(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
- 1 கொரி 2:15


முன்னுரை

கர்த்தருக்குள் அன்பான ஜாமக்காரன் குடும்பங்களே!

கர்த்தரின் கிருபையால் எனக்கு கிடைக்கப்பெற்ற அன்பு வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறுகிறேன்.

2013 பிப்ரவரி மாத ஜாமக்காரனை வாசித்துவிட்டு ஏராளமான வாசகர்கள் துக்கம் விசாரிப்பதைப்போல் தொலைப் பேசியிலும், இ-மெயிலும், கடிதங்கள் மூலமாகவும் ஜாமக்காரனை நிறுத்திவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.

அன்பான வாசகர்களே! ஜாமக்காரனை நிறுத்துவதாக நான் எழுதவேயில்லையே! நானே நினைத்தாலும் நிறுத்த முடியாது. அது ஆண்டவர் கையில் இருக்கிறது. அவர் ஜாமக்காரனை நிறுத்த தீர்மானித்தால்தான் நிறுத்தமுடியும்.

இத்தனை ஆண்டுகள் ஆண்டவர் ஜாமக்காரன் மூலம் தன் திட்டத்தின்படி என்னை கொண்டு என்னென்ன எழுத சித்தம் கொண்டாரோ அவைகள் யாவும் அவர் திட்டப்படி முடித்து விட்டேன் என்றுதான் எழுதினேன். இனி அடுத்த கட்டத்துக்கு ஜாமக்காரன் மூலம் எப்படி என்னை உபயோகிப்பாரோ தெரியவில்லை.

எச்சரிப்பு! அறிவிப்பு! ஆகிய இந்த இரண்டு பணிகளையும் ஜாமக்காரன் மூலம் நீடித்து தொடர்ந்து முன்பு எழுதியதைப்போலவே எழுத வைப்பாரோ என்னவோ எனக்கு தெரியவில்லை. பழைய பாணியிலேயே இப்போதும் எழுத தொடங்கிவிட்டேன். தொடர்ந்து என் ஆயூள் உள்ளவரை எழுதுவேன் என்று நம்புகிறேன்.

பிப்ரவரி மாத ஜாமக்காரனில் வந்த என் ஊழிய அனுபவங்களை வாசித்த பலர் அழுதுவிட்டார்கள். ஏராளமானவர்கள் புரிந்துக்கொண்டார்கள். என்னைப்பற்றிய தவறான அபிப்ராயங்களை சரிப்படுத்திக்கொண்டார்கள். கடிதம் எழுதி விசாரித்த ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுகிறேன். என் வாசகர்கள் என்னை என்னமாய் நேசிக்கிறார்கள் என்பதையும், எத்தனை ஆயிரம் வாசகர்கள் என் கருத்துக்களை நம்புகிறார்கள், வரவேற்கிறார்கள் என்பதையும் அறிந்து தேவனைத் துதிக்கிறேன்.

கர்த்தரால் தேவன் எனக்களித்த வாசகர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர்களுக்காக தேவனை துதிக்கிறேன். என் அன்பு ஜாமக்காரன் வாசகர்கள் அனைவரும் என்னோடும், என் குடும்பத்தோடும் கர்த்தரின் வருகையில் காணப்பட ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறென். அதற்காக ஜெபிக்கிறேன்.

11, 12ம் வகுப்பு பிள்ளைகளுக்காகவும், 10ம் வகுப்பு பரீட்சை எழுதிய பிள்ளைகளுக்காகவும் ஜெபித்தேன், தொடர்ந்தும் ஜெபிப்பேன்.

எனக்காக ஜெபித்தவர்களுக்கும், ஜெபித்துக்கொண்டிருக்கிறவர்களுக்கும், எனக்கு நல்ல ஆலோசனைகளை எழுதியவர்களுக்கும், என்னை தைரியப்படுத்தி எழுதியவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். தேவனைத் துதிக்கிறேன்.

ஆன்-லைனில் காணிக்கை அனுப்பகிறவர்களும், ஏற்கனவே அனுப்பியவர்களும் தயவுசெய்து ஒருமுறை உங்கள் விலாசம், தொலைபேசி நெம்பர் ஆகியவைகளை எனக்கு எழுதி அனுப்புங்கள். எந்த பேங்கில் எவ்வளவு அனுப்பினீர்கள் என்றும் எழுதுங்கள். ஏற்கனவே எனக்கு நீங்கள் எழுதியிருந்தாலும் இன்னும் ஒருமுறை உங்கள் விலாசம் எழுதி எந்த பேங்க் என்பதையும் குறிப்பிட்டு உங்கள் தொலைபேசி எண்ணையும் எனக்கு எழுதி அனுப்பி உதவுங்கள். அவைகளை நான் தனியாக பிரித்து எழுதி ஆன்-லைனுக்காக புதுகணக்கு வைக்கப்போகிறேன். காணிக்கை ஆன்லைனில் அனுப்பியவுடன் போன் செய்து அறிவிக்கவும். அது எங்களுக்கு கணக்கில் வரவு வைக்க உதவியாக இருக்கும். காணிக்கை அனுப்பிய யாவருக்கும் என் வாழ்த்துதல்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பராக.

கர்த்தருடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக. ஆமென்.

கர்த்தரின் உன்னத பணியில்
டாக்டர்.புஷ்பராஜ்

Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM