மார்த்தோமா வாலிபர் சபை ஆராதனை
15 ஏப்ரல் 2012 - KAIRALY TV செய்திகள் - USA WEEKLY NEWS

அமெரிக்காவில் உள்ள மார்தோமா சபைகளை இரண்டாக்கி, சபையில் உள்ள வாலிபப் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து தங்களுக்கென்று தனியாக வாலிப மார்தோமா சபை ஆராதனை தொடங்கப் போவதைக்குறித்து மார்தோமா மெத்திரா போலித்தா (தலைமை பிஷப்) பதவியில் உள்ளவரிடம் Kailraly Weekly TV News-ல் நேருக்குநேர் கேள்வி பகுதியில் கேள்விகள் கேட்கப்பட்டது.

  அப்போது மார்தோமா மெத்திரா போலித்தா (தலைமை பிஷப்) அவர்கள் கூறியதாவது சபையில் உள்ள வாலிபர்களை தனியாகப் பிரித்து நடத்தும் ஒரு சபை ஆராதனையை கண்டிப்பாக நாங்கள் அனுமதிக்க முடியாது. மார்தோமா தலைமை இதுவரை அப்படி ஒரு அனுமதியை வெளிநாட்டு மார்தோமா சபைகள் எதற்கும் கொடுக்கவில்லை. நீங்கள் கூறுவது வெறும் வதந்திதான் என்றார்.

  அப்படியல்ல சுமார் 50 குடும்பங்கள் மார்தோமா வாலிபர் ஆராதனையை உற்சாகப்படுத்தி தனி ஆராதனையை தொடங்கிவிட்டார்கள் என்பதை பிஷப் அறியவில்லையா?

  அமெரிக்கா மார்தோமா சபையில் சில குடும்பங்கள் அப்படி வாலிபர்களை உற்சாகப்படுத்தும் எண்ணம் அவர்களுக்கு உண்டாகியிருக்கலாம். ஆனால் எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது.

அப்படியே அமெரிக்கா மார்தோமா சபை மக்கள் வாலிபர்களுக்கு சாதகமாக செயல்பட்டாலும், வாலிபர்களுக்கென்று மார்தோமா சபையை இரண்டாகப் பிரித்து ஆராதிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

  ஆராதனை தொடங்கிவிட்டார்கள் என்பதை அறிவீர்களா?

  அது எனக்கு தெரியாது!. நாங்கள் அனுமதிக்கவில்லை. அவ்வளவுதான்! நாங்கள் அதை அனுமதிக்கவுமாட்டோம். இப்படியாக டிவி நேருக்குநேர் சம்பாஷணையில் தலைமை பிஷப் பதில் அளித்தார்.

ஜாமக்காரன் குறிப்பு: அமெரிக்காவில் வாழும் மார்தோமா சபையில் உள்ள என் ஜாமக்காரன் வாசகர்களுக்கு, சபை என்பது பெற்றோர், பிள்ளைகள், குழந்தைகள் யாவரும் குடும்பங்களாக சேர்ந்து ஆராதிப்பது ஆகும். இதில் ஞாயிறு-பள்ளி பிள்ளைகளை தனியாக பிரித்து ஞாயிறு-பள்ளி வகுப்புகள் நடத்தலாம். வாலிபப்பிள்ளைகளை பிரித்து வாலிபர் கூட்டம் நடத்தலாம், பெண்களை தனியாக பிரித்து பெண்கள் ஐக்கிய சங்கம் நடத்தலாம். திருநெல்வேலி-தூத்துக்குடியில் உள்ள CSI சபைகளில் உள்ள ஆண்கள் தனியாக இணைந்து ஆண்கள் ஐக்கிய சங்கம் என்று நடத்துவதைப்போலவும், மலையாள சபைகளிலும் சபை ஆண்கள் ஒன்றாக இணைந்து வாரத்தில் ஏதாவது ஒருநாளில் ஆண்கள் ஒன்றுகூடி ஜெபகூட்டங்கள் நடத்தலாம். சபையில் இப்படி பலராக பிரிந்து சபைக்குள்ளேயே சபையில் உள்ள அந்தந்த வயதில் உள்ளவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காக தனி கவனம் செலுத்துவது நல்லது. எந்த கூட்டமானாலும் அவை சபைக்குள்ளில்தான் நடத்தப்படவேண்டும்.

  ஆகவே ஆராதனை என்பது இவர்கள் எல்லாரையும் உள்ளடக்கி இணைந்து கூடி குடும்பங்களாக ஆராதிப்பதுதான் சபை ஆராதனை ஆகும். இந்த ஆராதனை அல்லாமல் மற்றொரு ஆராதனை வாலிபர்களுக்கென்று பிரித்து தனி ஆராதனையாக நடத்தப்படக்கூடாது.

வெளிநாட்டில் உள்ள வாலிபர்களுக்கு மலையாளம் எழுதப் படிக்க தெரியாது என்பதற்காகதானே மலையாளமும், ஆங்கிலமும் இணைந்த ஆராதனை லிட்டர்ஜி அச்சடித்து வைத்து அனைவரும் சேர்ந்து ஒன்றாக ஆண்டவரை துதித்து பாடவும் ஆராதிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்கள். அந்தமுறையில் எல்லாரும் இணைந்த ஆராதனையை தொடரலாமே!

  வெளிநாடுகளில் வாழும் CSI சபை மக்களுக்கும் இதே விதத்தில் இரண்டு பாஷைகளிலும் ஆராதனை கிரமம் உண்டு.

  அமெரிக்காவில் உள்ள மார்தோமா சபை வாலிப பிள்ளைகள் சபையை விட்டு பிரிந்து தனியாக ஆராதிக்க காரணம் மலையாள பாஷை விளங்காதது மட்டுமல்ல, மார்தோமா சபை மேல்மட்டத்தில் அதிகாரங்களில் இருப்பவர்களோடுள்ள சில வெறுப்பும், கருத்து வேறுபாடுகளும் வேறு சில விஷயங்களும்தான் அவர்கள் தனி ஆராதனையை விரும்பும் காரணங்களாக கூறப்படுகிறது. அதை சபை பொறுப்பாளர்களும், வாலிபர்களும், மார்தோமா தலைமை பிஷப் அவர்களின் முன்னிலையில் உட்கார்ந்து பேசினால் வாலிபர்களின் உள்ளத்தின் வெறுப்புக்கு காரணம் விளங்கும். அவைகளை சரிப்படுத்தவும் முடியும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

  இந்த என் ஆலோசனை மார்தோமா சபை மக்களுக்கல்ல, மார்தோமா சபை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அல்ல, இது மார்தோமா சபைகளில் உள்ள என் ஜாமக்காரன் வாசக குடும்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். என் வாசகர்களுக்கு ஆலோசனைக்கூறத்தான் எனக்கு உரிமை உண்டு.

  மிக முக்கியமாக நான் கூறும் மற்றொரு ஆலோசனை என்னவென்றால் வெளிநாட்டில் வாழும் கிறிஸ்தவ மலையாளிகளின் பிள்ளைகளுக்கு மலையாளம் பேச தெரியாவிட்டாலும் நடத்தப்படும். இப்படிப்பட்ட இரண்டு பாஷைகளோடு கூடிய ஆராதனை முறைமை புத்தகம் மூலம் மலையாளம் என்ற தாய் பாஷையை பிள்ளைகள் காதுகளில் கேட்டு மலையாள பாஷையை மறக்காமல் இருக்கமுடியும். மேலும் கிறிஸ்தவ சபை வாலிப பிள்ளைகள் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தாய் பாஷையை ஒருபோதும் மறக்கக்கூடாது. தாய் பாஷையை மறந்தால் தாய்நாட்டை மறக்கவேண்டிவரும். தாய்நாட்டை மறந்தால் தேவன் உங்களை வெளிநாடுகளில் கொண்டுப்போன அல்லது வெளிநாட்டில் பிறக்க வைத்த நோக்கம் மாறிப்போகும். கர்த்தர் நோக்கம் இல்லாமல் உங்களை வெளிநாட்டில் கொண்டுபோகவில்லை அல்லது வெளிநாட்டில் பிறக்க வைக்கவில்லை. அதை மறக்கவேண்டாம்.

  நீங்கள் வெளிநாட்டில் வாழ்வது அல்லது வேலை செய்து சம்பாரிப்பது நீங்கள் சௌகரியமாக, சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காக கர்த்தர் உங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பணக்காரராக்கினார். ஆனால் அதேசமயம் உங்களை வெளிநாடு செல்ல, வழி உண்டாக்க, காரணமான நம் தேவனின் ஊழியத்துக்கு கர்த்தரின் சபைக்கு தாய்நாட்டின் மிஷனரி பணிக்கு, தேவராஜ்யத்தின் கட்டுமான பணிக்கு உங்களால் ஏதாவது உதவி செய்யமுடியுமா? என்பதை தேவன் எதிர்ப்பார்க்கிறார். உனக்கு கிடைத்த பணத்தில் கர்த்தருகென்று ஏதாவது சிறிய பங்கு கிடைக்குமா என்று கர்த்தர் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறார் என்பதையும் மறக்கக்கூடாது.

உங்கள் சாமர்த்தியத்தினால், உங்கள் படிப்பால் நீங்கள் உயர்ந்துவிடவில்லை. கர்த்தரின் கிருபையால் மட்டுமே உங்கள் நிலை உயர்ந்துள்ளது என்பதை யாரும் எப்போதும் மறக்கக்கூடாது.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM