தூய ஆவியின் ஞானஸ்நானம்
  Selected

பரிசுத்தஆவியின் ஞானஸ்நானம் என்றால் என்னவென்பதைப் புரிந்துக்கொள்ள, நாம் முதலாவது ஞானஸ்நானம் என்றால் என்னவென்பதைத் தெரிந்துக்கொள்ளவேண்டும். தண்ணீரில் ஒருவனை ஞானஸ்நானப்படுத்தும்போது (திருமுழுக்கு கொடுக்கும்போது) அவனைத் தண்ணீருக்குள் முழுவதும் அமிழ்த்துகிறோம். அவன் முழுவதும் தண்ணீருக்குள் அமிழ்கிறான். அதைப் போலவே, ஆவியின் ஞானஸ்நானம் என்றால், ஒருவன் ஆவிக்குள் முற்றிலுமாக மூழ்குகிறான் என்று பொருளாகும். பெந்தேகோஸ்தே நாளில் சீடர்கள் கூடியிருந்தபோது, ஆவியானவர் இறங்கினதைக் குறித்து நாம் அப்போஸ்தலர் 2ல் படிக்கின்றோம். அவர்கள் ஒரு அறை வீட்டில் கூடி இருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கம் உண்டாகி, அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. இவ்வாறு நிரப்பப்பட்ட அறைக்குள் இருந்தபடியால், அவர்கள் யாவரும் அந்த அறையை நிரப்பிய ஆவியானவருக்குள் மூழ்கினார்கள் என்றே காண்கிறோம்.

தண்ணீர் ஞானஸ்நானத்தை (திருமுழுக்கை) அடையாளப்படுத்தும் சில எடுத்துக்காட்டுகளை வேதத்தில் நாம் படிக்கின்றோம். இஸ்ரவேலர் சிவந்த சமுத்திரத்தின் வழியாய் கடந்து சென்றதைக்குறித்து "எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும், சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்". (1 கொரி 10:2) என்று பரிசுத்த வேதம் சொல்லுகிறது. மேலும் கீழும் முற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருக்க, அதன் வழியாய் பேழையில் எட்டுப்பேர் பத்திரமாகக் காக்கப்பட்டதைப் பேதுரு கூறும்போது ஞானஸ்நானத்துக்கு ஒப்பனையாகத்தான் அதைக் கூறுகிறார்.

"அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது" (1பேதுரு 3:20,21). இதைப்போலவே, பெந்தேகோஸ்தே நாளில் மேல் அறைக்குள் சீடர்கள் பெற்ற அனுபவத்தை ஆவியின் ஞானஸ்நானம் என்று கூறுவது முற்றிலும் பொருந்தும்.

ஞானஸ்நானத்தின் (திருமுழுக்கின்) விளக்கம்:
இச்சொல் "பாப்திஸோ" என்ற கிரேக்கப்பதத்தின் மொழிபெயர்ப்பாகும். இதனை ஆங்கில வேதாகமத்தை மொழி பெயர்த்தவர்கள். அக்கிரேக்க வார்த்தையின் ஒலி வடிவத்தையே ஆங்கில மொழிக்கிணங்க மாற்றி "பாப்திஸம்" என்று திருப்பியுள்ளனர்.

"பாப்திஸோ" என்ற கிரேக்கச் சொல்லின் பொருள். "மூழ்குதல்" அல்லது "அமிழ்த்துதல்" என்பதாகும். நம் தமிழ் மொழியில் இது, பழைய திருப்புதலில் "ஞானஸ்நானம்" என்றும் இன்றைய தமிழில் "திருமுழுக்கு" என்றும் வழங்கி வருகிறது. ஆகையால "பரிசுத்தஆவியின் ஞானஸ்நானம்" என்பது, "பரிசுத்த ஆவிக்குள்ளாக மூழ்குதல்" என்று பொருள்படும்.

  ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு என்பதில் மூன்று காரியங்கள் அடங்கியுள்ளன.

1. ஞானஸ்நானம் கொடுப்பவர்

2. ஞானஸ்நானம் பெறுபவர்

3. ஞானஸ்நானம் கொடுக்கும் ஏது இம் மூன்றுமின்றி ஞானஸ்நானம் நிறைவுபெறாது.

ஞானஸ்நானம் பெறுதல் என்பது, அதைப் பெறுகிறவர் ஏதோ ஒன்றினுடன் தன்னை ஒன்றுப்படுத்திக் கொள்ளுகிறார் அல்லது இணைந்துக்கொள்கிறார் எனப் பொருள்படும்.

கர்த்தராகிய இயேகிறிஸ்து யோர்தான் நதிக்கரையில் யோவான் ஸ்நானகன் மூலம் தண்ணீரில் திருமுழுக்குப் பெற்றபோது, கிறிஸ்து இஸ்ரவேலரோடும், இஸ்ரவேல் தேசத்துடனும் தம்மை ஒன்றுப்படுத்திக் கொண்டார். இன்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டிருக்கும் ஒரு விசுவாசி தண்ணீரில் ஞானஸ்நானத்தின் மூலம் சாட்சி கொடுக்கும்போது, கிறிஸ்துவின் மரணம், கிறிஸ்துவின் அடக்கம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் தானும் ஒன்றுபட்டு உள்ளான் அல்லது இணைந்துள்ளான் என்பதை யாவருக்கும் தெரிவிக்கிறான். அவ்வாறே ஒரு விசுவாசி கிறிஸ்துவுக்குள்ளாக பரிசுத்தஆவியின் ஞானஸ்நானம் பெற்றுள்ளான் என்று கூறும்போது, அவன் கிறிஸ்துவின் சரீரமாக விளங்கும் திருச்சபையில் தானும் ஒரு அங்கமாக ஒன்றுபட்டு இணைந்துள்ளான் என்ற உண்மை வெளிப்படுகிறது.

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றி எடுத்துக்கூறும் வேத வசனங்கள்:
பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றி புதிய ஏற்பாட்டில் ஏழு வசனங்களே உள்ளன. இவை முறையே.

1. "மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறேன். எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார்... அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்" (மத் 3:11).

2. "நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்" (மாற்கு 1:8).

3. "நான் ஜலத்தினாலே உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார்... அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்" (லூக் 3:16).

4. "ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர், ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்" (யோவான் 1:33).

5. "அன்றியும், அவர், யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான், நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்" (அப் 1:4).

6. "யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியானலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவு கூர்ந்தேன்" (அப் 11:16).

7. "நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்" (1கொரி 12:13).

இவற்றுள் முதல் நான்கு வசனங்களும் சுவிசேஷங்களில் யோவான் ஸ்நானகனால் கூறப்பட்டவைகளாகும். இவ்வசனங்களில் ஆவியின் ஞானஸ்நானம் இனிமேல் நடைபெற வேண்டிய ஒரு சம்பவமாகவே முன்அறிவிப்பாகக் கூறியிருப்பதைக் காண்க. இதற்குப்பின் அப்போஸ்தலர் 1:4ல் காணும் வசனம், உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர்தாமே, சீடர்களை நோக்கி யோவான் ஸ்நானகன் கூறினதையே மறுபடியும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இங்கேயும் ஆண்டவர் இதை இனி நடக்கப்போகும் ஒரு சம்பவமாகவே கூறுகிறார்.

ஆண்டவர் யோவான் ஸ்நானகன் வார்த்தைகளை எடுத்துச் சொல்லும்போது அப் 11:16ல் "அக்கினியினாலும்" என்ற வார்த்தையை விட்டுவிட்டதைக்குறித்து கொள்ளுங்கள். காரணம் "அக்கினி ஞானஸ்நானம்" விசுவாசிகளுக்கு உரிய ஒன்றல்ல, அது உலகத்தின் முடிவுநாட்களில் ஆண்டவர் அவிசுவாசிகளாயிருப்போருக்குக் கொடுக்கும் அக்கினி ஸ்நானமாகிய நரக தண்டனையாகும். இவ்வார்த்தையை ஆண்டவர் இங்கு விட்டுவிட்டு, "ஆவியினாலே ஞானஸ்நானம்" பெறுவீர்கள் என்று மட்டும் கூறியுள்ளது. அப்போஸ்தலர்களுக்கு "அக்கினி ஸ்நானம்" கிடையாது என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஆகவே, மேலே சுட்டிக்காட்டியுள்ள முதல் ஐந்து வசனங்களும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இனி நடைபெறப்போகும் ஒரு சம்பவமாக முன்னறிவிக்கிறதைக் காணவும். அது பெந்தேகோஸ்தே நாளில் நடைபெற்று நிறைவேறியது.

ஆனால், இதற்குப்பின்பு, அப்போஸ்தலர் 11:15,16ல் பேதுரு கூறிய வசனம், பெந்தேகோஸ்தே நாளில் ஏற்கனவே நடைபெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. இங்கு கொர்நேலியுவின் வீட்டில் நடந்த சம்பவத்தைப் பேதுரு விளக்குகையில்,

"பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே (பெந்தேகோஸ்தே நாளில்) நம்மேல் இறங்கினது போலவே அவர்கள் மேலும் இறங்கினார்" என்கிறார். "யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான். நீங்களோ பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்னதை அப்பொழுது நினைவு கூர்ந்தேன்"

என்று அவர் எடுத்து கூறுகிறார். ஆகவே அப்போஸ்தலர் 2ல் ஆவியானவர் அவர்கள்மேல் இறங்கினது. ஆவியின் ஞானஸ்நானம் என்று தெளிவாக அறிந்துக்கொள்ளமுடியும். இவ்வாறு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெந்தேகோஸ்தே நாளிலேதான் நடந்தது என்பது உறுதியாகிறது. இது நடைபெற்ற, முடிவுபெற்ற, சரித்திர பூர்வமான ஒரு நிகழ்ச்சியாகும். இது மீண்டும், மீண்டும் நடைபெற வேண்டியதொன்று அல்ல. கடைசியாக, 1கொரிந்தியர் 12:13ல் விசுவாசிகள் அனைவரும் பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுவிட்டதாக (முடிவு பெற்ற ஒன்றாக) அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வசனத்தில் குறித்துள்ளார். புதிய ஏற்பாட்டில் ஏழாம் முறையாக உபயோகிக்கப்பட்டுள்ளதுமான இந்த ஒரு வசனம் மட்டுமே. ஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றிய போதனையை நமக்குத் தெளிவுப்படுத்திக் கூறும் வசனமாகும்.

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றிய பலவித கருத்துக்கள்:
அ). பல்வேறு பெந்தேகோஸ்தே சபையாரின் கருத்து: ஒரு விசுவாசி ஆவியினால் ஞானஸ்நானம் பெறக் காத்திருக்கவேண்டும். இது ஒரு இரண்டாம் அனுபவம். அவ்வாறு ஞானஸ்நானம் பெற்றிருப்பதினுடைய வெளிப்படையான அத்தாட்சி, அவன் அந்நிய பாஷையில் பேசுவதாகும்.

ஆ). பாப்திஸ்து மற்றும் அதுபோன்ற ஏனைய சுவிசேஷ சபையாரின் கருத்து: ஒருவர் இரட்சிக்கப்பட்டு மறுபிறப்படையும்போது பரிசுத்த ஆவியானவருடைய ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்கிறார்.

இ). தூய வேதம் நமக்கு போதிப்பது: பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது ஒரு சரித்திர நிகழ்ச்சியாகும். அது பெந்தேகோஸ்தே நாளில் நிறைவேறியுள்ளது. இந்த ஞானஸ்நானம் உயிர்த்தெழுந்து பரலோகம் ஏறியுள்ள கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் செயலாக இருக்கிறது. இதனால் இரட்சிக்கப்பட்டு மறுபிறப்படையும் ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையில் ஒரு நிரந்தர அங்கமாக்கப்படுகிறான்.

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது ஒரு சரித்திர நிகழ்ச்சியாகும் என்பதற்கான ஆதாரங்கள்:
1). முன்னதாக உரைக்கப்பட்ட குறிப்பிட்ட தீர்க்கதரிசனம் ஒவ்வொன்றும், அவ்வாறே சரித்திர நிகழ்ச்சியாக நிறைவேற வேண்டியது அவசியம். மத் 3:11,அப் 1:4 ஆகிய வசனங்களில் யோவான் ஸ்நானகனும், ஆண்டவரும் முன்னுரைத்த ஆவியின் அபிஷேகம் பெந்தேகோஸ்தே நாளில் (அப் 2) நிறைவேறிற்று. இதனை அப்போஸ்தலனாகிய பேதுரு அப் 11:16-ல் உறுதி செய்துள்ளார். அப்போஸ்தல நடபடிகளில் உள்ள நிகழ்ச்சிகள். அப் 11:16ஐ 2:1-4வரை உள்ள வசனங்களுடன் ஒப்பிட்டுக் காண்க.

2). இதற்கு விளக்க உரையாக பவுல் அப்போஸ்தலன் கொடுத்துள்ள 1 கொரி 12:13ல் காணும் கிரேக்க மொழி இலக்கணம் இதை உறுதிப்படுத்துகிறது. "தாகம் தீர்க்கப்பட்டோம்" என்று இறந்த கால வினைச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளதைக் காண்க.

3). கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் முடிவுபெற்ற மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகியவை இதை உறுதி செய்கின்றன (யோவான் 16:7-16).

4). திருச்சபையின் காலகட்டத்தில் ஒரு விசுவாசி ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்படவேண்டும் என்ற ஒரு இறை கட்டளை புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்படவில்லை என்பதை இது மீண்டும் உறுதி செய்கிறது. ஆகவே மீட்கப்பட்ட ஒரு புதிய ஏற்பாட்டு விசுவாசி, "ஆவியினால் ஞானஸ்நானம்" பெறவேண்டும் என்று போதிப்பது, திருமறைக்கு முரணான துர் உபதேசமாகும். இதற்காகக் காத்திருப்பு கூட்டங்கள் நடத்துவதும், காத்திருப்பதும் மடமையாகும்.

இன்று வாழும் விசுவாசிகளுக்கும், பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்திற்கும் உள்ள தொடர்பு:
இஸ்ரவேலர் சிவந்த சமுத்திரத்தைக் கடக்கும் அனுபவத்தை பவுல் அப்போஸ்தலன் 1 கொரி 10:1,2ல் குறிப்பிடுகிறார். "இஸ்ரவேலர் அனைவரும் மோசேக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றார்கள்" என்பது அவர்களுக்குத் தலைவராயிருந்த மோசேயோடு, இஸ்ரவேலருக்கு இருந்த ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்குப்பின்னர் இச்சம்பவத்தை ஆமோஸ் தீர்க்கன் எடுத்துரைக்கிறார் (ஆமோஸ் 2:10). இவ்வசனத்தில் வரும் "நீங்கள்" என்ற சொல் ஆமோஸின் நாட்களில் தேசமாய் இருந்த இஸ்ரவேலரைக் குறிக்கும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இஸ்ரவேலர்கள் மீட்பைப் பெற்றுக் கொண்டிருந்தார்களாயினும், ஆமோஸின் காலத்தில் இருந்த பிந்தின தலைமுறையனரான இஸ்ரவேலரும் அதில் பங்குள்ளவர்களாயிருந்தார்கள். அவ்வாறே, பெந்தேகோஸ்தே நாளில் கூட்டாகப் பெற்ற இந்த பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்தில், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வாழும் இன்றைய புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கும் பங்குண்டு. அந்நிலையிலேயே நாம் திருச்சபையில் சேர்க்கப்படுகிறோம். இப்பொழுது நாம் விசுவாசித்து இரட்சிக்கப்படும்போது, இயேசுகிறிஸ்து அன்று தம் மரணத்தினால் உண்டாக்கின நன்மைகள் அனைத்தையும் பெறுகிறவர்களாயிருக்கிறோம் என்பதுபோல இதுவுமாகும். நாம் இரட்சிக்கப்படும் அந்நேரத்தில் அவருடைய மரணம் நிறைவேறவில்லை. அது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவேறினதாயினும், அதன் பலனை நாம் இன்று அடைகிறோம். அவ்வாறே, நாம் விசுவாசிகளான சமயத்தில் பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்தின் பலனைப் பெற்றுக்கொள்கிறோம். அந்நேரத்தில்தானே, அதாவது இரட்சிக்கப்படும், அதே சமயத்தில் பரிசுத்தஆவியானவரை நாம் ஈவாகவும் பெற்றுக்கொள்கிறோம் (ரோமர் 8:23).

கிருபையின் நாட்களில் நடைபெற்ற பரிசுத்தஆவியானவரின் கிரியைகள், பெந்தேகோஸ்தே நாளில் அவர் இறங்கி வந்ததின் விளைவாய் அமைந்து, பரிசுத்தஆவியானவருடைய ஞானஸ்நானமாகிய சரித்திர நிகழ்ச்சியின் ஒரு பங்காகவே இருக்கிறது.

பெந்தேகோஸ்தே நாள் முதற்கொண்டு (அப் 2) கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம் திருச்சபையை அழைத்துக்கொள்ள (1தெச 4:15-17) இனி வரவிருக்கும் நாள் வரை மீட்கப்படவிருக்கும் விசுவாசிகள் அனைவரும் (ஒருவர் விடாமல்) அந்த ஒரே ஆவியினாலே, ஒரே சரீரத்திற்குள்ளாக - கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையாகிய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் (திருமுழுக்கு) பெற்றுள்ளனர் (1கொரி 12:13). உயிர்த்தெழுந்த கிறிஸ்து பரலோகம் ஏகினார். அங்கு அவர் பிதாவிடமிருந்து மீட்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டார். இதனை சங் 68:18, அப் 2:33 ஆகிய வசனங்கள் உறுதி செய்கின்றன. இதைத்தொடர்ந்து நாம் எபே 4:8-11 வசனங்களில் காண்கிற வண்ணமாக, அவர் திருச்சபைக்கு வரங்களை அருளியுள்ளார். எபே 4:8-ம் வசனம், சங்கீதம் 68:18ம் வசனத்தின் மேற்கோளாகும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையில் (1தெச 4:16) முழுமை அடையும் கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபை அங்கத்தினர் அனைவரையும் தேவன் முன்கூட்டியே நோக்கிப் பார்த்திருந்தார் என்பது, "இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாயிருக்கிற தேவன்" (ரோம 4:17) என்ற வசனம் உறுதி செய்கிறது. பின்வரும் நாட்களில் நிறைவேறப்போகிறவைகளை தேவன் முன்கூட்டி நோக்கிப்பார்த்துத் திட்டமிட்டு செயல்படுத்துகிறவர் என்கிற இந்த ஆவிக்குரிய சத்தியத்தை வலியுறுத்தும் கீழ்க்கண்ட வசனங்களை ஆய்ந்து நோக்குக:

1. எல்லாரும் ஆதாமுக்குள் மரிக்கிறார்கள். "ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல" (1கொரி 15:22)

2. எல்லாரும் கிறிஸ்துவுக்குள் மரிக்கிறார்கள். "கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோம்" (ரோமர் 6:8)

3. எல்லாரும் கிறிஸ்துவுக்குள் அடக்கம் பண்ணப்படுகிறார்கள். திருமுழுக்கில் நாம் "கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம்" (ரோம 6:4)

4. உபாகமம் 32:18ல் சொல்லியுள்ளபடி இஸ்ரவேல் தேசம் பிறவாதிருந்தும், ஆதியாகமம் 10:32ல் காண்கிறபடி இஸ்ரவேல் ஜாதி (தேசம்) பகுக்கப்பட்டது.

5. "சிந்தப்பட்ட இரத்தம்" (லூக் 22:20) கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்துவதற்கு முன்னரே முடிவுபெற்ற ஒரு செயலாகவே சொல்லியுள்ளது.

6. இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு வெளியே வருவதற்கு முன்னதாகவே (யாத் 12:27), எகிப்தியரை அதம்பண்ணி, வீடுகளைத் தப்பப்பண்ணியதாக சொல்லியுள்ளது.

பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்குக் கொடுக்கப்பட்டதை அப்போஸ்தலர் 2,8,10,19 ஆகிய அதிகாரங்களில் மட்டுமே நாம் காண்கின்றோம். இவை முறையே யூதர்கள், சமாரியர், புறஜாதிகள் மற்றும் யோவான் ஸ்நானகனின் சீடர்கள் ஆகிய குறிப்பிட்ட வகுப்பாருடன் சம்பந்தப்பட்டவை ஆகும். இந்த 4 வகுப்பாரும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் ஒரே சரீரமாக இணைக்கப்பட்டுள்ளனர். இந்த 4 இடங்களிலும் பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்தைக்குறித்தோ, அதனுடைய உபதேசமோ எதுவுமே சொல்லப்படவில்லை. ஆனாலும் அப்போஸ்தலர் 1:4ல் இது நடக்குப்போகும் காரியமாகவும், அப்போஸ்தலர் 11:16ல் இது ஒரே ஒரு தடவை நடந்து முடிவுபெற்ற காரியமாகவும் சொல்லப்பட்டிருப்பதால், இச்சம்பவம் பெந்தேகோஸ்தே நாளில்தான் சம்பவித்ததென்று நாம் உறுதியாகச் சொல்லமுடியும். எந்த ஒரு தனிநபரும் ஆவியின் ஞானஸ்நானம் பெற்றதாகவோ அல்லது பெறவேண்டுமென்றோ சொல்லப்படவில்லை. அத்தகைய ஒரு போதனையோ அல்லது கட்டளையோ வேறு எங்கும் காண்கிறதுமில்லை. ஆவியின் ஞானஸ்நானத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள எல்லா வசனங்களையும் படிக்கும்போது, இது குறிப்பிட்டநாளில் ஒருமுறை நடந்த சரித்திரசம்பவமாகவே காண்கிறோம். இது திரும்ப நடைபெற வேண்டிய ஒரு சம்பவமல்ல. ஆகவே பெந்தேகோஸ்தே நாளில் அப்போஸ்தலர்கள் பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெற்று, அதன் மூலமாய் சபை உருவாக்கப்பட்டது என்று உறுதிக்கொள்கிறோம். ஆகவே 1கொரி 12:13ம் வசனத்தின் போதனையாகும்.

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இதன் பொருள்
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பதின் விளக்கத்தை இப்பகுதியின் தொடக்கத்தில் கண்டோம். இப்போழுது இதன் பொருளும் பயனும் என்னவென்பதைக் காண்போம்.

பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் எதற்காகக் கொடுக்கப்பட்டது? இந்த ஞானஸ்நானத்தால் ஏற்பட்ட விளைவு என்ன? இவைகளை நாம் திட்டவட்டமாக அறிந்துக்கொள்ளவேண்டும். 1 கெரிந்தியர் 12:13ம் வசனமே இதை நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.

"நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே, ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்".

இந்த வசனத்தின் பின்னணியிலிருந்து இது கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையைக் குறிக்கிறது என்பது தெளிவாகும். அவயவங்கள் பலவாயினும் அவை யாவும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஒரே சரீரமாயிருக்கிறது. இந்த இணைப்பு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தினால் நிறைவேறியதாகும். யூதர்கள் புற இனத்தவர் என்ற இன வேறுபாடும், அடிமை, சுயாதீனன் என்ற சமுதாய வேறுபாடும் இன்றி ஆண்டவரை விசுவாசிக்கும் அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாக இணைக்கப்பட்டுள்ளனர். கிரேக்கர் என இவ்வசனத்தில் கூறியிருப்பது தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டு பலவித சிலாக்கியங்களைப் பெற்றுள்ள யூதர் அல்லாத ஏனைய புறஇனமக்கள் அனைவரையும் குறிக்கும் (ரோம 3:1-2). இந்த இணைப்பே பெந்தேகோஸ்தே நாளில் நிறைவேறிய ஆவியின் ஞானஸ்நானமாகும். இச்சத்தியத்தை கீழ்கண்ட வசனமும் உறுதி செய்கின்றன.

"பகையைச் சிலுவையினால் கொன்று அதினாலே இருதிறத்தாரையும் (யூதரையும், புற இனத்தவரையும்) ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும் (புறஇனத்தவருக்கும்) சமீபமாயிருந்த அவர்களுக்கும் (யூதருக்கும்) சமாதானத்தைச் சுவிசேஷமாய் அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய் பெற்றிருக்கிறோம்" (எபே 2:16-18).

1 கொரிந்தியர் 12:13ம் வசனத்தில் கூறப்பட்டிருக்கிற ஐந்து குறிப்புகளைக் கவனிக்கவும்:
1. ஒரே ஆவியில் எல்லோரும ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்.

2. யூதரும், கிரேக்கரும் (யூதரும், யூதரால் நாய்கள் என்று கருதப்படுகிற புறஇனத்தவரும், இன வேறுபாடு இன்றி) ஒரே சரீரமாக இணைக்கப்பட்டுள்ளோம்.

3. அடிமைகளாயினும், சுயாதீனராயினும் (சமுதாய வேறுபாடு இன்றி) ஒரே சரீரமாக இணைக்கப்பட்டுள்ளோம்.

4. ஒரே சரீரம், அதாவது கிறிஸ்துவின் சரீரமாகத் திகழும் திருச்சபையில் அனைத்து விசுவாசிகளும் சமநிலையில் இணைக்கப்பட்டுள்ளோம்.

5. தாகம் தீர்க்கப்பட்டோம் என்பதால் (இறந்த காலம்), இது நடந்து முடிவுபெற்ற ஒரு நிகழ்ச்சி.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள், அவருடைய சரீரமாகிய சபையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள் அல்லது இணைக்கப்படுகிறார்கள். அப்போஸ்தலர் 2:41,47, 5:14, 11:24 ஆகிய வசனங்களில் "விசுவாசித்தவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். சபையிலே சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்". "கர்த்தரிடமாய் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்" என்று பல விதங்களில் விவரித்திருப்பதைக் காண்கிறோம். இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்படுதல், அல்லது சரீரமாகிய திருச்சபையுடன் இணைக்கப்படுதல், ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாகவே நடைபெறுகிறது. இதற்காக எந்த ஒரு தனிநபரோ, ஒரு குழுவோ எவ்வித முயற்சியையும் எடுக்கவேண்டும் என்று திருவசனம் கூறுகிறதில்லை. ஒரு பாவியானவன் கர்த்தரை விசுவாசித்து அவன் மறுபிறப்பு அடையும்போதே, அவனை ஆண்டவர் சபையோடு சேர்த்துக்கொள்ளுகிறார். இதுவே திருமறை பறைசாற்றும் உண்மை.

இதை இரண்டு விதமாக விவரித்துக்கூறலாம்:
1. ஒருவன் கர்த்தரை விசுவாசிக்கும்போது, ஏற்கனவே பெந்தேகோஸ்தே நாளில் நடந்துள்ள ஆவியின் ஞானஸ்நானத்திற்குள் தேவன் அவனைப் பங்காளியாக்குகிறார்.

2. ஒருவன் கர்த்தரை விசுவாசிக்கும்போது, ஆண்டவர் அவனைப் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தில் மூழ்கச்செய்து, சபையோடு இணைத்துவிடுகிறார். ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கும், பணியாள், ஒவ்வொரு செங்கலாக எடுத்துத் தண்ணீரில் மூழ்கச்செய்து, பின்பு கட்டிடத்தோடு இணைத்துவிடுகிற பணிக்கு இது ஒத்திருக்கின்றது.

சரீரம் ஒன்றே
எபேசியர் 2:13 முதல் 22 வரையுள்ள வசனங்களைக் கவனித்துப் படிக்கவும், தேவனுடைய திருச்சபை ஒரு கட்டிடம் அல்லது மாளிகைக்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஆவிக்கேற்ற மாளிகையாகக் கூட்டிக் கட்டப்படும் இந்தக் கட்டிடத்தின் கற்கள் யார்? அவர்கள் இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளே ஆவர். ஜீவனுள்ள கல்லாகிய கிறிஸ்துவிடம் சேர்க்கப்படும் ஜீவனுள்ள கற்கள் என்று பேதுரு இதை விவரித்துள்ளார்.

"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் (கிறிஸ்துவினிடத்தில்) சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள்" (1பேதுரு 2:4,5).

1 கொரி 12:13ல் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் சரீரத்தோடு இணைக்கப்படும் காரியத்தையும், எபேசியர் 2:13-22 வரையுள்ள வசனங்களையும் சேர்த்து நாம் சிந்திக்கையில் அதே சத்தியம் வலியுறுத்தப்பட்டுள்ளதையே காண்கிறோம்.

இவ்வசனங்கள் வலியுறுத்தும் உண்மைகள்:
1. இஸ்ரவேலர்,புறஜாதியார் ஆகிய வித்தியாசம் இல்லாதபடி எல்லோரையும் ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்தார்.

2. கிறிஸ்து விசுவாசிகளைத் தேவனுடன் ஒப்புரவாக்கி ஒரே சரீரமாக இணைத்துள்ளார்.

3. ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தைக் கிறிஸ்துவின் மூலமாய் பெற்றிருக்கிறோம்.

4. பல நாட்டு, மொழி, இன அனைத்து விசுவாசிகளும் ஒரே வீட்டார், ஒரே நகரத்தார் ஆவார்.

5. கிறிஸ்துவே மூலைக்கல்லாயிருக்க, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய போதனையாகிய அஸ்திபாரத்தின்மேல் அனைத்து விசுவாசிகளும் கட்டப்பட்டவர்களாய் இருக்கிறார்கள்.

6. தேவனுடைய ஆலயமாக விசுவாசிகள் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறார்கள்.

7. தேவனுடைய வாசஸ்தலாமாக விசுவாசிகள் ஆவியினாலே கட்டப்பட்டு வருகிறார்கள்.

புறஜாதியாரிடம் அனுப்பப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுல் இதைப்பற்றி மேலும் எபேசியர் 3:3ல் கூறுகின்றான்:

"அதென்னவெனில், புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்திரருமாய், ஒரே சரீரத்துக்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன் பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்".

ஆகவே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற யூதரும், புற இனத்தவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாகத் திகழும்படி, ஒரே ஆவியினாலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, ஒரே ஆவியினாலே தாகம் தீர்க்கப்பட்டுள்ளனர். 1கொரிந்தியர் 12:13 ஆகிய இந்த வேதப்பகுதி ஒன்றைத்தவிர, புதிய ஏற்பாட்டில் வேறு எந்த ஒரு பகுதியிலும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றிய உபதேசம் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் தெளிவாக அறிந்திருக்கவேண்டும். ஆகையால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நாம் வேறு எவ்வகையிலும் வியாக்கியானப்படுத்தி, விளக்கம் கொடுக்க நமக்கு அதிகாரம் இல்லை. திருமறை அதற்கு இடம் கொடுக்கவில்லை. அவ்வாறு போதிப்பவர்களை நாம் புறக்கணித்துத் தள்ளிவிடுவோமாக.

ஆகவே, கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற அனைவரும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் தெளிவுப்படுத்திக்கொள்வோம். கொரிந்து சபையில் ஆவிக்குரிய விசுவாசிகள், மாம்சத்துக்குரிய விசுவாசிகள், குழந்தை அனுபவத்தில் உள்ள விசுவாசிகள் ஆகிய பல வகைப்பட்டவர்கள் இருந்தார்கள். அப்போஸ்தலன் தன்னையும், இந்த எல்லா வகையான விசுவாசிகளையும் சேர்த்துக்கூட்டாக, "நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். ஒரே ஆவியினாலே தாகந்தீர்க்கப்பட்டோம்" என்று கடந்த காலத்தில், முடிவு பெற்றுள்ள ஒரு அனுபவமாகக் கூறியுள்ளார்.

எனவே புதிய ஏற்பாட்டுச் சபையின் காலகட்டத்தில் இரட்சிக்கப்படும் அனைத்து விசுவாசிகளும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாக இணைக்கப்படுவதே ஆவியின் ஞானஸ்நானத்தின் பொருளும், போதனையுமாக இருக்கிறது. இதற்கு மாறாகக் கூறப்படும் எந்தப் போதனையும், நடைமுறைக்கும், வேத வசனத்திற்கும் முரணானதாகவே அமையும். இவைகளை வாசிக்கும் சகோதரனே! சகோதரியே! பல கிறிஸ்தவ வகுப்பார் கூறும் தவறான, மாய்மாலமான அனுபவங்களைச் சார்ந்து நம்பி, அவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகச் சுயமுயற்சிகள் எடுக்கவேண்டாம். கர்த்தருடைய வசனத்தில்மட்டுமே உறுதியாக இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நீங்கள் உங்கள் சொந்த இரட்சகராக விசுவாசித்திருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றவர்களாகவும் இருக்கிறீர்களென்று மேலே எடுத்துக் காட்டியுள்ள வேதவசனங்கள் மூலமாய் தெரிந்துக்கொள்ள தேவன்தாமே உதவி புரிவாராக.

ஞானஸ்நானத்தோடு சம்பந்தப்பட்ட வேறு சில வசனங்கள்:
அ. ரோமர் 6:3: இவ்வசனத்தில் சொல்லியுள்ள ஞானஸ்நானம் தண்ணீர் ஞானஸ்நானம் அல்ல, திருச்சபையாகப்பெறும் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானமும் அல்ல. இவ்வசனம் ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றோடு ஒன்றுப்படுவதைக் குறிப்பதாகும். "அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானம்" என்று அப்போஸ்தலன் குறிப்பிட்டிருப்பது, விசுவாசிகளின் தண்ணீர் ஞானஸ்நானமே ஆகும். இது விசுவாசத்தினால் ஒருவன் கிறிஸ்து உடனேகூட மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்துள்ளதைக் தெரிவிக்கும் அறிக்கையாக உள்ளது.

ஆ. கலாத்தியர் 3:27: இதுவும் தண்ணீர் ஞானஸ்நானம் அல்ல. கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மூலம் ஒரு விசுவாசி கிறிஸ்துவில் ஒன்றிணைந்திருக்கிறான் என்பதின் வெளிப்பாடாக உள்ளது. இவ்வாறு ஞானஸ்நானம் பெறும் ஒவ்வொருவரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டவர்களாவர்.

இ. எபேசியர் 4:5: ஞானஸ்நானம் என்பது ஓர் அடையாளமாக மட்டுமே விளங்குகிறது. ஆகையால் இங்கு சொல்லப்பட்ட ஞானஸ்நானம் இப்பகுதியில் சொல்லப்பட்ட ஆவியினோடு சம்பந்தப்பட்டதாயிருக்க முடியாது. ஒரு யூதன் பல ஞானஸ்நானங்களுக்கு உட்பட்டவனாயிருக்கிறான் (எபி 6:2). ஆனால் ஒரு கிறிஸ்தவ விசுவாசிக்கு தண்ணீர் ஞானஸ்நானம் ஒன்றுமட்டுமே உண்டு. புற இனத்தவருக்கோ எவ்வித ஞானஸ்நானமும் இல்லை. சபையின் இக்காலத்தில் யூதனானாலும், புற இனத்தவனானாலும், அவர்கள் இரட்சிப்படையும்போது இந்தக் கிறிஸ்தவ ஞானஸ்நானத்திற்கு (தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு) உட்பட வேண்டியவனாயிருக்கிறான்.

ஈ. கொலோசெயர் 2:12: இவ்வசனத்திலும் கிறிஸ்துவின் மரணம் உயிர்த்தெழுதலோடு ஒரு விசுவாசி ஒன்றிணைத்திருப்பதையே, கிறிஸ்துவுக்குள்ளான ஞானஸ்நானம் என்ற இச்சசொற்றொடர் குறிக்கிறது. இவ்வசனம் விசுவாசிக்கும் ஒரு பாவி, கிறிஸ்துவுடன் அடக்கம் பண்ணபடுதலை அறிவுறுத்துகிறது. ஒரு விசுவாசி இரட்சிக்கப்படும்போது இதுவும் நிறைவேறி, தண்ணீர் ஞானஸ்நானத்தின்மூலம் அவன் அதை அறிக்கை செய்கிறான்.

ஆவியின் ஞானஸ்நானம், அக்கினி ஞானஸ்நானம் ஆகிய இவைகளுக்குள்ள வேறுபாடு:
நற்செய்தி நூல்களில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக்குறித்து கூறியிருக்கும் இரண்டு பகுதிகளை காண்க:

"மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார். அவருடைய பாதரட்சைகளைக் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்" (மத் 3:11).

"யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்" (லூக் 3:16).

இவ்விரு வேதபகுதிகளிலும், ஆவியின் ஞானஸ்நானத்தையும், அக்கினி ஸ்நானத்தையும் சேர்த்துக் கூறியிருப்பதால், பலரும் இவை இரண்டும் ஒன்றையே குறிக்கிறது எனத் தவறாகக் கருதுகிறார்கள்.

இவை இரண்டும் ஒரே வசனத்தில் கூறியிருப்பினும், இவை இரண்டும் ஒன்றல்ல. இவை இரண்டும், இரண்டு வித்தியாசமான, இரண்டு வகையான மக்கள், வெவ்வேறு சமயங்களில் பெறும், இரண்டு வித்தியாசமான அனுபவங்களாகும். இவ்வாறு ஒரே வேதவசனத்தில் அநேக ஆண்டுகால இடைவெளிக்கிடையில் சம்பவிக்கப்போகும் வெவ்வேறு சம்பங்களைச் சேர்த்துக் கூறியிருப்பதை மற்ற சில வசனங்களிலும் நாம் காணமுடியும். உதாரணமாக யோவான் 5:29 காண்க. நன்மை செய்தவர்கள், தீமை செய்தவர்கள் ஆகிய இரு கூட்டத்தாருடைய உயிர்த்தெழுதலைப்பற்றி இவ்வசனம் கூறுகிறது. ஒரே வசனத்தில் இரு வகுப்பாரைப் பற்றி கூறியிருந்தாலும், இந்த இரு உயிர்த்தெழுதலுக்கும் 1000 ஆண்டுகளுக்குமேல் இடைவெளி இருக்கிறது (வெளி 20:4, 13-14 வசனங்களைக் காண்க). அதுபோல இந்த இரண்டு ஞானஸ்நானங்களும் வெவ்வேறு காலகட்டத்தில், இரு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு விதமான இருவகை மக்களுக்கு நடக்கவிருக்கும் வித்தியாசமான இரு சம்பவங்களாகும். இவைகளில் ஒன்று ஆசீர்வாதத்திற்குரியது. மற்றதோ சாபமும் தண்டனைக்குரியது.

  பரிசுத்தஆவியின் ஞானஸ்நானம் என்பது ஆண்டவரை விசுவாசிப்பவர்கள் பெறும் ஞானஸ்நானம் ஆகும். அக்கினி ஸ்நானம் என்பது ஆண்டவரை விசுவாசியாத பாவிகள் அடையப்போகும் நித்திய ஆக்கினையாகிய தண்டனையாகும். இது கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு ஆளுகைக்குப் பின்னர், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில், அவரால் அவிசுவாசிகள் அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலில் தள்ளப்படுவதைக் குறிப்பதாகும் (வெளி 20:12-15). ஆகவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு அவர் பரிசுத்தஆவியினாலும், அவ்வாறு விசுவாசியாதவர்களுக்கு அக்கினியாலும் ஸ்நானம் கொடுப்பார். ஒன்று இயேசுகிறிஸ்து சபைக்குக் கொடுத்துள்ள ஆசீர்வாதம், மற்றது அவிசுவாசிகள் இனி அடையப்போகும் தண்டனை. இதுவே இதன் பொருளாகும்.

மத்தேயு 3:12ம் வசனம் இந்த உண்மையைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இங்கு 11ம் வசனத்தின் கருத்தை, 12ம் வசனம் விவரிக்கிறது. "தூற்றக் கூடை அவர் கையிலிருக்கிறது. அவர் களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைக் களஞ்சியங்களில் சேர்ப்பார். பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்". இங்கு கோதுமை - இரட்சிப்படைந்துள்ள விசுவாசிகளையும், பதர் - அவிசுவாசிகளையும் குறிக்கிறது. மேலும் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து அப்போஸ்தலர் 1:4ல் "நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்" என்று கூறியிருப்பதைக் கவனிக்கவும். மாறாக, "சில நாளுக்குள்ளே அக்கினியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்" என்று அவர் கூறவில்லை. எனவே பரிசுத்தஆவியின் ஞானஸ்நானம்மட்டுமே பெந்தேகோஸ்தே நாளில் நடைபெற்றது.

  பரிசுத்தஆவியின் ஸ்நானம் என்பது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் ஒரு விசுவாசி இரட்சிக்கப்படுகையில் பெறும் ஒரு ஆசீர்வாதமும், சிலாக்கியமுமாகும். மாறாக, அக்கினியின் ஸ்நானம் என்பது, 1000 ஆண்டு ஆட்சிக்குப்பின்னர், கிறிஸ்துவானவர் சிங்காசனத்தில் அமர்ந்து, இரட்சிக்கப்படாத பாவிகளுக்குக் கொடுக்கப்போகும் நித்திய தண்டனையாகும். இது ஒரு பாவி நரக ஆக்கினை அடைந்து அந்த நரகத்தில் அவியாத அக்கினியில் அனுபவிக்கவிருக்கிற தண்டனையாகும்.

  பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது விசுவாசிகள் ஏற்கனவே பெற்றுள்ள ஆசீர்வாதமாக இருக்கிறது. மாறாக, அக்கினி ஸ்நானம் என்பது அவிசுவாசிகளாகிய பாவிகள் இனி ஒருநாளில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் பெறவிருக்கும் தண்டனைத் தீர்ப்பாக உள்ளது.

இன்று விசுவாசிகள் அக்கினி ஞானஸ்நானத்தை எதிர்ப்பார்ப்பதும், அதற்காகக் காத்திருப்பதும், வசனத்திற்கு முற்றிலும் புறம்பானதும், மடமையும், தவறானதும், தீமையானதுமான ஒரு போதனையாகும்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM