விவாகரத்து கொண்டாட்டங்கள்

நாம் எல்லாரும் பிறந்த நாள் கொண்டாடுவோம், திருமண நினைவு நாள் கொண்டாடுவோம், ஆனால் ஐரோப்பிய, அமெரிக்கா கலாசாரத்தில் இப்போது விவாகரத்து நாளை நினைத்து வருடாவருடம் கொண்டாட்டம் நடத்துகிறார்கள். விவாகரத்து நடந்த நாளை குறிப்பிட்டு கொண்டாடும் விவஸ்தை கெட்ட நிலைக்கு நேராக உலகமும், கிறிஸ்தவ உலகமும் முன்னேறிக்கொண்டு வருகின்றன.

இவர்கள் விவாகரத்தைக்குறித்து சொல்லும்போது விவாகரத்து என்பது எங்களைப் பொருத்தவரை மைனஸ் பாய்ன்ட் அல்ல என்கிறார்கள். நல்ல கலாச்சாரம் நிறைந்த இந்தியாவிலும் இதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இப்போது இந்தியாவில் சிலர் நண்பர்களை நேரில் சந்தித்து இன்று எனக்கு விவாகரத்து நாள் இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள், மாலை விருந்துக்கு வாருங்கள் என்று நண்பர்களை அழைக்கும் அளவு முன்னேறிவிட்டனர் என்றால் நிலைமை எப்படிபோகிறது பாருங்கள்!

  சீக்கிரம் கிறிஸ்தவ ஆலயத்திலும் சிலர் தங்களின் விவாகரத்து நாளை நினைத்து கொண்டாட்டம் நடத்துவார்கள். அந்த குறிப்பிட்ட நாளில் இவர்கள் ஆலய ஆல்டருக்கு வந்து முழங்கால்படியிட்டு புருஷன்-மனைவிகளான எங்களை பிரித்த நல்ல தெய்வமே உமக்கு நன்றி என்று கூறி காணிக்கை கவரை குருவானவர் தட்டில் வைத்துவிட்டு வரபோகிறார்கள். குருவானவரும் தலையில் கை வைத்து நல்ல தீர்மானம் செய்தாய் என்று கூறி கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக என்று வாழ்த்தி நெற்றியில் சிலுவையிட்டு ஆசீர்வதிப்பார். சீக்கிரம் அந்த நிலை வரும்!

  இந்த மோசமான கலாச்சாரம் இந்திய பட்டணங்களில் தொடங்கிவிட்டது. ஆந்திராவில், டில்லியில், பம்பாயில் விவாகரத்து கேக்குகள் விற்பனையாகிறது. அந்த கேக்குகள் ஒரு சமாதிப்போல் வடிவமைக்கப்பட்டு அந்த சமாதியின்மேல் ஒரு மோதிரம் வைக்கப்பட்டதைப்போல் செய்கிறார்கள். அந்த கேக்குக்கு இப்போது மௌசு கூடியுள்ளது. மற்றொரு விவாகரத்து கேக்கில் விடுதலை - எல்லாவற்றிலிருந்தும் விடுதலை என்று எழுதப்பட்ட வாசகம் கேக்குகளில் எழுதியுள்ளது. இப்போது எந்த நாளிலும் உபயோகிக்கும் வகையில் ரெடிமேடாகவும் விவாகரத்து கேக் கிடைக்கிறது. (பக்கம் 17, செய்திதாள் விவரம் 10.9.2011)

  வேண்டுகோள்: தயவுசெய்து கிறிஸ்தவ பேக்கரிகளில் விவாகரத்து கேக்குகளை விற்பனைக்கு வைத்துவிடாதீர்கள். அது ஆண்டவரை வேதனைப்படுத்துவதாகும்.


தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக!

உலகத்திலேயே விட்டுக்கொடுத்து, தவறுகளை, குற்றங்களை, குடிகார சுபாவத்தை தாங்கி, சகித்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இணைந்து வாழாதவர்கள் பரலோகத்திலும் மற்ற யாவரோடும் ஒத்துப்போகமாட்டார்கள். அப்படியிருக்க எப்படி நீங்கள் அங்கு போகமுடியும்? ஜெபிப்போம்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM