அந்த ஆவியிலே அவர் ...... பிரசங்கித்தார்
(1பேதுரு 3:19)
  Selected

புதிய ஏற்பாட்டிலே விளக்க கடினமானதும், அறிவுக்குப் புலப்படாததும், நம் சிந்தைக்குப் புதிராகவும் இருக்கும் சில வசனப்பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த வசனத்தை மேற்கோள் காட்டி சிலர் உலகில் பிறந்த எல்லோருக்கும் பாவ மன்னிப்பு உண்டென்றும், மரித்துப்போனவர்களின் ஆத்துமாக்களின் பாவங்கள் கழுவப்படும் இடம் என்று ஒன்று உண்டென்றும் தவறாக போதித்து வருகின்றனர். உண்மையிலேயே பேதுரு இங்கே கூறமுயன்றது என்ன? வேத வல்லுநர்கள் பின்வருமாறு இந்த வசனத்தை விளக்குகின்றனர். சிலருடைய கருத்துக்களை கீழே வாசியுங்கள்:

முதல் கருத்து என்னவென்றால் இயேசுவானவர் மரித்து உயிர்த்தெழுந்தபின்பு நோவா காலத்தில் பாவஞ்செய்து மரித்து, காவலிருந்த அந்த ஆவிகளிடம் இயேசுகிறிஸ்து சென்று தாம் சாத்தானின் மேலும், மரணத்தின்மேலும் வெற்றி சிறந்தார் என்ற செய்தியை பிரசங்கித்தார் என்பதாகும். ஆனால் தாம் சாத்தானின்மேல் கொண்ட ஜெயத்தைக்குறித்து மரித்துப்போனவர்களின் ஆத்துமாக்களுக்கு அவர் அறிவிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதில் பிரயோஜனமுமில்லை. உயிரோடிருப்பவர்களுக்குத்தான் இரட்சிப்பின் வழியும், சுவிசேஷமும் அறிவிக்கப்படவேண்டுமே ஒழிய மரித்தோருக்கு அல்ல, ஏனென்றால் எபி 9:27 வசனத்தில் மிகத் தெளிவாக ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. அதனால் (முதல் கருத்தை) இந்த வியாக்கியானத்தை நாம் புறக்கணிக்கலாம்.

இரண்டாவது கருத்து என்னவென்றால் இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவினாவர் மூலமாக நோவாவின் வாயை உபயோகித்து நோவாவின் காலத்தில் உயிரோடிருந்தவர்களுக்கு போதித்தார் என்பதாகும். இந்த வியாக்கியானத்தை நாம் விளங்கிக்கொள்வதற்காக இந்த வசனத்தை இன்னும் ஆழமாக பார்ப்போம்.

"அந்த ஆவியிலே...." என்றால் எந்த ஆவியிலே? என்று அறிய முந்தின வசனத்தைப்பாருங்கள். கிறிஸ்து சிலுவை மரணத்திலிருந்து எந்த ஆவியின் வல்லமையினால் உயிர்த்தெழுந்தாரோ அந்த ஆவியினால் என்று விளங்கிக்கொள்ளவேண்டும். அது சரி.

அந்த ஆவியிலே கிறிஸ்து எப்படி நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்களோடு பேசியிருக்கமுடியும் என்று கேள்வி நம் மனதில் எழுமாயின. 1 பேதுரு 1:10-11 வசனங்களை வாசித்துப்பாருங்கள். பேதுரு தனக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகளைக்குறித்தும், அவர்களுக்கு இயேசுவின் மூலம் வரவிருக்கும் இரட்சிப்பைக்குறித்து ஆவியானவர் முன்னறிவித்தார் என்று அங்கு சொல்லப்பட்டிருக்கிறது. "அவர் போய்... பிரசங்கித்தார்" நோவா மூலமாகப் பேசியது கிறிஸ்துவே. நோவா தன் காலத்தில் 120 வருடங்கள் வரப்போகும் அழிவைக்குறித்துப் பிரசங்கித்தார். 2 பேதுரு 2:5 வசனத்தில் நோவாவைக்குறித்து பேதுரு எழுதும் போது "நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா" என்று குறிப்பிடுகிறார். இங்கேயும் அதே கருத்தைத்தான் பேதுரு வெளியிடுகிறார். "காவலிலுள்ள ஆவிகளுக்கு" இந்த ஆவிகள் நோவா காலத்தில் வாழ்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுடையது. அவர்கள் நோவாவின் எச்சரிப்பை அசட்டை செய்து புறக்கணித்தார்கள். அதனால் பெரு வெள்ளத்தில் மடிந்துப்போனார்கள்.

இவர்களுக்கு இன்னும் நியாயத்தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் (Remand) காவலில் உள்ளனர்.(ஜெயிலில் தள்ளப்பட்டவில்லை). இந்த ஆவிகள் நியாயத்தீர்ப்புக்காக காவலில் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றுதான் நாம் அர்த்தமும் கொள்ளவேண்டும். இந்த வசனத்தை நாம் சரியாகப் புரிந்துக்கொள்வது அவசியம். உயிரோடு வாழும்போதே மறுபடியும் பிறவாத பாவிகளுக்கும் அல்லது பாவிகளாகவே மரித்தவர்களுக்கும் மரணத்திற்குப் பின்பு இரட்சிக்கப்படுவதற்கு இன்னுமொரு தருணம் கொடுக்கப்படுகிறதில்லை. நாம் உயிரோடு இருக்கும்போதே மனந்திரும்பி கிறிஸ்துவின் வசனத்தினப்டி ஜீவிக்க ஒவ்வொருவரும் வாஞ்சிக்க வேண்டும். நாம் மரணத்துக்குமுன் மனந்திரும்புதல் ஏற்படவேண்டும். யோ 3:3. ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டான்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM