கழுதை பேசிய அந்நியபாஷை எண் 22:28

தீர்க்கதரிசனம் என்ற பெயரில் பண ஆசையால் தீர்க்கதரிசனம் கூறும் இன்றைய கள்ள தீர்க்கதரிசிகளைப்போல, அந்த காலத்திலும் பிலேயாம் என்ற தீர்க்கதரிசியிருந்தான். கர்த்தரின் பிரியம் இல்லாத ஊழியத்துக்கு கழுதையின்மீது ஏறி பிரயாணம் செய்துபோது பரிசுத்த ஆவியானவர் கழுதையின் வாயை திறந்து பேச வைத்தார். அந்த வார்த்தை பிலேயாம் உபயோகிக்கும் எபிரேய பாஷையாக இருந்தது. அதனால் தீர்க்கதரிசியும் கழுதையுடன் எபிரேய பாஷையில் பதில் கூறுகிற சம்பாஷைனைகளை வேதத்தில் வாசிக்கிறோம். அப்படியிருக்க அவரவர்களுக்கு விளங்கும் பாஷையில் கர்த்தர் கழுதை மூலமாக பேசும்போது அருமை பெந்தேகோஸ்தே சபை விசுவாசிகளே பரிசுத்தாவியினால் நிரம்பி பேசுகிறேன் என்று உங்கள் வாயினால் பேசும் பாஷை யாருக்காவது விளங்குகிறதா? பேசும் உங்களுக்காவது விளங்குகிறதா? யோசியுங்கள். நான் எழுதுவது விளங்காவிட்டால் அந்த கழுதையோடு உங்கள் பாஷையை ஒப்பிட்டு பார்த்தாவது தெளிவுப்பெறுங்கள்.


முழு வேதத்திலும் 3 இடங்களில் மட்டும் அந்நியபாஷை

1). முதல் இடம்: அப் 2:4 ஒரு வாயிலிருந்து பலபாஷைகள் வெளிபட்டன. அந்த பாஷைகளுக்கு அர்த்தம் தெரிந்தது. அந்தந்த பாஷைக்குறியவர்கள் அங்கு இருந்தார்கள்.

2). இரண்டாவது இடம்: அப் 10:45. கொர்நேலியு என்ற புற இனத்தை சேர்ந்தவன் வீட்டில் கூடின புறஜாதி மக்கள் இவர்களும் பல பாஷைகளில் தேவனை புகழ்ந்தார்கள் என்று எழுதியுள்ளது. மேசியாவான இயேசுகிறிஸ்து யூதகுலமக்களுக்கு மட்டுமே என்று நினைத்துக்கொண்டிருந்த பேதுருவுக்கும், மற்றவர்களுக்கும் இயேசுகிறிஸ்து புற ஜாதிகளுக்காகவும் இரத்தம் சிந்தினார் என்பதை விளங்கவைக்கவும் பரிசுத்த ஆவியானவர் நிறைவு எல்லா இனத்தவருக்கும் உண்டு என்பதை உணர்த்த பரிசுத்தாவியானவர் கொர்நேலியுஸ் வீட்டார் அனைவரையும் பல பாஷையில் தேவனை புகழ வைத்து அல்லது பேச வைத்து விளங்கவைத்தார். இந்த பாஷையில் தேவனின் மகத்துவத்தை புகழ்ந்து பேசுவதை கவனியுங்கள். அந்த புகழ்ச்சியில் அந்த பாஷையில் அர்த்தம் இருந்தது.

3). மூன்றாவது இடம்: அப் 19:6. எபேசு என்ற பட்டணத்தில் விக்கிரக வணக்கம் செய்துக் கொண்டிருந்த புறஜாதிகள் சிலர் மனம் திரும்பி விக்கிரக வணக்கத்தை விட்டுவிட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை பெற்று சீஷர்களாக இருந்தார்கள். பரிசுத்தாவியானவரின் இறக்கம் யூதர்களுக்கு மட்டுமல்ல, இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட புறஜாதிகளுக்கும் விக்கிரகத்தை வணங்கிவந்த தங்களுக்கும் உண்டு என்பதை விளங்க வைக்க பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரைப்பற்றி பவுல் தன் பிரசங்கத்தில் தெளிவாக கூறி அவர்கள்மேல் கைகளை வைத்தபோது பரிசுத்த ஆவியானரின் நிறைவு அவர்களுக்கு உண்டாகி அதை உறுதிபடுத்தும் வகையில் அவர்கள் வேற்றுமொழியில் பேசி தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். தீர்க்கதரிசனம் என்றால் கர்த்தரின் வார்த்தை என்பதாகும். அந்த வார்த்தைக்கும் அர்த்தம் உண்டு. தீர்க்கதரிசனம் என்ற கர்த்தரின் வார்த்தையை அவர்கள் பேசினார்கள். அவர்கள் பேசியது விளங்காத சத்தம் அல்ல என்பதையும் இந்த இடத்தில் வாசகர்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே பாஷை என்ற பெயரில் யாருக்கும் விளங்காதவற்றை பேசி உங்கள் ஜெப நேரத்தை, உங்கள் ஆராதனை நேரத்தை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.


தெளிவு பெறுங்கள்.

கழுதைகூட தெளிவாக நம் பாஷையில் பேசவைத்த ஆவியானவர் உங்களை அப்படி தெளிவாக மற்றவர்களுக்கு பிரயோஜனமான வார்த்தைகள் மூலமாக பேச வைக்கமாட்டாரா? சிலர் நினைக்கிறார்கள். சபையில் மற்றவர்கள் பாஷையில் பேசும்போது நாமும் அப்படி உளறாவிட்டால் நமக்கு ஆவியானவர் இல்லை என்று நினைத்துவிடுவார்களோ என்று பயந்து பலர் பாஷையைபோல்பேசி உளறி நடிக்கிறார்கள். பேசும் பாஷை போலியானால் உங்கள் ஜெபமும் போலி, உங்கள் வாழ்க்கையும் போலி, மேலும் உங்கள் ஜீவியமே போலியாகி விடுகிறது. அதனால் நீங்கள் ஆவியானவருக்கு விரோதமாக மாய்மாலம் செய்கிறவர்களாகிறீர்கள். ஜாக்கிரதை இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படமுடியாத பாவம் செய்தவர்களாகவீர்கள். 1கொரி 14:8-10.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM