இம்முறை என் வெளிநாட்டு ஊழியங்களில் என் பிரசங்கத்தின் இடையில் ஒவ்வொரு இடத்திலும் (NRI) வெளிநாட்டில் குடியிருக்கும், பணிசெய்யும் இந்தியர்கள், இந்திய வம்சா வழியினர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தேன். நம் இந்தியாவில் மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட
ஆஸ்பத்திரிகள், கல்லூரிகள், பள்ளிகள், ஸ்தாபனங்கள் பல சரியான நிர்வாகம் இல்லாமல், அக்கறையின்மை காரணமாகவும், சுய லாபம் காரணமாகவும் அவைகள் மூடப்பட்டு, கட்டிடத்திற்குள் முள்ளும், புல்லும், புதரும் முளைத்து அங்குள்ள அருமையான கட்டிடங்களும், நல்ல நிலங்களும் பாழடைந்து அழிந்துக்கொண்டிருக்கின்றன. அவைகளை அந்தந்த திருமண்டலத்திலுள்ள சுயநலவாதிகள் விற்க முயலுகின்றன. அதை விருத்தியாக்கி நம் சபையிலுள்ள ஏழைகள் பயன்பட வழி உண்டாக்கும் இரக்கமனம் அவர்களுக்கு இல்லை. ஆகவே பணம் உள்ள
NRI நபர்கள் தனிப்பட்ட முறையிலோ ஒரு சிலராகவோ சேர்ந்து திருமண்டலத்துடன் பேசி அந்த ஸ்தாபனங்களை மீட்டெடுத்து நீங்களே அதன் பொறுப்பேற்று நடத்தலாமே! என்ற கோரிக்கையை அவர்களிடம் கூறினேன். அத்தனை பேரும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். இந்தியாவிலிருந்துவரும் ஊழியர் தங்கள் ஸ்தாபனத்துக்கு அல்லது சபை கட்டுமான பணிக்கு எங்களிடம் பணப்பிரிவு நடத்தி செல்லவே அமெரிக்கா வந்துபோகிறார்கள். சிலர் வெளிநாடுகளில் ஊழியம் என்று கூறிக்கொண்டு இங்கு பண சேகரிப்பு நடத்த வருவார்கள். ஆனால் நீங்களோ நம் இந்திய சபைகளின் சொத்துகளையும், ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்கல்வி நிலையங்களை காப்பாற்ற அவைகளை அமெரிக்காவில் வாழும் எங்களைக்கொண்டு அதை ஏற்றெடுத்து நடத்தும் திட்டத்துடன் கோரிக்கைளை சமர்ப்பித்து எங்களை சிந்திக்கவும், பாரம் கொள்ளவும் வைத்துவிட்டீர்களே! என்று மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
அப்போது சபை செயலர் ஒருவர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர் கூறினார். நானும் உங்களைப்போல் இதேபாரத்துடன் இருந்தேன். அப்போது சில ஆண்டுகளுக்குமுன் நீங்கள் ஒருசமயம் ஜாமக்காரனில் குறிப்பிட்ட விஷயம் என்னை சிந்திக்கவைத்தது. தமிழ்நாட்டில்
விருத்தாசலம் என்ற ஊரில் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள பாழடைந்து கிடக்கும் பழமை வாய்ந்த லூத்தரன் சபையை சார்ந்த மிக பிரம்மாண்டமான ஆஸ்பத்திரியை பொறுப்பெடுத்து நடத்தவும், சுமார்
ஒன்றரைக் கோடி பணம் செலவழித்து அந்த ஆஸ்பத்திரியை புதுபித்து வெற்றிகரமாக நடத்திக்காட்டுகிறேன் என்று விண்ணப்பித்தராம். ஆனால் உள்ளுர் லூத்தரன் சபையிலுள்ள
சபை அரசியல்வாதிகள் வருமானத்தில் தங்களுக்கும் பங்கு என்ற எதிர்ப்பார்ப்பில் ஆஸ்பத்திரி பொறுப்புகளை தங்களிடத்தில் வைத்துக்கொள்ளும் பிடிவாதத்தில் அந்த நல்லதிட்டத்தை செயல்படுத்த முயன்ற என்னை அவர்கள் உற்சாகப்படுத்தவில்லை. என் திட்டத்துக்கு
பிஷப் அவர்கள் சம்மதித்தார், ஆனால் கூடவேயுள்ள பொறுப்பாளர்கள் தடைசெய்துவிட்டனர். அதைவிட ஒரு பயங்கர தகவலை அவர்கூற கேள்விபட்டு அதிர்ந்துப்போனேன். சிறப்புமிக்க விருத்தாசலம்
லூத்தரன் சபை நடத்தும் உயர்நிலைப்பள்ளியை ஒரு சேட்டுக்கு வாடகைக்கு விட்டதாகவும் அதன்பின் சில வருடங்களில் ஒரு சிலரால் அதை தவறு என்று உணர்த்தப்பட்டு அந்த சேட்டிடம் வாங்கிய அந்த பணத்தை அவருக்கு திருப்பிக்கொடுத்து பள்ளிக்கூடத்தை அவர்களிடமிருந்து திரும்ப பெற்று, மறுபடியும் பள்ளிக்கூடத்தை லூத்தரன் திருமண்டலமே திரும்ப நடத்துகிறது. இதை நான் கேட்டபோது, நம் சபை ஏழைபிள்ளைகளின் படிப்பும், முன்னேற்றத்தையும் மனதில் கொள்ளாமல் கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தையை அடமானம் வைக்கும் மோசமான நிலைக்கு நம் கிறிஸ்தவ சபை பொறுப்பாளர்கள் துணிந்துவிட்டார்களே என்று எண்ணும்போது நம் கர்த்தரின் நோக்கம், நம் மிஷனரிகளின் பாரம் அவர்களின் பெரும்முயற்சிகள் யாவையும் குழித்தோண்டி புதைப்பத்திலேயே கண்ணாயிருக்கும் இவர்களுக்கு தங்களுடைய ஸ்தாபனங்களையும் கல்லூரிகளையும் முன்னேற்றும் சிந்தையேயில்லை, முன்னேற்ற முயலும் மற்றவர்களையும் இவர்கள் விடுவதில்லை.
வைக்கோல் அருகேயுள்ள நாயைப்போல, தானும் சாப்பிடுவதில்லை, பசு மாட்டையும் சாப்பிடவிடுவதில்லை என்பது எத்தனை பொருத்தம்.
சேலம்
டேனிஷ்பேட்டை பெத்தேல் ஆஸ்பத்திரி, பெத்தேல் ஸ்தாபனத்தின் நிலையும் அப்படியேதான்
இருக்கிறது. மத்திய கேரளா, தூத்துக்குடி, நாகலாபுரம், சாயர்புரம், நாசரேத்
ஆஸ்பத்திரிகள் நிலையும் அப்படியேதான் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில்
தமிழ்நாட்டு பிரசித்தி பெற்ற போப்ஸ் கல்லூரி தன் அரசாங்க அங்கீகாரத்தை இழந்தது
தூத்துக்குடி, நாசரேத் இன்ஜினியரிங் கல்லூரியின் அங்கீகாரமும் இழக்கப்பட்டது! என்ன
கொடுமையானது? கன்னியாகுமரி திருமண்டலத்தில் நாகர்கோவிலுள்ள ஒரேஒரு
CSI ஆஸ்பத்திரிமட்டும் குற்றுயிராய் இயங்கிக்கொண்டிருக்கிறது.
அதுவும் இரண்டு லேடி டாக்டர்கள் ஜெபிக்கிறவர்களாக
இருக்கிறபடியால், திருமண்டலம் தங்களை உதாசீனம் செய்தாலும் தங்கள் பணியை ஜெபத்துடன்
கர்த்தருக்காக என்ற நோக்கத்தில் அவர்கள் தங்கள் பணியைச்செய்வதினால் அந்த
CSI ஆஸ்பத்திரி ஆசீர்வாதத்துடன் நடைபெறுகிறது.
நாகர்கோவிலில் ஒரே வீதியில்
10 நவீன நர்சிங்ஹோம் ஆஸ்பத்திரிகளாக நிறைந்து
இருந்தாலும், பெண்களில் ஏராளமானவர்கள் அந்த
CSI ஆஸ்பத்திரியைதான்
தேடிப்போகிறார்கள்.
நெய்யூர் ஆஸ்பத்திரி இன்றோ-நாளையோ என்று படுத்தபடுக்கையில் இருப்பதால் அவ்வப்போது நரம்புவழியாக ஏறும் குளுக்கோஸில் உயிர்வாழும் வியாதியஸ்தரைப்போல் அந்த ஆஸ்பத்திரியும் இருக்கிறது. அதை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்ற பல டாக்டர்கள் திருமண்டல தலையீட்டால் நொந்துபோய் வெளியேறினார்கள்.
நெய்யூர் கேன்ஸர் ஆஸ்பத்திரியில் உயிர்காக்கும் மின்சார கருவிகள் பல கோடிகளில் வாங்க ஏற்பாடு செய்து, அதிலும் நடந்த பல ஊழல்கள் காரணமாக உயிருக்கு போராடும் பல ஏழை கேன்ஸர் வியாதியஸ்தர் அல்லது குழந்தைகள் செத்துக்கொண்டிருக்கும் நிலை மிகப்பரிதாபம்.
நியூசிலாந்து தேசத்திலுள்ள
டாக்டர்.பென்ஜமின் அவர்கள் இவர் சொந்தஊர் - மார்த்தாண்டம் - கன்னியாகுமரி
CSI திருமண்டலத்தைச் சேர்ந்தவர், 2 முறை நியூசிலாந்தில் இவர் வீட்டில் நான் தங்கியிருக்கிறேன் இவர் எனக்கு நெருங்கிய ஆவிக்குரிய நண்பராவார்.
கேன்ஸர் வைத்தியத்திலும், ஆராய்ச்சியிலும் மிகச்சசிறந்த நிபுணராக உலகத்திலேயே 3வது சிறப்பான இடத்தைப் பெற்றவர். எத்தனையோ கோடி ரூபாய் மதிப்புள்ள
கேன்சர் கருவிகளை இலவசமாக உலகநாடுகளிலிருந்து இவர் பெற்றுதரமுயன்றார் என்று கேள்விப்பட்டேன். ஆனால் இங்குள்ள திருமண்டல கிறிஸ்தவ அரசியல் அவர் முயற்சிக்கு முட்டுக்கட்டைபோட்டது என்றும் கேள்விப்பட்டு வருந்தினேன். இப்போதைய நிலை எனக்கு தெரியாது.
சென்னையில் பிரசித்திப்பெற்ற
CSI ரெய்னி ஹாஸ்பெட்டலில் திறமை
பெற்ற டாக்டர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர்.
Dr.ROY, MS., மிகச்சிறந்த திறமைபெற்ற சர்ஜன் ஆவார். அந்த காலத்தில் டேனிஷ்பேட்டை
பெத்தேல் ஆஸ்பத்திரியில் இவர்
MBBS படித்த நிலையில், பெரிய பெரிய ஆப்ரேஷனையெல்லாம் சர்வசாதாரணமாக செய்து வெற்றிக்கண்டவர். அங்குள்ள சாதாரண ஆப்ரேஷன் கருவிகளைக் கொண்டே மிகவெற்றிகரமான பெரிய ஆப்ரேஷனை
செய்து சாதனைப்படைத்தவர். அன்றே நான் எங்கள்
Tribal Mission (ஆனைக்கட்டி) ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துப்போயிருப்பேன். ஆனால் டேனிஷ்பேட்டை பெத்தேல் ஆஸ்பத்திரியின் நன்மைக்காக, அதன் முன்னேற்றத்துக்காக நானே அவரை விட்டுக்கொடுத்தேன். ஆனால் நிர்வாகத்தினரின் மோசமான அணுகுமுறையால் அவர் வெளியேறினார். அந்த டாக்டர் ஆஸ்ட்ரேலியா சென்று இருதய ஆப்ரேஷன் சம்பந்தமான சிறப்பு பயிற்சி பெற்று சென்னை
CSI ரெய்னி ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு மெட்ராஸ் டையோசிஸ்
CSI பிஷப் மற்றும் நிர்வாகத்தினரின் குறுக்கீட்டால் அங்கிருந்தும் அவர் வெளியேறினார். அதே ஆஸ்பத்திரியில் நன்றாக ஜெபிக்கும் மிஷனரிபாரம் கொண்ட
Dr.Synthia அவர்களும் வெளியேறினார். அரசாங்க ஆஸ்பத்திரிக்கு தேடிவரும் மக்கள் கூட்டம்போல்,
CSI ரெய்னி ஆஸ்பத்திரிக்கும் மக்கள் மிக திரளாக வருவார்கள். அப்படி
CSI ரெய்னி ஆஸ்பத்திரியை தேடிவந்த மக்கள் இப்போது நல்ல டாக்டர்கள் இல்லாததால்
உள்நோயாளிகள், வெளிநோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து நோயாளிகளில்லா ஆஸ்பத்திரியாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் யார் பொறுப்பு? யார் குற்றவாளி?
உதாரணத்துக்கு
சென்னையிலுள்ள வெளிநாட்டில் வாழும் இந்துமத
NRI மக்களின் பெரும் முயற்சியால் சென்னையில் மூடப்பட்ட சில ஆஸ்பத்திரிகள் அந்த இந்துமத
NRI டாக்டர்களால் மீண்டும் திறக்கப்பட்டு இப்போது புதுபொலிவோடு
வெற்றிகரமாக அந்த ஆஸ்பத்திரிகள் இயங்குகின்றன. இப்படி இந்துமத
NRI மக்கள் ஒன்றிணைந்து தன் தாய்நாட்டுக்காக, குறிப்பாக தன் மாநிலத்துக்காக நல்ல
சமூகப்பணி செய்து வெற்றியடையும்போது!, உயிருள்ள தேவனை ஆராதிப்பவர்களான, வெளிநாட்டில் வசதியுடன் வாழும்
NRI கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து மூடப்பட்ட ஆஸ்பத்திரிகளை, நொடிந்துப்போன கல்லூரிகளை, தொழிற்கல்வி ஸ்தாபனங்களை மீண்டும் இயங்கவைத்து ஏழைகள் பயன்பெற செய்யலாமே?
NRI கிறிஸ்தவர்கள் முயன்றால், ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்! மிஷனரிகளின் மனபாரத்தை நிறைவேற்றுவதோடு நம் கிறிஸ்தவ ஸ்தாபனங்களை புதுப்பித்து ஏற்று நடத்துவதின்மூலம் நாம் அந்த மிஷனரிகளின் பாரத்தை ஏற்றெடுத்து கிறிஸ்துவையும் சந்தோஷப்படுத்தலாம். முயன்றால் முடியாததது ஒன்றுமில்லை. இன்று இந்துமதத்திலுள்ள
NRI மக்கள் ஒன்றுசேர்ந்து சென்னையில் நொடிந்துப்போன ஆஸ்பத்திரிகளை பொறுப்பெடுத்து மிகச் சிறந்த ஆஸ்பத்திரிகளாக மாற்றிவிட்டார்கள். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றியடைந்துவிட்டனர்.
இன்றும் ஜீவிக்கிற தேவனை வணங்கும் நம் கிறிஸ்தவ
NRI மக்கள் முயன்றால் உயிருள்ள நம் தேவன் நமக்கு இந்த விஷயத்தில் உதவி செய்யமாட்டாரா? இதை வாசிக்கும் அனைத்துலக கிறிஸ்தவ
NRI மக்கள் ஒன்றுக்கூடி நொடிந்த
CSI, லூத்தரன் சபைகளின் ஆஸ்பத்திரிகள், கல்லூரிகளை தூக்கிநிறுத்தி
லாபநோக்கம் இல்லாமல், வருமானத்தை கணக்கு பாராமல் ஏழை மக்கள் நன்மை பெறும் நோக்கோடு செயல்பட இதன்மூலம் வேண்டுகோள் வைக்கிறேன். ஜெபித்து செயல்படுங்கள். இதை நான் அறிவிப்பதால் இந்த சேவையில் என்னை உட்படுத்தாதீர்கள் அதற்கு நான் தகுதியற்றவன். மேலும் எல்லாராலும் வெறுக்கப்படுபவன். அதனால் நீங்களே முயலுங்கள். ஆவியானவர் உங்களுக்கு துணை நிற்பார்.
|