IEM (Indian Evangelical Mission)
10th IEM MISSIONARY & FAMILY CONFERENCE 2012

தமிழ்நாடு IEM சார்பில் சென்னை-பாண்டிசேரி வழியில் கல்பாக்கம் அருகே பரமன்கேணி என்ற இடத்தில் உள்ள TWR Retreat Centre-ல் தென் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பணிதளங்களிலுள்ள மிஷனரிகளுக்கும், மிஷனரி குடும்பங்களுக்கும் 3 நாள் விசேஷ கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறப்பு என்னவென்றால் IEM மிஷனரிகளை தாங்கும் பங்காளர்களின் குடும்பங்களுக்கும் இக்கூட்டங்களில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களும் தாங்கள் தங்கள் காணிக்கைகளால், ஜெபங்களால் தாங்கும் தங்கள் மிஷனரி குடும்பங்களை நேரில் காணவும் அவர்களை விசாரிக்கவும், ஒரே குடும்பமாக பழகவும் நல்ல சிறப்பான ஏற்பாடுகளை IEM பொறுப்பாளர்கள் செய்திருந்தது மிஷனரிகளை தாங்குவோருக்கு மிகவும் பிரயோஜனமாக அமைந்தது. அதனால் மிஷனரி பங்காளர்கள், மிஷனரி பணிதளங்களுக்காக இன்னும் பாரத்துடன் ஜெபிக்க இக்கூட்டங்கள் அவர்களுக்கும் பிரயோஜனமாக அமைந்தன.

இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால் அனைத்து மிஷனரிகளுக்கும் இலவச மருத்துவ பரிசோதனை செய்ய சிறந்த டாக்டர்களுடன் கூடிய மருத்துவ குழு அங்கு அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் நவீன மருத்துவ பரிசோதனை கருவிகளுடன் வந்து மிஷனரிகளுக்கு உதவினார்கள். கர்த்தர் தாமே IEM ஸ்தாபனத்தை ஆசீர்வாதிப்பாராக. IEM மிஷனரி ஸ்தாபனத்தை தொடங்கிய Rev.Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களை IEM பொறுப்பாளர்கள் அனைவரும் அந்த கூட்டத்தில் நன்றியுடன் நினைவுக்கூர்ந்து தேவனை துதித்தார்கள்.

36th IEM - TAMIL NADU STATE CONVENTION

தமிழ்நாடு IEM சார்பில் குடும்ப கூடுகை சென்னை-பாண்டிசேரி வழியில் உள்ள கல்பாக்கம் அருகே உள்ள பரமன்கேணி என்ற இடத்தில் TWR Retreat Centre-ல் 3 நாட்கள் கன்வென்ஷன் கூட்டங்கள் சிறப்பாக நடைப்பெற்றது. இதன் ஒருங்கிணைப்பாளரும் பொதுசெயலருமான Rev.John Wesly அவர்கள் இக்கூட்ட ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள்.

IEM Chairman Rev.Dr.K.T.Kurian Kottach(Kottayam) அவர்கள் தலைமையில் இந்தியாவின் அனைத்து மாநிலத்தில் உள்ள மிஷனரிகள் தங்கள் குடும்பங்களோடு நான்கு நாட்கள் தங்கி இந்த தியான கூட்டங்களில் பங்குகொண்டனர். மிஜோராம், மணிப்பூர், நாகலாந்து இன்னும் வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு மாநிலங்களில் உள்ள மிஷனரி குடும்பங்களுக்காக என்னுடைய செய்திகள் மொழி பெயர்க்கப்பட்டது. கூட்டங்கள் மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தது.

ஜாமக்காரன் குறிப்பு: 2012 மே மாதம் IEM மிஷனரிகள் - பங்காளர்கள் முகாமில் பகிர்ந்துக்கொள்ள நான் அழைக்கப்பட்ட விவரங்கள் வாசித்தீர்கள்.

IEM மிஷனரி ஸ்தாபகரும், பொதுசெயலருமான மறைந்த Rev.Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களோடு 1964ம் வருடம் முதல் எனக்கு நெருக்கமான பழக்கமுண்டு. SIBC-பங்காரபேட்டை வேதாகம கல்லூரியில் என் குறுகியகால வேதாகம படிப்பின்போது Rev.Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் அங்கு வேதாகம ஆசிரியராக எனக்கு அறிமுகமானார்.

நானும், Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களும்
கடைசியாக எடுத்துக்கொண்ட படம்

1965ம் வருடத்துக்குபிறகு நாங்கள் இருவரும் ஒன்றாக பல கன்வென்ஷன் கூட்டங்களில் பிரசங்கித்தோம். நானும், அன்று YFC டைரக்டராக இருந்த சகோ.விக்டர் மனோகரம் அவர்களும், Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களும் பல கன்வென்ஷன்களுக்கு பிரசங்கிக்க ஒன்றாக அழைக்கப்பட்டோம். CSI, CIGM, மார்தோமா சபைகளில் (தமிழ்நாடு-கேரளா) பிரசங்கிக்க நாங்கள் அழைக்கப்பட்டபோது அடிக்கடி ஒரே அறையில் எங்களை தங்கவைத்து பல கன்வென்ஷன்களில் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.

Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் உலக பிரசித்திப்பெற்ற ஊழியன் என்றபோதிலும் அதன் பெருமை சிறிதும் இல்லாதவர். கேரளாவில் குருப்பம்பாடி என்ற இடத்தில் மிகப்பெரிய கன்வென்ஷனில் பிரசங்கிக்க நாங்கள் இருவரும் அழைக்கப்பட்டிருந்தோம். அந்தக் கூட்டம் பகலும், இரவுமாக நடக்கும் மிகப்பெரிய கூட்டங்கள் ஆகும். நான் வெள்ளிக்கிழமை மாலை அந்த ஊருக்கு வந்துசேர்ந்தேன். அன்று இரவே நான் பிரசங்கம் செய்யவேண்டும். நிகழ்ச்சிநிரல் என் கையில் கிடைத்தபோது இரவு கூட்டம் முழுவதும் நான் பேசுவதுபோலவும், பகல் கூட்டங்களில் Dr.தியோடர் வில்லியம்ஸ் பேசுவதுபோலவும் ஏற்பாடு செய்து அச்சடிக்கப்பட்டிருந்தது. அன்று இரவு கூட்டம் முடிந்தவுடன் கூட்ட அமைப்பாளர்களிடம் பகல் கூட்டங்களில் நான் பேசுகிறேன். Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் உலகபிரசித்திபெற்ற பிரசங்கியாராவார். ஆகவே இரவு கூட்டங்களில் அவர் பேசட்டும் என்றேன். அதற்கு அந்தக்கூட்ட பொறுப்பாளர்கள் இந்த ஒழுங்கை Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள்தான் மாற்றினார் என்றார்கள். அன்று இரவு நாங்கள் சாப்பிடும்போது Dr.தியோடர் வில்லியம்ஸ் என்னிடம் கூறினார், உங்களுக்கு கூட்டத்தை கவரும்வகையில் பேசும் தாலந்து (Mass Attaction) உண்டு. எனக்கு 10 பேர் கிடைத்தால்போதும் கல்லூரியில் பாடம் நடத்துவது போன்ற ஆசையும், தாலந்தும் எனக்குண்டு. அதனால்தான் இந்த மாற்றத்தை கூறினேன் என்றார். எவ்வளவு அனுபம் பெற்ற பிரபலமான பிரசங்கியாரான Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் தன்னை பெருமைப்படுத்தும் ஏற்பாட்டை அன்று எனக்கு விட்டுக்கொடுத்த செயல், எனக்கு அது நல்ல பாடமாக அமைந்தது. இவர் எந்த பிரசங்கம் செய்தாலும் செய்தியின் முடிவில் சிலுவை, ஒப்புக் கொடுத்தல், ஊழியம், ஆத்தும ஆதாயம், மிஷனரி அர்ப்பணிப்பு என்றுதான் Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் முடிப்பார். ஒவ்வொரு கூட்டத்திலும் நிறைய மக்கள் ஒப்புக்கொடுப்பார்கள்.

கோயா மொழியில் வேதாகம மொழிபெயர்க்கப்பட்ட ஒரு மிஷனரியின் பரிதாப சம்பவத்தை மிகவும் உருக்கத்தோடு என்னிடம் அவர் தன் வியாதி படுக்கையில் பெங்களுரில் இருந்தபோது பகிர்ந்துக்கொண்டார். அப்படியேதான் FMPBயின் முதல் பொதுசெயலாளராக செயலாற்றிய விவரங்களையும் என்னிடம் கூறி பகிர்ந்துக்கொண்டார்.

இத்தனை நெருக்கமாக நாங்கள் பழகினாலும் - அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சோதனையைக்குறித்து ஜாமக்காரனில் வெளியிட்டேன். அதுவும் நான் என் ஒழுங்கின்படி அவரை சந்தித்து புகார்களை விசாரித்தபின் அவரே அதை வெளியிடும்படி சில குறிப்புகளையும் எனக்கு எழுதிக் கொடுத்தார். அது அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும். அவரைப்பற்றி நான் ஜாமக்காரனில் எழுதியதைக்குறித்து கோபப்படாமல், என்மேல் வெறுப்படையாமல் தொடர்ந்து என்னோடு பழகினார். அந்த நிகழ்ச்சிக்குபின் அடிக்கடி நாங்கள் சந்தித்தோம், பகிர்ந்துக்கொண்டோம், ஜெபித்தோம். மறுபடியும் வீழ்ச்சியிலிருந்து அவர் எழுந்து பகிரங்கமாக அவைகளை அறிக்கையிட்டு எழுதினார். அதையும் ஜாமக்காரனில் வெளியிட்டேன். அதன்பின் சகோதரன் அவர்கள் மறுபடியும் வீறுகொண்ட சிங்கம்போல எழுந்து மறுபடியும் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஒவ்வொரு கூட்டத்திலும் தான் விழுந்ததும்-எழுந்ததையும் தைரியமாக வெளியரங்கமாக அறிவித்த ஒரே ஊழியர் Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் மட்டுமே என்றால் அது மிகையாகாது. ஒருவனுக்கு வீழ்ச்சி முடிவல்ல என்று அவர் அறிவித்தது பல ஊழியர்களுக்கு நல்ல அருமையான முன்மாதிரியும், சாட்சியுமாக அமைந்தது. நீதிமான் விழுந்தாலும் எழுந்திருப்பான் என்ற வேதவசனம் இவர் வாழ்க்கையில் உண்மையானது. தேவன் அவரை முன்பைவிட மிக வல்லமையாக உபயோகித்தார். "தன் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் - அறிக்கை செய்துவிட்டு விடுகிறவனே தேவஇரக்கம் பெறுவான்". நீதி 28:13 என்ற வசனத்துக்கேற்ப சகோதரனுடைய வாழ்க்கை அதன்பிறகு அவரின் மரணம்வரை தேவகிருபை பெற்றதாக இருந்தது. அவரின் செய்திகள், எழுதிய புத்தகங்கள் அனைத்தும் ஆவிக்குரிய பொக்கிஷங்களாகும். ஒரு சிறந்த வேதபண்டிதரை நாம் இழந்துவிட்டோம். இவர் மூலமாக உருவாக்கப்பட்ட ஊழியர்கள், மிஷனரிகள் எண்ணிக்கை ஏராளம். இன்று இவரால் உருவாக்கப்பட்ட ஊழியர்களில் பலர் பெரிய கன்வென்ஷன் பிரசங்கிகளாக, பாஸ்டர்களாக உலகெங்கும் ஊழியம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

சபைகளைப்பற்றிய பெரும்பாரம் Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களுக்கு உண்டு. அதனால் ஒரு அருமையான திட்டம் வகுத்தார். சபை ஜனங்கள் இன்று வசனத்தை விட்டு விலகிபோய், உணர்ச்சிவசப்பட்ட வசன அடிப்படையில்லாத சபைகளுக்கும், பிழையான ஊழியர்கள் பின்னேயும் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களை வசனத்துக்கு திருப்பி கொண்டுவர வேதபாட கன்வென்ஷன் (Bible Teaching கன்வென்ஷன்) என்று ஒவ்வொரு மாநிலம், மாவட்டத்திலுள்ள தலைநகரில் பெரியமண்டபம் வாடகைக்கு எடுத்து அக்கூட்டத்துக்கு எல்லா சபையினருக்கும் அழைப்பு கொடுத்து வேதபாடம் நடத்துவது என்பதுதான் அந்த திட்டம். அது ஒரு பெரிய கன்வென்ஷனைப்போல இருக்கும். கூட்டத்தில் யாரும் வேத வசனத்தைக்குறித்த கேள்விகளை பேப்பரில் எழுதி பகிரங்கமாக கேள்விகள் கேட்கலாம். இதற்கு Dr.தியோடர் வில்லியம்ஸ், Dr.சாம்கமலேசன், வேதநாயக சாஸ்திரியார், நான்(Dr.புஷ்பராஜ்) ஆகிய நாங்கள் இணைந்து அவர் திட்டத்தை செயல்படுத்தினோம். வசன தாகம் உள்ள பலர் இதன் செலவுகளை ஏற்று அவர்களே மிக அருமையாக Bible Teaching கூட்ட ஏற்பாடுகளை செய்து எங்களை பயன்படுத்தினர். இக்கூட்டங்களின்மூலம் வசன தெளிவுபெற்றவர்கள் ஏராளம். ஆண்டவரின் நாமமும் மகிமைப்பட்டது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இப்படிப்பட்ட கூட்டங்களை இப்போதும் நான் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறேன்.

Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் மிஷனரிகளை உருவாக்கும் பாரத்தை தன் உள்ளத்தில் எப்போதும் சுமந்து நடந்தவர். இன்று நம் மத்தியில் அவர் இல்லை என்றாலும் கர்த்தர் எந்த ஒரு தனி மனிதனைமட்டும் நம்பி எந்த ஊழியத்தையும் நடத்தவில்லை. அண்ணாருக்குபின் Rev.தியோடர் சீனிவாசகம் அவர்கள் அருமையாய் IEMமை நடத்திசென்றார். Rev.தியோடர் சீனிவாசகம் அவர்கள் ஓய்வுபெற்றபின் இனி IEM அவ்வளவுதான் வளராது என்று நினைத்தவர்கள் உண்டு. தமிழ்நாட்டிலிருந்து அனைத்து மாநிலங்களையும் கடந்து இமயமலைக்குமேல் நேபாளம் வரையும் அதோடு அந்தமான் தீவுகள் வரை IEM மிஷனரிகள் கால்ஊன்றி ஏராளமான திருச்சபைகளை உருவாக்கியுள்ளார்கள். இப்போதும் IEM மூலமாக மிஷனரிபணி மிகவும் சிறப்போடு நடந்து ஏராளமான சபைகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

தற்போது Rev.John Wesly அவர்கள் IEM பொதுசெயலாளராக பொறுப்பேற்றபின் பல நல்ல மாற்றங்களும், வளர்ச்சியும் IEMல் இடம்பெற்றுள்ளதை காணமுடிகிறது. Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களுக்குள் இருந்த அதே ஊழிய பாரத்தை இவரும் மனதில்கொண்டு நடப்பவராக காணப்படுகிறார். மிஷனரிகள் ஓய்வுபெற்றால் மாதாமாதம் பென்ஷன் கிடைக்கும் திட்டம் இவர் காலத்தில் அறிமுகப்படுத்தியது ஒரு அருமையான திட்டமாகும். அது இவர் காலத்தில் இப்போதே செயல்பட ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு நாளும் IEM மிஷனரி ஸ்தாபனத்துக்காக மிஷனரிபணியில் இன்னும் என்ன செய்யலாம்!, எப்படி முன்னேற்றலாம்!, மிஷனரி குடும்பங்களுக்காக அவர்களின் தேவைகளை எப்படி சந்திக்கலாம்! என்கிற சிந்தனையோடே சகோதரன் அவர்கள் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார் என்பது மிக நன்றாக அறியமுடிகிறது. கர்த்தர் தன் பாரத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும், புதிய தலைமை உருவாகும்போது சரியான ஆட்களை தெரிந்தெடுத்து அவர்கள் கரத்தில் அதை ஒப்புவிக்கிறார். காரணம், இது கர்த்தரால் நடத்தப்படும் செயலாகும். இது கர்த்தரின் பாரம், யாராலும் அவர் திட்டத்தை தடுக்கமுடியாது. பல வருடங்களாக ஜாமக்காரன் வாசகர்கள் IEM ஊழியத்தின் விவரத்தைக்குறித்து என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதன் விவரங்களை ஜாமக்காரனில் எழுதியும் இருக்கிறேன். ஆனால் இந்தமுறைதான் IEMன் முழுவிவரத்தையும் வெளியிட வாய்ப்பு கிடைத்தது. அதனால் இம்முறை IEMன் முழுவிவரங்களையும் வாசகர்களுக்கு அறிவிக்கிறேன். IEM ஊழியத்தோடு தொடர்புக் கொள்ளவும், மிஷனரிகளை தாங்க விருப்பமுள்ளவர்களுக்காகவும் IEMன் விலாசம் - மற்றும் வங்கி விவரம் யாவும் இந்த ஜாமக்காரனில் வெளியிட்டுள்ளேன். கோபுரம் பணியவும், தோட்டங்கள் அமைக்கவும், சம்பளத்துக்கு ஜெபிக்கிறவர்களை அழைத்து ஜெபிக்க மண்டபங்கள் கட்டவும், தன் காணிக்கைகளை வீணாக செலவு செய்து பலன் பெறாமல் ஏமார்ந்து போகாதிருக்க, பயனுள்ள கர்த்தர் விரும்புகிற இப்படிப்பட்ட மிஷனரி ஊழியங்களில் உங்கள் பங்குகளை அளியுங்கள். மிஷனரி பணிகளுக்கு உதவ முன்னுரிமை கொடுங்கள். அதன் ஆசீர்வாதம் மிக அதிகம். மிக துரிதமாக செய்ய வேண்டிய பணி மிஷனரி பணியாகும். கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.

ஐ.இ.எம் என்றால் என்ன? Indian Evangelical Mission

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு ஆட்சி மாற்றத்தின் நிமித்தம் இந்தியாவில் ஊழியம் செய்த அயல்நாட்டு அருட்பணியாளர்கள் தங்களுடைய சொந்த தேசங்களுக்கு திரும்ப ஆரம்பித்தார்கள். கிறிஸ்துவின் நற்செய்தியை இந்தியருக்கு அறிவிக்க இந்திய திருச்சபைகளால் மட்டுமே சாத்தியம் என்கிற சூழ்நிலை உருவாகியிருந்தது. இந்திய கிறிஸ்தவர்களைக் கொண்டே இந்தியரை சந்திக்க ஆண்டவர் சித்தம் கொண்டிருந்தார். 1950-ஆம் ஆண்டுகளில் விடுமுறை வேதாகமப்பள்ளி (VBS) ஊழியங்கள் மூலமாக மாபெரும் எழுப்புதலை ஆண்டவர் உருவாக்கினார். ஆவியானவர் அருட்பணியாளர்களின் வரலாறுகள் மூலமாக, இந்தியாவிற்காக ஜெபிக்கவேண்டும்.

இந்தியாவை சுவிசேஷத்தால் சந்திக்கவேண்டும் என்கிற விழிப்புணர்வையும் அருட்பணி தாக்கத்தையும் சகோதரன் பி.சாமுவேல் அண்ணாச்சி, கலாநிதி தியோடர் வில்லியம்ஸ், அறிவர்.சாம்கமலேசன் போன்ற முன்னோடி தலைவர்களை கொண்டுசெய்தார். இவர்களின் பணிக்கள பயணங்கள், இயேசுவை ஒருமுறைகூட கேள்விப்பட்டிராத மக்கள் கூட்டங்களைப்பற்றிய விபரங்கள் இந்தியாவில் அருட்பணி இயக்கங்கள் உருவாகக் காரணமாயிற்று.


ஐ.இ.எம்-ன் ஆரம்பம்:
Dr.Theodre Williams

1965-ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் தேவலாலி என்கிற இடத்தில் நடைபெற்ற EFI (Evangelical Fellowship of India) இந்திய சுவிசேஷ ஐக்கியத்தின் வருடாந்திர கூட்டத்தில் ஜனவரி மாதம் 15-ஆம் நாள் ஐ.இ.எம் என்கிற மிஷனெரி இயக்கம் உருவாகிற்று. அறிவர் அருட்திரு.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் இந்த இயக்கத்தின் முதல் பொதுசெயலராக தெரிந்து கொள்ளப்பட்டார்கள். ஐ.இ.எம் சபை பாகுபாடற்ற மற்றும் கலச்சாரங்களைக் (Cross-cultural) கடந்து ஊழியஞ் செய்கின்ற ஓர் மிஷனெரி இயக்கமாகும்.


ஐ.இ.எம்-ன் 3 தூண்கள் (Pillars):

1. தரிசனம்,     2. விசுவாசம்,     3. தியாகம்.


ஐ.இ.எம்-ன் தரிசனம் (Vision):

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நற்செய்தி (Gospel to every Person) ஒவ்வொரு மக்கள் கூட்டத்தின் நடுவிலும் திருச்சபை (Church among every People Group)


ஐ.இ.எம்-ன் நோக்கம் (Objectives):

சந்திக்கப்படாத மக்கள் கூட்டங்களை, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியால் சந்தித்து திருச்சபைகளை உருவாக்குதல்.

உலகம் அனைத்திற்கும் நற்செய்தி அறிவிக்கும் பணியில் இந்திய கிறிஸ்தவர்களின் பங்கை வலியுறுத்தி அவர்களை அருட்பணியில் ஈடுபட வைப்பது.


ஐ.இ.எம்-ன் நிதிக்கொள்கை:

இந்திய அருட்பணி இயக்கத்தின் (IEM) அனைத்து அருட்பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஊழியத்தேவைகள் இந்திய திருச்சபை மற்றும் இந்திய கிறிஸ்தவர்களால் சந்திக்கப்பட்டு வருகிறது. அனைத்து நிதி பரிமாற்றங்களும், செலவினங்களும் ஒழுங்காக கணக்கு வைக்கப்பட்டு ஆண்டுதோறும் தணிக்கைக்குட்படுத்தப்பட்டு அருட்பணி பத்திரிக்கையில் விபரங்கள் வெளியிடப்படுகிறது.


முதல் அருட்பணியாளர்:

ஒரிஸா மாநிலத்தில் உள்ள முண்டா இனத்தை சோர்ந்த காலஞ்சென்ற சகோ.சைமன்பாரு இரயில்வே துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அருட்பணி கூட்டத்தில் கலந்துகொண்ட அருமை சகோதரனை ஆண்டவர் தன்னுடைய அருட்பணிக்காக அழைத்த வேளையில் தனது அரசாங்க பணியை இராஜினாமா செய்துவிட்டு முதல் அருட்பணியாளராக ஐ.இ.எம்-ல் இணைந்தார். பீஹார் மாநிலத்தில் உள்ள ரக்ஸால் பணிக்களத்திற்கு அருட்பணியாளராக அக்டோபர் 1965–ல் சென்றார். அதனைத் தொடர்ந்து அநேகர் இவ்வியக்கத்தில் அருட்பணியாளராக இணைய ஆரம்பித்தது இன்றும் கலாச்சாரங்களைக் கடந்து ஊழியஞ்செய்ய அழைப்புபெற்றவர்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.


எமது ஊழியங்கள்:

தற்சமயம் இவ்வியக்கத்தின் மூலம் 640 பணியாளர்கள் இந்தியாவில் 25 மாநிலங்களில், 79 வகையான மக்கள் கூட்டங்கள் நடுவில் நற்செய்தி அறிவித்தல், சபை ஸ்தாபித்தல், மருத்துவ ஊழியம், 13 ஆதிவாசி மொழிகளில் வேதாகம மொழிபெயர்ப்பு, எழுத்தறிவிப்பு ஊழியம், 18 இடங்களில் ஆதிவாசி சிறார்களுக்கான விடுதிகள், சமுதாய முன்னேற்ற பணிகள் உள்ளுர் ஊழியர்களை உருவாக்குதல், ஆலயம் கட்டுதல், குறுகியகால வேதாகமப்பள்ளி, மாற்று கலாச்சார அருட்பணி பயிற்சி, தாய்மொழியில் வேத வசனங்களை குறுந்தகடுகளில் (CD) பதிவுசெய்து விநியோகித்தல், தாய்மொழியில் பாடல்கள், ஆதிவாதி மொழிகளில் வானொலி செய்திகளை ஒலிபரப்புவது போன்ற ஊழியங்களை செய்துவருகிறோம். ஆண்டவருடைய பெரிதான கிருபையால் அநேகரை நீதிக்குட்படுத்தவும், மக்கள் கூட்டங்கள் நடுவே திருச்சபைகளை உருவாக்கவும் கர்த்தர் கிருபை செய்தார். கர்த்தருடைய கிருபையால் கடுவாலி (Gadvali), கோயா (Koya), மடியா (Madya), லம்பாடா (Lambada), கராசியா (Garasia), கோட்டியா (Kotia) ஆகிய மொழிகளில் புதிய ஏற்பாடுகளை மொழிபெயர்த்துக்கொடுக்க ஆண்டவர் உதவி செய்தார். வருகின்ற ஐந்து ஆண்டுகளில் கொர்க்கு (Korku), பத்தரி (Bhatri) மற்றும் ஹோ (HO) ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு புதிய ஏற்பாடுகள் வெளியிடப்படும். விடுதி ஊழியங்கள் மூலமாக சபை தலைவர்கள், மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல துறைகளில் பணியாளர்களை கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக உருவாக்கியுள்ளோம். திருச்பைகளில் ஆவிக்குரிய கூடுகைகள், அருட்பணி தரிசனக்கூடுகைகள், வாலிபர் மற்றும் பெண்கள் கூடுகைகள் நடத்துவது, குடும்பக் கருத்தரங்குகள், தலைமைத்துவ கருத்தரங்குகள், 10 மொழிகளில் அருட்பணி பத்திரிக்கை மற்றும் கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்களின் செய்திகளை புத்தகங்கள் வாயிலாக மறுபதிப்பு செய்து வெளியிடுகிறோம். அத்துடன் அன்னாரது கன்வென்ஷன் மற்றும் வானொலி செய்திகளை குறுந்தகடுககளாக வெளியிட்டு வருகிறோம். இதன் மூலமாக திரட்டப்படும் காணிக்கைகள் அருட்பணிக்காவே பயன்படுத்தப்படுகிறது. ஐ.இ.எம் திருச்சபைக்கு உதவி செய்யும் கருவியாக செயல்படுகிறது.


ஐ.இ.எம் ஊழியங்களில் நீங்கள் எப்படி ஈடுபடலாம்?

ஐ.இ.எம் ஊழியங்களுக்காக ஜெபிக்கும் ஜெபப்பங்காளராக இருக்கலாம்.

ஐ.இ.எம் ஜெபக்கூடுகையை நடத்துவதற்கு உங்கள் இல்லத்தை திறந்து கொடுக்கலாம்.

உங்களுடைய தியாகமான காணிக்கையினால் இந்த ஊழியங்களை ஆதரிக்கலாம்.

உங்கள் பகுதியில் ஜெபக்குழுக்களை நடத்தி, அருகிலுள்ள ஆலயங்களில் செய்தி கொடுத்து, ஐ.இ.எம் ஊழியங்களை அறிமுகப்படுத்துகிறதுடன் உங்கள் பகுதியில் காணிக்கைளை சேகரித்து அனுப்பும் கௌரவ வட்டார செயலராக உதவி செய்யலாம்.

ஆண்டவருடைய அழைப்பு இருக்குமாயின் முழுநேர அருட்பணியாளராகவோ அல்லது உங்கள் நகரங்களில் அருட்பணி ஒருங்கிணைப்பாளராகவோ அல்லது வட்டார ஒருங்கிணைப்பாளராகவோ ஊழியம் செய்யலாம்.

ஐ.இ.எம் பணிக்களங்களை சென்று பார்வையிடலாம்

உங்கள் ஆலயங்களில் அருட்பணி கூடுகைகள் நடத்த ஐ.இ.எம் ஊழியர்களை அழைக்கலாம்.


மற்ற வாய்ப்புகள்:

ஓர் அருட்பணியாளரைத் தாங்குவதற்கு மாதத்திற்கு                ரூ. 3,500/-
ஓர் அருட்பணியாளின் குடும்பத்தை தாங்குவதற்கு மாதத்திற்கு      ரூ. 7,000/-
ஒரு ஆதிவாசி குழந்தை / அருட்பணியாளரின் குழந்தை படிப்பிற்காக ரூ. 1,000/-
பணிக்களத்தில் ஆலயம் கட்ட                                    ரூ. 5,00,000/-
அருட்பணியாளர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க                ரூ. 65,000/-
திருச்சபை கட்ட, விடுதிகளுக்கான (Hostel) இடம் வாங்க, கட்டிடம் கட்டியெழுப்ப உதவுங்கள்.

உங்கள் காணிக்கைகளை ஆன்-லையனில் (online) அனுப்பிய பிறகு கீழ்கண்ட பொறுப்பாளர்களுக்கு தயவுசெய்து தவறாமல் தகவல் தெரிவிக்கவும். உடனடியாக நீங்கள் அனுப்பித்தந்த காணிக்கைகளைப் பெற்றுக்கொண்டதிற்கான இரசீதும் ஊழியத் தகவல்களடங்கிய அத்தாட்சி கடிதமும் அனுப்ப உதவியாயிருக்கும்.

Head of the Department Finance,
     Indian Evangelical Mission,
     [email protected] / [email protected]
     Ph: +91 9448597982 / +91 80 22245256 / +91 80 22480080
    Bank Details for Contribution from within India By Indian Currency
    in favour of Indian Evangelical Mission

    1. ICICI online - 000201059882- ICICI Towers, Ground floor Commisarait Road, Bangalore-560025.
        RTGS/NEFT/IFSC code: ICIC0000002.
    2. IB online -461602068- Richmond Circle, Bangalore-560027.
        IFSC Code: IDIB000R018
    3. HDFC online –05231110000464– Richmond Road, Bangalore 560025
        IFSC Code: HDFC0000523
    4. SBI online - 10977242162- Post Bag No. 5310, St Marks Road, Bangalore-560001.
        IFSC Code: SBIN0000813.
    5. The NRI and the Indians from outside India can transfer the donation in
        Indian Rupees (INR) in the  following account:
                Indian Evangelical Mission, Indian Bank, Richmond Circle, Bangalore.
                Account No: 461639441
                SWIFT: IDIBINBBTSY

கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் எழுதிய புஸ்தகங்கள், செய்திகளடங்கிய சிடி, பத்திரிகையைப் பெறவும், ஊழியத்தகவல்களைப் பெறவும், மற்றும் மிஷனெரி ஊழியத்தில் ஈடுபடவும் கீழ்கண்ட முகவரியில் தொடர்புக்கொள்ளுங்கள்:
        General Secretary,
        Indian Evangelical Mission,
        38, Langford Road,
        Bangalore 560025.
        Ph: +91 80 22245256/ +91 80 22480080,
        Fax: +91 80 22122779
        Email: [email protected]
        Website: www.iemoutreach.org


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM