அப்போஸ்தலர் நடபடிகள் 1:4
(வெவ்வேறு பாஷைகளும் - அந்நிய பாஷையும்)
  SELECTED
வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள் (வசனம் 1:4):

மஞ்சுவிளை சேகரத்தில் திருமண்டல சபை ஊழியராக நான் பணிபுரிந்துக்கொண்டு இருந்த பொழுது ஒருவர் என்னை சந்திக்கும்படியாக வந்தார். உங்களுக்காக வேதம் வாசித்து ஜெபிக்கும்படியாக ஆண்டவர் என்னை அனுப்பினார் என்றார் அவர். ஜெபிக்க வந்தேன் என்று என்னிடம் கூறினதால் எவ்வித மறுப்பும் நான் தெரிவிக்கவில்லை.

  ஜெபிப்பதற்கு முன்பு அவர் என்னிடம் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா? என்றார்.

  ஆம் என்றேன்.

  மீண்டும் என்னிடம் அந்நியபாஷையில் பேசுகிறீர்களா? என்றார். இல்லை! என்றேன்!.

அப்படியானால் நீங்கள் ஆவியின் அபிஷேகம் பெறவில்லை என்றார். உடனே நான் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறும்பொழுதே நான் ஆவியானவரைப் பெற்றுவிட்டேன். ஆவியானவர் துணையோடுதான் இப்போது ஊழியம் செய்கிறேன் என்றேன். மீண்டும் அவர் என்னிடம் நீங்கள் சொல்வது தவறு. அப் 2:1-4 வசனங்களை வாசித்துப்பாருங்கள். பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் அந்நியபாஷையில் பேசவேண்டும் என்று எழுதியிருக்கிறது. ஆகவே இந்த வசனத்தின்படி நீங்கள் அந்நியபாஷை பேசவில்லை.

ஆகவே நீங்கள் ஆவியின் அபிஷேகம் பெறவில்லை. ஆகவே இப்போது உங்களுக்காக நான் பவுலைப்போல் உங்கள் தலையில் கை வைத்து ஜெபிக்கிறேன். அப்பொழுது நீங்கள் ஆவியின் அபிஷேகம் பெறுவீர்கள் என்றார். உடனே நான் மறுப்பு தெரிவித்தேன். ஜெபிக்கவேண்டுமானால் ஜெபித்துவிட்டு செல்லுங்கள் என்று கூறி தலையில் அவர் கை வைத்து ஜெபிக்க அனுமதிக்கவில்லை. இப்பொழுது அவர் வெறுமனே ஜெபித்துவிட்டு தயங்கி தயங்கி நின்றார். ஏன் புறப்படாமல் நிற்கிறார்?என்றால் என் ஊழியத்திற்கு ஏதாவது காணிக்கை கொடுங்கள் என்றார்.

இப்படி அநேகர் அப் 2:1-4 வசனங்களை மேற்கோள்காட்டி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவேண்டும் என்றால் இடிமுழக்கமும், அக்கினிமயமான நாவுகளும், அந்நியபாஷையும் கண்டிப்பாக காணப்படவேண்டும். இதுவே பரிசுத்த ஆவியின் அடையாளம் என்று வாதிடுபவர்கள் உண்டு.


பெந்தேகோஸ்தே நாளில் நடந்தது என்ன?

மூன்று அடையாளங்கள் 1). முழக்கம், 2). அக்கினி நாவு, 3). வெவ்வேறு பாஷை. பேதுரு நடந்தவைகளை விளக்கும்பொழுது தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது (வச 2:16) என்று கூறுகிறார்.

யோவேலினால் உரைக்கப்பட்டபடியே, எது நடந்தேறுகிறது?.

பலத்த காற்று அடிக்கிறது போன்ற முழக்கமா?

அக்கினிமயமான நாவுகள் போன்ற பிரிந்திருக்கும் நெருப்பு நாவுகளா?

வெவ்வேறு பாஷை போன்ற வரமா?..... இல்லவே இல்லை!.

அப்படியானால் அங்கு எது நடந்தேறுகிறது? என்றார்.

பரிசுத்த ஆவியானவரின் வருகை நடந்தேறுகிறது.


யோவேலின் தீர்க்கதரிசனம் என்ன சொல்கிறது கவனியுங்கள்:

மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்... (யோவேல் 2:28-31). யோவேல் தீர்க்கதரிசி ஆவியானவருடைய வருகையை குறித்து கூறிவிட்டு தொடர்ந்து அடையாளங்களைக்குறித்து கூறுகிறார். யோவேல் கூறின அடையாளங்களாயாவன:

1. தீர்க்கதரிசனம் சொல்லல், 2. சொப்பனங்கள், 3. தரிசனங்கள், 4. இரத்தம், 5. அக்கினி,
6. புகைஸ்தம்பம், 7. சூரியன் இருளடையும், 8. சந்திரன்-இரத்தமாக மாறும்.

யோவேல் குறிப்பிட்ட மேற்கண்ட எட்டு அடையாளங்களும் அந்த குறிப்பிட்ட பெந்தேகோஸ்தே நாளில் நிறைவேறவில்லையே!. அக்கினியையும், புகைக்காட்டையும் ஒருவாறு காண்கிறோம். மற்ற அடையாளங்களைப் பெந்தேகோஸ்தே நாளில் காணமுடியவில்லையே!. இங்கு சீஷர்கள் பேசின வெவ்வேறு பாஷைகளைப்பற்றி யோவேல் சொன்ன தீர்க்கதரிசனத்தில் காணோம்!. வெவ்வேறு பாஷை என்பது பரிசுத்த ஆவியானவரின் ஒரு முக்கியமான அடையாளமென்றால், தெளிந்த புத்தியுள்ள சத்திய ஆவியானவர் நிச்சயமாக யோவேலின் மூலமாய் அன்றே தீர்க்கதரிசனமாக அதைக்குறித்து குறிப்பிட்டிருந்திருப்பாரே!.

யோவேலின் தீர்க்கதரிசனத்தின்படி நடந்தேறியது என்னவென்றால்! அது ஆவியானவருடைய முதலாம் வருகையேயன்றி குறிப்பிட்ட ஓர் அடையாளமல்ல. ஆவியின் நிறைவுக்கு அந்நியபாஷை ஒன்றே அடையாளம் என்பது வேதத்திற்கு விரோதமான, ஆவியானவருக்கு விரோதமான பாவம். அந்நிய பாஷை என்பது ஒரு வரம். அது அடையாளமல்ல.

ஆவியானவரால் நிரப்பப்படும்பொழுது எல்லாரும் அந்நியபாஷை பேசீனார்களா? என்று அப். நடபடிகளில் உள்ள சம்பவங்களில் பார்த்தால் இல்லை என்றுதான் பதில் கூறலாம்.

1). அப் 4:31ல் மீண்டும் ஆவியானவரால் நிரப்பப்படும்பொழுது இடம் மட்டும் அசைந்தது.

2). ஸ்தேவான் ஆவியானவரால் நிரப்பப்படும்பொழுது தரிசனம் கண்டான் (7:55).

3). சமாரியர் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றபொழுது அடையாளங்கள் எதுவும் நிகழவில்லை. (8:16,17).

4). சவுல் பரிசுத்த ஆவியானல் நிறைந்தபொழுது மீன் செதில்கள் போன்றவைகள் கண்களிலிருந்து விழுந்தன (அப் 9:17).

5). பரிசுத்த ஆவியானவர் கொர்நேலியு வீட்டார்மீது இறங்கினபோது பல பாஷைகளைப் பேசினார்கள்(அப் 10:44-46).

6). எபேசுவின் சீஷர்கள் மீது ஆவியானவர் வந்தபொழுது அவர்கள் அந்நிய பாஷை பேசினார்கள். தீர்க்கதரிசனமும் சொன்னார்கள் (19:6).

இவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடி அவரவர்கள் பெற்ற அனுபவத்தைக்கூறி சாட்சி சொன்னால் என்ன நடக்கும்? ஒருவர் ஆவியானவரைப் பெற்றதற்கு அடையாளம் மீன் செதில்கள் போன்றவை கண்களிலிருந்து விழவேண்டும் என்பார். இன்னொருவர் இல்லை, தரிசனம் காணவேண்டும் என்பார். மற்றவர் இல்லவே இல்லை. அந்நியபாஷைதான் பேசவேண்டும் என்பார், இல்லை தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்பார் வேறொருவர். எல்லாவற்றிற்கும் மேலாக சமாரியர் என்ன சொல்லியிருக்கவேண்டும். எங்களுக்கு ஒன்றுமே நடைபெறவில்லையே!. எனவே அடையாளம் ஒன்றும் அவசியமேயில்லை என்பார்கள்.


அடையாளம் முக்கியமல்ல:

ஆகவே, அன்பானவர்களே, ஆவியானவரைப் நாம் பெறுவது மிக முக்கியம். அவரது வருகை நமக்குள்ளே நடப்பது முக்கியம். அவரது சந்திப்பு நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். ஆனால், அடையாளம் முக்கியமல்ல!. இதனை டாக்டர்.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் திருமறையில் ஆவியானவர் என்கின்ற தன்னுடைய புத்தகத்தில் தெளிவாக இவ்விதமாக கூறுகிறார்.

ஆவிக்குரிய அனுபவத்தில் சிலர் மையத்தில் வைக்கவேண்டியதை ஓரத்திலும், ஓரத்தில் வைக்கவேண்டியதை மையத்திலும்கொண்டு வருவதினால் ஆவியானவர் மிகவும் துக்கப்படுகிறார். ஓரத்தில் வைக்கவேண்டியவைகள் ஆவியானவருடைய வருகையின் முறைகளும் வரங்களும் ஆகும்.


வெவ்வேறு பாஷை என்றால் என்ன?

அப் 2ல் சீஷர்கள் அந்நியபாஷை பேசவில்லை! சீஷர்கள் வெவ்வேறுபாஷை என்னும் வரத்தை பேசினார்கள். அந்நியபாஷை என்பது வேறு. வெவ்வேறு பாஷை என்பது வேறு. மூல வேதாகமத்தில் அப் 2ல் சொல்லப்பட்டுள்ள வெவ்வேறு பாஷைக்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தை "Heteros Dialectos" என்பதாகும். 1 கொரி 14ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள அந்நியபாஷை என்னும் வரத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தை "Glossolalia" ஆகும். இரண்டிற்கும் அர்த்தங்களிலேயே பெரிய வித்தியாசம் உண்டு. வெவ்வேறு பாஷை என்பதற்கு Other Tongues என்றும், அந்நியபாஷை என்பது unknown tongues என்றும் பொருள்படும். வெவ்வேறு பாஷை என்பது இவ்வுலகில் பேசப்படுகின்ற வெவ்வேறு மொழிகள் ஆகும்.

ஆகவே அன்று பெந்தேகோஸ்தே நாளில் கூடியிருந்த ஜனங்கள் சீஷர்கள் பேசிய வெவ்வேறு பாஷையைக்குறித்து அவர்கள் கூறியதை கவனியுங்கள். தங்கள்தங்கள் பாஷையிலும், தங்கள் ஜென்ம பாஷையிலும், நம்முடைய பாஷையிலும் சீஷர்கள் பேசுவதாகக் கூறினார்கள். ஆனால் கொரிந்துவில் பேசப்பட்ட அந்நியபாஷையோ மனிதர் புரியமுடியாத, பேசுகிறவனே கருத்தை அறியமுடியாத ஒரு பாஷையாகும் (1கொரி 14:2,11,14). ஆகவே கொரிந்து சபையின் அந்நியபாஷைக்கு அர்த்தம் சொல்கிறவன் தேவைப்பட்டது. பெந்தேகோஸ்தேநாளில் வெவ்வேறுபாஷைக்கு அர்த்தம் சொல்கிறவன் தேவைப்படவில்லை என்பதை முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே அப்.2ம் அதிகாரத்தில் சீஷர்கள் அந்நியபாஷை பேசவில்லை என்பது தெளிவாகிறது. அப்போஸ்தலர் நடபடிகள் முழுவதிலும் ஒரே ஒருஇடத்தில்தான் அதுவும் எபேசுவில் மட்டும்தான் சிலர் அந்நியபாஷை பேசினதாக அறிகிறோம் (அப் 19:6).

நன்றி: நற்போதகம் ஜுன் 2012 - Rev.T.D.ஜெபக்குமார், KTC நகர் சேகரம்.

Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM