்களையும் கர்த்தர்தாமே ஆசீர்வதித்து காப்பாராக.

பல GULF ராஜ்யங்களில் விசா கிடைக்காமல், வேலையும் கிடைக்காமல் போலீஸ்க்கு பயந்து மறைந்து வாழும் மக்கள் ஏராளம். சிறைகளில் உள்ளவர்கள் எண்ணிக்கையும் ஏராளம். வெளிவர பெரும் தொகை அடைக்கவேண்டும். பலவருடம் அங்கு வேலைசெய்தாலும் அவ்வளது பெரிய தொகை சம்பாதிக்க இயலாது. ஆகவே சபைமக்கள் பணபிரிவு நடத்தி கோர்ட்டுக்கு பணம் செலுத்தி ஒரு சிலரை விடுவித்துள்ளனர். இன்னும் சிலரை விடுவித்து மனைவி, பிள்ளைகளையும் இந்தியாவுக்கு உயிரோடு திருப்பி அனுப்ப அங்குள்ள சபைகள் ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கின்றன. பல வருடங்களாக இந்தியா திரும்பமுடியாத சிலவாலிபர்களை அங்கு கண்டேன். அவர்களின் பெற்றோருக்கு பிள்ளைகள் உயிரோடு இருப்பதையும், அவர்கள் வேலை கிடைத்து, சம்பளம் பெற்றபின் நாடு திரும்புவார்கள் என்பதை, இந்தியாவுக்கு நான் திரும்பியவுடன் நேரில்சென்று அவர்கள் குடும்பத்தைக் கண்டு விவரம் அறிவித்து ஆறுதல் கூறி ஜெபித்தேன். அப்படிப்பட்ட வாலிபர்களை அங்கு கண்டபோது மனதில் மிகவும் வேதனையடைந்தேன். சரியான அரசாங்க ஆவணங்கள், விசா இல்லாமல் ஏஜென்டுகள் மூலம் பணம்கொடுத்து GULF வந்து ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக ஏராளம். அவர்களுக்காக நாம் ஜெபிப்போம்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM