இலங்கை வாழ் தமிழர்களின் தற்போதைய மனநிலை

மேற்கண்ட தலைப்பில் 2013 ஜுன் மாத ஜாமக்காரனில் இலங்கை நாட்டில் பலநிலையில் வாழும் இலங்கை தமிழர்கள் பத்திரிக்கை ஆசிரியர்கள், சாதாரண குடும்பதலைவர்கள் ஆகிய பலரின் கருத்துக்களை பேட்டி கண்டு இப்போதைய இலங்கை சூழ்நிலையில் இலங்கை தமிழர்களின் மனநிலை என்ன? என்பதை பற்றி தொகுத்து எழுதினேன்.

ஏனோ இலங்கை தமிழ் ஜாமக்காரன் வாசகர்களில் பெரும்பாலேனோர் அதைக்குறித்து வாயே திறக்கவில்லை. யாரும் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை!. அது என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. நான் எழுதிய கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதா?, மறுக்கக்கூடியதா? என்றுகூட யாரும் என்னை நேசிப்பவர்கள்கூட தங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துகொள்ளாதாது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யுத்தம் நடக்கும்போது விடுதலை புலிகளுக்கு பயந்து பல வாசகர்கள் கருத்து ஏதும் கூற தயங்கினார்கள். அல்லது அவர்களுக்கு பயந்து கருத்து கூறவில்லை என்றும் கூறலாம். ஆனால் இப்போதோ யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தபின் ஈழ நாட்டுக்காக பாடுபட்ட இயக்க தலைவர் மரித்துபோனபின் இப்போதுள்ள மயான அமைதியின் சூழ்நிலையில் இவர்களால் ஏன் கருத்து சொல்ல தயக்கம் என்று எனக்கு புரியவில்லை. நான் மாநில சுயாட்சி நல்லது என்றுதானே எழுதினேன்!. அதில் மக்களுக்கு பிரியமில்லையா? எனக்கு விளங்கவில்லை!. நான் எழுதியதில் பிழை ஏதும் உண்டானால் தயக்கம் இல்லாமல் கூறுங்கள். ஈழநாடு இனி கிடைக்காது என்று கூறிய இலங்கை யாழ்பாணத்தினர் பலரின் அபிப்ராயத்தைத்தான் நான் எடுத்து எழுதினேன். என் வாசகர்களுக்கு பிடிக்கவில்லையா? தயவுசெய்து மனம்விட்டு என்னுடன் கதையுங்கள். உங்கள் தமிழ்நாட்டின் மீது தனி பாரம் கொண்டவன் நான் என்பதால் இதை எழுதுகிறேன். இலங்கை தமிழ் நாட்டின் தற்போதைய நிலையில் இலங்கை தமிழ்நாடு எப்படியிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?. இலங்கையில் வாழும் தமிழர்களின் மனநிலையை ஜாமக்காரன் மூலம் வாசித்து அறிந்தீர்கள்.

இப்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் தங்கள் அபிப்ராயத்தையும் உங்கள் எதிர்ப்பார்ப்பையும் உங்கள் பெயர் குறிப்பிடாமல் நீங்கள் இருக்கும் நாட்டையும் குறிப்பிடாமல் எனக்கு எழுதுங்கள். அது அனைத்து உலக வாசகர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு வாசகர் மட்டும் எனக்கு விமர்சித்து எழுதியதை நீங்கள் அறியத்தருகிறேன்.

டாக்டர்.ஐயா அவர்களுக்கு (போதகர் அவர்களுக்கு) தாங்கள் ஜாமக்காரனில் எழுதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். அதில் சிறிய திருத்தம் உள்ளது. வடக்கு-கிழக்கு வாழ் தமிழர்களை யாழ்பாண தமிழர் என்பது சரியானது அல்ல. கிழக்கு மாகாண தமிழர்கள் ஒருபோதும் யாழ்பாண தமிழர்கள் ஆகமுடியாது. யாழ்பாண தமிழர்கள் தொழில் நிமித்தம் கிழக்கு பகுதிக்கு குடிபுகுந்தவர்கள்தான் அவர்கள். அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழருக்கு தனிப்பேச்சு தனி கலாச்சாரம் உண்டு. அவர்கள் யாழ்பாணத்திலிருந்து போனவர்களானாலும் வழமையான எங்கள் கலாச்சாரத்தை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தமிழர்கள் என்ற ஐக்கியத்தில் எந்த வேறுபாடும் இல்லை. மற்றும் வடக்கையும், கிழக்கையும் தலைவர்கள் என்ற ரீதியில் யாழ் தமிழர்கள்தான் ஆளுகை செய்துள்ளார்கள். கிழக்கு தமிழர்கள் யாழ்பாணத்தை ஆண்டது இல்லை. இன்றைய இலங்கை தமிழர் கூட்டணித் தலைவராக இருப்பவர்கூட யாழ் தமிழர்தான். ஆனால் அவர் திருக்கோணமலையில் குடியேறியவர் தந்தையின் தொழில் நிமித்தம் அங்கு வந்தவர்.

அந்த காரணத்தை பெரிதுப்படுத்தி கிழக்கு பகுதியிலிருந்தே அனைத்து முழு முஸ்லிம் தமிழர்களையும் புலிகள் இயக்கம் 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து வெளியேற்றினார்கள்.

அந்த முஸ்லீம் மக்களை நீங்கள் முஸ்லீம் தமிழர்கள் என்றுதான் எழுதலாம். ஆனால் அவர்களிடம் ஒரு கேள்வியை நீங்கள் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் வியப்பாக இருக்கும். நீங்கள் தமிழனா? சிங்களவரா? என்ற கேள்விக்கு அவர்களிடமிருந்து வரவேண்டிய பதில் ஒன்று தமிழ் அல்லது சிங்களம் என்றுதான் இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அப்படி சொல்லமாட்டர்கள். நாங்கள் முஸ்லீம் என்றுதான் பதில் சொல்வார்கள். இதை நீங்கள் அறிந்திருந்தால் நல்லது. கேள்வி மொழி சார்ந்த கேள்வியாகும். ஆனால் அவர்களின் பதில் மதம் சார்ந்த பதிலாக இருக்கும். ஆகவே அவர்களை நீங்கள் தமிழ் முஸ்லீம் என்று கூறுவீர்களா? அல்லது சிங்கள முஸ்லீம் என்று கூறுவீர்களா? அது உங்கள் முடிவு. ஒருபோதும் பிரிவை யாழ் தமிழர்கள் கேட்கவில்லை. நீங்கள் எழுதிய கருத்தின்படி தீர்வைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள். அதைத்தர அரசாங்கமும் தயாரிலில்லை. இலங்கை அரசாங்கத்துக்கு துணைப்போகிற உலக நாடுகளும் அல்லது நடுநிலை நிற்கிற நாடுகளும் அதை (மாநில சுய அதிகாரம்) வலியுறுத்தி எங்களுக்கு பெற்று கொடுக்க தயாரில்லை. அவர்கள் தங்களின் வல்லாதிக்கதினை நிலை நிறுத்த இலங்கை அரசை பகைக்கவிரும்பவில்லை அதுதான் உண்மை.

எனவே தமிழர்கள் தீர்வைத்தான் விரும்புகின்றார்கள். அதற்காக கிறிஸ்தவர் என்ற நிலையில் நாம் ஜெபிக்கலாமே தவிர எந்த கருத்தை வெளிப்படுத்தினாலும் அது கிறிஸ்தவர் என்ற நிலையை பாதிக்குமா? பாதிக்காதா?

இந்த விமர்சனத்தை ஜாமக்காரனுக்கு எழுதி அனுப்பிய நண்பருக்கு நன்றி.


ஜாமக்காரன் பதில்:

மேலே எழுதிய சகோதரனின் கருத்துக்கள் சிக்கலானவை என்றாலும் கிறிஸ்தவர் என்ற நிலையை பாதிக்குமா? பாதிக்காதா? என்ற ஆழமான கேள்வி அவர் கேட்டதால் என் கருத்தை இலங்கை தமிழர்களின் நலனுக்காக எழுதுகிறேன்.

கிறிஸ்தவர்கள் இரண்டு வகைப்படும்: பெயர் கிறிஸ்தவர்கள் - மனம்திரும்பிய கிறிஸ்தவர்கள். பெயர் கிறிஸ்தவர்கள் என்றால் பெயரில்மட்டும் கிறிஸ்தவம் இருக்கும். அவர்கள் சிந்தனை கிரியைகள் யாவும் உலகத்துக்கு ஒத்ததாக உலகத்தோடு இசைந்ததாக இருக்கும். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள்கூட இயேசுகிறிஸ்துவை அவர் ரோமர்களின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை இரட்சிக்கவந்த மேசியா அல்லது ராஜா என்றுதான் நினைத்தார்கள். அதன் நிமித்தமாக சீஷர்களுக்குள்ளேயே பதவி சண்டையும் வந்தது. இயேசுவின் வலது பக்கம் யார்? இடது பக்கம் யார்? என்ற கேள்வியெல்லாம் எழுந்தது. ஆனால் என் இராஜ்யம் இந்த உலகத்துக்குரியதல்ல என்று கூறி கிறிஸ்தவர்களாகிய நம்மையும் பார்த்து நீங்களும் இந்த உலகத்துக்குறியவர்கள் அல்ல, மேலானவைகளையே சிந்தியுங்கள் என்று போதித்தார். ஆகவே மனம் திரும்பின அனுபவம் உள்ள உண்மை கிறிஸ்தவனுக்கும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் எண்ணங்களில் அரசியல் அணுகுமுறையில் நிறைய வேறுபாடு நியாயம் இருக்கும் என்ற என் பொதுவான கருத்தை கூற விரும்புகிறேன்.

மேலே வாசித்த விமர்சனத்தை எழுதிய சகோதரன் கிறிஸ்தவர்தான் என்றாலும் தன் நாட்டு நலனில் அதிக அக்கறை கொண்டவர் என்பது விளங்குகிறது. ஆனால் அதிலும் யாழ்பாண தமிழர் என்ற உணர்வு அல்லது வெறி என்றுகூட சொல்லாலம் அது மேலோங்கியுள்ளது என்பதை அறியமுடிகிறது. அப்படிப்பட்ட அவரின் அரசியல் அணுகுமுறையில் அவர் தவறான கருத்தை கொண்டவராக இருக்கிறார் என்று அறிகிறேன்.

யாழ் தமிழர் யாரையும் வெறுக்கவில்லை. ஆனால் தீர்வைத்தான் விரும்புகிறோம். அதில் புதைந்து கிடக்கும் உண்மை என்னவென்றால் கிழக்கு, மேற்கு முஸ்லீம் என்ற எந்த தமிழரையும் நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் எங்களை யாழ்தமிழர்தான் ஆளவேண்டும் என்ற ஒரு கருத்து வெளிபடுகிறது. அவர் எழுதிய மற்ற விவரங்களையும் கருத்துக்களும் அதை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. பெயர் கிறிஸ்தவனுக்கும் - மனம் திரும்பின கிறிஸ்தவனுக்கு உள்ள வித்தியாசம் வெளிப்படுத்தப்படுகிறது.

வடக்கு-கிழக்கு தமிழர்களின் கலாச்சார வித்தியாசத்தையும், முஸ்லீம் மதத்தினரின் வேறுபட்ட பதிலையும் இங்கு உதாரணமாக்கி அவர் எழுதினார். அவர் எழுதியது சரியே? ஆனால் அந்த எண்ணம் தமிழர்களை கூறுபோடும் அல்லது பிரித்தாளும்நிலையில் அல்லது வேறுபடுத்தும் நிலையைத்தான் உண்டாக்கும் என்பது விளங்குகிறதல்லவா? அப்படிப்பட்ட எண்ணம் மனம்திரும்பிய உண்மையான கிறிஸ்தவர்களுக்கு வேதவசனத்தின்படி இருக்கக்கூடாதே?.

யாழ்பாணம் பெரிய ஊர் என்றுதான் கூறலாம். அதை ஒரு தனி நாடு என்றுகூட கூறமுடியாது. சிங்கப்பூர் யாழ்பாணத்தைவிட மிக சிறயது. ஏறக்குறைய 39 மைல் விஸ்தீரணம் உள்ள ஒரு குட்டிநாடு தனி அரசாங்கம் தனி ஜனாதிபதி, பிரதமர், மந்திரி எல்லாம் உள்ள ஜனநாயக நாடு. இங்கு முஸ்லீம், தமிழ், மலாய், சீனர்கள் ஆகியவர்கள் இணைந்து ஒரே இனமாக வாழ்கின்றனர். இவர்களை நீ யார் என்று கேட்டால் நான் முஸ்லீம் என்றோ சீனர் என்றோ கூறமாட்டார். நான் ஒரு சிங்கப்பூரியன் என்றுதான் பதில் கூறுவான். அவ்வளவு ஏன்? இந்தியாவில் 28 மாநிலங்கள் அடங்கியுள்ளது. தமிழ்நாடு என்று எடுத்துக்கொண்டால் சென்னை தமிழ், செட்டிநாடு தமிழ், கன்னியாகுமரி தமிழ், திருநெல்வேலி தமிழ், இப்படி பேசும் தமிழே வித்தியாசமானது. கலாச்சாரத்திலும் வித்தியாசம் உண்டு. இதில் கிறிஸ்தவர், இந்து, முஸ்லீம் தமிழ்நாட்டில் பிறந்து வாழும் குஜராத்திகள், ராஜஸ்தான் மாநிலக்காரர் ஆக இப்படி பல்வேறு இனத்தவர் உண்டு. ஆனால் வெளிநாட்டினர் இவர்களை பார்த்து நீங்கள் யார் என்று கேட்டால் நான் சென்னை தமிழ் அல்லது குஜராத்தி என்றே கூறுவதில்லை. நான் இந்திய தமிழன் அல்லது இந்தியன் என்றுதான் கூறுவான். பள்ளிகூட அத்தாட்சியில்கூட நான் இந்திய கிறிஸ்தவன் என்றுதான் குறிபிடப்படுகிறது. ஒரே நாடு பல மொழிகள், ஆனால் நாங்கள் யாவரும் நாங்கள் இந்தியர்கள் என்று கூறுவதில்தான் பெருமைப்படுவோம். கர்நாடகா, தமிழ்நாடு தண்ணீர் சண்டை உண்டு. கர்நாடகா-ஆந்திரா, தமிழ்நாடு-கேரளா பிரச்சனைகள் உண்டு. ஆனால் இந்திய தேசத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் பல மொழிகளில் பேசுகிறவர்கள் அனைவரும் சேர்ந்து இந்தியர்கள் என்ற ஒரே குரலை இணைத்து கொடுப்போம். இப்படிப்பட்ட நிலையில்தான் இலங்கையை எதிர்ப்பார்க்கிறேன். 1972ம் வருடம் நான் இலங்கைக்கு முதன்முறையாக வந்தபோது இந்தியாவில் காணப்பட்ட அந்த ஐக்கியத்தைதானே அன்றும் இலங்கையில் நானே நேரில் கண்டேன். அன்றைய இலங்கையிலிருந்து ஒரு முஸ்லீம் இந்தியா வந்தபோது நாங்கள் இலங்கையிலிருந்து வந்த தமிழ் முஸ்லீம் என்று கூறியதை நானே கேட்டேனே? காரணம் சிங்களத்திலும் மிகச்சிறிய அளவில் முஸ்லீமாக மதம் மாறியவர்கள் அங்கு இருந்தார்கள். அந்த வித்தியாசத்தை காட்ட அவர்கள் கூறிய பதில் நாங்கள் இலங்கை தமிழ் முஸ்லீம் என்றார்கள். இயக்க போராளிகளால் இலங்கை முஸ்லீம்களுக்கு பிரச்சனை வேறுபாடும் உண்டானப்பின்தான் தாங்கள் தமிழர்கள் என்று கூறவிரும்பாமல் போனார்கள்.

வெளிநாட்டில் வாழும் அன்பான இலங்கை தமிழர்களே, நீங்கள் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் நான் இலங்கை தமிழன் என்ற உணர்வு உள்ளத்தில் இருக்குமானால், நீங்கள் சைவமானாலும், கிறிஸ்தவனாலும், முஸ்லீம்மானாலும் தாய் தொப்புள்கொடி உணர்வு உங்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிச்சயம் உண்டாகும். கொலை, யுத்தம் இனப்பிரச்சனை இவைகள்தானே உங்களை கூறுபோட்டது. இலங்கை தமிழர்களுக்குள் உண்டான கடந்தகால கசப்பான அனுபவங்களை நீங்கள் மறப்பது உங்கள் பின் சந்ததிக்கு நல்லது. நீங்கள் வெளிநாடுகளில் சுகம் அனுபவித்துக்கொண்டு சமாதானத்துக்கு எதிராக அமைதியாக நிம்மதியாக வாழ்வதற்கு எதிரான பல எண்ணங்களை வெளியிடலாம். வெளியே வாழ்ந்துகொண்டு இருக்கும் உங்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் யாழ்பாண தமிழர்கள் அனுபவிக்கும் தற்போதைய அடிமை நிலையை சற்று எண்ணிப்பாருங்கள். புதிய சிந்தையுடன் யாழ்மக்களை வாழவைக்க நீங்கள் அனைவரும் உலக நாட்டு தலைவர்களை சந்தித்து ராஜபக்சேவின் சர்வாதிகாரத்திலிருந்து நாட்டை விடுவியுங்கள். இலங்கை தமிழர்களுக்குள் உண்டான வித்தியாச மானப்பான்மையைவிட்டு இலங்கை தமிழர்களாக உருவெடுங்கள். அப்போதுதான் இலங்கையின் தனி தமிழ்நாடு சுதந்திர தமிழ்நாடு உருவாகும். இலங்கையில் உள்ள அத்தனை தமிழரும் வடக்கு-கிழக்கு முஸ்லீம் என்ற வித்தியாசம் இன்றி ஒன்றிணைந்தால் தனி தமிழ் மாநில சுயஆட்சி நிச்சயம் தோன்றும். ஜெபித்து செயல்படுங்கள்.

இந்தியாவில் ஒரு முஸ்லீம் ஜனாதிபதியானார். மலையாள மொழி பேசும் ஒரு மலையாளி ஜனாதிபதியானர். உயர் வகுப்பு பிராமணர் ஜனாதிபதியானர். தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது இனத்தில் உள்ள திரு.ஜகஜீவன்ராம், திரு.நாரயாணன் போன்றோர் முழு இந்தியாவையும் ஜனாதிபதி பதவியில் அமர்ந்து ஆண்டனர். இந்திய மக்கள் பலர் மொழி, ஜாதி, வேற்றுமை மனப்பான்மை கொண்டவராக இருந்தாலும், இந்தியன் என்ற தேசிய நீரோட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்ளாக இருந்ததால்தான் உலகே வியக்கும் வண்ணம் பெரிய வல்லரசு நாடாக இந்தியா மாறியது. முன்பு இலங்கையிலும் அப்படித்தானே இருந்தது. புனகரதம் ஓட்டுனர், ஸ்டேஷன் மாஸ்டர், டாக்டர்கள், வல்லுனர்கள், அரசியல் உயர் அதிகாரிகள், பெரிய பெரிய தொழிலாதிபர்களெல்லாம் தமிழர்கள்தானே முழு இலங்கையிலும் பெரும்பான்மையுள்ளவராக இருந்தனர். அந்த நாள் திரும்ப வேண்டும் என்ற வாஞ்சையால் இதை எழுதுகிறேன்.

ஆனால் பிரச்சனைக்குறிய எதிரியை கொல்லத்தான் நாங்கள் பாம் வைத்தோம் என்று கூறி எத்தனை பொதுமக்கள் விதவைகளாக்கப்பட்டனர். எத்தனை பிரச்சனைக்கு சம்பந்தமில்லாத மனிதர்கள் கொல்லப்பட்டு பிள்ளைகளின் அனாதை இல்லங்கள் பெறுகின. உங்கள் குறிக்கோள், நோக்கம் எதிர்பார்ப்பு யாவும் சரியானதாக இருக்கலாம். ஆனால் அணுகுமுறை மிக தவறு!. மிக மிக தவறு!.

வாள் எடுக்கிறவன் - வாளால்தான் சாவான் என்று இயேசுகிறிஸ்து சொன்னது எத்தனை உண்மையானது என்பதை கண்டீர்களா?. இந்தியாவில் மகாத்மா காந்தியின் சாத்வீக வழிமூலமாக பிரிட்டிஸ்காரரை இந்தியாவைவிட்டு வெளியேற்றமுடியாது என்று கூறி நேதாஜி தன்னையே தேசத்துக்காக அர்பணித்து துப்பாக்கியை கையில் எடுத்தார். முடிவு நீங்கள் அறிவீர்களே? கடைசியில் சாத்வீகம்தான் ஜெயம் வாங்கி கொடுத்தது. 67 வருடம் சிறையில் சித்திரவதைப்பட்ட ஆப்பிரிக்கா தியாகி நெல்சன் மண்டேலா அவர்களின் சிறைவாசம் அவர் சித்திரவதையை சகித்தது. ஆப்பிரிக்காவுக்கு பெரிய விடுதலையை வாங்கிகொடுத்து இன்று உலகமே அவரை போற்றுகிறது. அவருக்கு சம்பந்தம் இல்லாத நாடுகளெல்லாம் அவரை கவுரவிக்க அவர் உயிரோடு இருக்கும்போதே அவருக்கு சிலை அமைத்து மரியாதை செய்கிறது. ஆனால் இந்த என் கருத்தை வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் உள்ளத்தில் கொண்டு போவது கடினம் என்பதை அறிவேன். வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் குடியுரிமை பெற்றுவிட்டவர்கள். அவர்கள் இப்போது லட்சக்கணக்கில் இருப்பதாலும் நாட்டு ஒற்றுமை குறித்து சிந்திக்காமல் வடக்கு கலாச்சாரம், கிழக்கு கலாச்சாரம் என்றெல்லாம் பிரித்து பார்க்கும் எண்ணம் வருகிறது.

அவர்கள் பெற்ற பிள்ளைகள் வெளிநாட்டு கலாச்சாரத்தில் பழகிவிட்ட காரணத்தால் இலங்கை தமிழர்கள் பெற்ற தமிழ் பிள்ளைகள் யாழ் தமிழ்நாட்டுக்கு குடியேற விரும்பவில்லை என்பதை பலர் நேர்முக டிவி பேட்டிகளில் நான் கேட்டிருக்கிறேன். நீங்களும் வரமாட்டீர்கள், உங்கள் பிள்ளைகளும் வரமாட்டார்கள். பின் எப்படி இலங்கையில் தனி தமிழ்நாடு மலரும். யாழ்பாணத்தில் வாழ மக்கள் எங்கே? இப்போதுரு மீதியுள்ளவர்களும் ஆஸ்ட்ரேலியா நோக்கி ஆயிரக்கணக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆஸ்ட்ரேலியா நியுகினி தீவு போன்ற பல தீவுகளில் கொண்டுபோகும் ஏற்பாடு முடிந்துவிட்டது. இது ராஜபக்ஷேவுக்கு மிகவும் சவுகரியமாகிவிட்டது. அதனால் தான் இலங்கையைவிட்டு வெளியேறும் தமிழர்கள் இலங்கை அரசாங்கம் தடுக்கவில்லை. எல்லாரும் வெளியேறிவிட்டால் யாழ்நாடு எங்கே?

அதேசமயம் இலங்கையைவிட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் அங்கு வாழும் மிஞ்சிய தமிழர்களிடம் பேசி பாருங்கள். வெறுப்பான வார்த்தைகள்தான் அவர்களிடமிருந்து வெளிவருகிறது. இப்போது நொந்துப்போன நிலையில்தான் இலங்கை தமிழ் பூமி காணப்படுகிறது. ஆனால் இப்போதுள்ளவர்களையாவது வாழ வழி உண்டாக்கினால்போதும். எங்க பூமி எங்களுக்கு, எங்கள் வீடு, எங்களுக்கு கிடைத்தால் போதும். நாங்கள் தமிழர்களாக கலாச்சாரம் பார்க்காமல் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாய் இலங்கை தமிழர்களாக வாழவேண்டும். இப்போது வெளிநாட்டில் வாழும் இலங்கை யாழ் தமிழர்கள் யாராவது கலாச்சாரம் பார்த்தா திருமணம் முடித்துள்ளார்கள். இல்லையே?

ஆகவே இந்த சூழ்நிலையில் இப்போதுள்ள இலங்கை நாட்டின் ஆபத்தை மனதில்கொண்டு அதை முறியடிக்க எல்லா நாடுகளின் உதவியை நாடுங்கள். இப்போது என்ன ஆபத்து? இலங்கையின் 13வது சட்டபிரிவை நீக்க ராஜபக்ஷேவும், புத்தபிக்குகளும் அரசியல்வாதிகளும் எடுக்கும் முடிவை கண்டிப்பாக முறியடிக்கவேண்டும். இதில் தோல்வி கண்டால் இப்போது தமிழருக்குள்ள கொஞ்ச சுதந்திரமும் நீங்கிப் போகும். அந்த பெரும் ஆபத்து 2013 செப்டம்பர் மாதத்தில் செயல்படுத்த திட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதை செயல்படுத்தினால் இலங்கை வரை படத்தில் யாழ் தமிழ்நாடு என்று ஒன்று இருந்தாக நம் சந்ததி அறியமுடியாது. முழு இலங்கையும் சிங்களர்களால் நிரப்பப்படும். இப்போதே அதற்கு முன்னோடியாக யாழ் நகர் எங்கும் பௌத்த சிலைகளால் நிரப்பப்டுவதை நானே நெரில் கண்டேன்..

இப்போதுதான் வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்களில் உள்ள உண்மை கிறிஸ்தவர்கள் பட்டினியுடன் அவரவர் இடங்களில் தொழிலுக்கு வேலைக்கு போகாமல் ஜெபிக்கவேண்டியது. மிக அவசரம். எசே 22:30, 9:4ன்படி ஜெபம் ஏறெடுப்போம்.

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என் ஆவியால் ஆகும் என்ற கர்த்தரிடம் (எஸ்ரா 4:6) ஜெபிப்போம்.

கர்த்தர் மனதுவைத்தால்தான் இலங்கை தமிழ்மண்ணுக்கு விடுதலை. அதற்கு அந்த தமிழ்மண்ணின் மைந்தர்கள், மக்கள் தங்களை தழ்த்தி இயேசுகிறிஸ்துவிடம் சரணடையவேண்டும். இயேசுகிறிஸ்து விடுவிப்பார். ஜெபிக்கிறேன் - நீங்களும் ஜெபிக்கவும். அனைவரும் சேர்ந்து ஜெபிப்போம்.

இந்த கட்டுரை வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்களில் உள்ள என் ஜாமக்காரன் வாசகர்களுக்காக மட்டுமே எழுதினேன்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM