|
|
|
கேள்வி: 2011 பிப்ரவரி ஜாமக்காரனில் ரூஹா சபை பாஸ்டரும், டிவியில் பிரசங்கிப்பவருமான
ஆல்வின் தாமஸ் அவர்கள் 2011 ஜனவரி மாத தீர்க்கதரிசனமாக அறிவித்ததை நீங்கள் குற்றப்படுத்தி எழுதியிருந்தீர்களே, இப்போது பார்த்தீர்களா? எங்கள் பாஸ்டர் கூறியதைப்போல்
ஜப்பானில் சுனாமியின் பேரழிவு ஏற்பட்டதே அவர் தீர்க்கதரிசனம் உண்மையாய்போனதே, இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள்?
பதில்: உங்கள் பாஸ்டர்.ஆல்வின் தாமஸ் மட்டுமல்ல, ஏஞ்சல்
TV முதலாளி சாது சுந்தர் செல்வராஜ், சகோ.வின்சென்ட் செல்வகுமார் இன்னும் பல போலி தீர்க்கதரிசிகளும் தாங்கள் கடந்த வருடமே ஜப்பானைப்பற்றி கூறினோம் என்று கடந்த வருடம் இவர்கள் பிரசங்கித்த அந்த வீடியோவை டிவியில் திரும்ப திரும்ப போட்டு பெருமைப்பட்டுக்கொண்டார்கள். யாவருக்கும் நான் கூறிக்கொள்வது என்னவென்றால் ஜப்பானில் நடந்த பூமியதிர்ச்சியும், சுனாமியும் ஜப்பானுக்கு புதியதல்ல, ஒவ்வொரு வருடமும் அவர்கள் நிலநடுக்கத்தை சந்திக்கிறார்கள். வருடத்துக்கு 5 முறைகூட ஜப்பானில் பூமியதிர்ச்சி ஏற்பட்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டதை தினசரி செய்திதாள்களில் நாம் எல்லாரும் வாசித்து அறிந்திருக்கிறோம். இந்த முறை ஏற்பட்ட பூமியதிர்ச்சி இன்னும் நிற்கவில்லையே! தொடருகிறதே! ஜப்பானை பொருத்தவரை அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும், ஏனென்றால் பூமியதிர்ச்சி உண்டாகும் பூமியின் (பெல்டில்) அமைப்பில் ஜப்பான் அமைந்தால் எப்போதும் அந்த நாட்டில்
பூமியதிர்ச்சியும், எரிமலை வெடிப்பதும், சுனாமி அலை வருவதும் அவர்களுக்கு சர்வ சாதாரணம். இதற்கு ஒரு தீர்க்கதரிசனம் தேவையில்லையே. செய்திதாள்களை பார்த்தாலே போதும். இதில் கவனிக்கவேண்டியது இயேசு கிறிஸ்துவை மேடையில் நிற்கவைத்து தான் நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு இருந்ததாக ஒரு சாட்சியில் கூறும் மோகன் சி.லாசரஸ் போன்ற இந்த மாதிரி தீர்க்கதரிசிகள் யாரும் கூறாத ஒன்றை வேலூர்
CMC வாசக விசுவாசி சுட்டிக்காட்டுகிறார்.
ஜப்பானில் அணு உலை நான்கு வெடித்து அதிலிருந்து யூரேனியம் அணுகதிரானது வானமண்டலத்தில் பரவியுள்ளது. அது
ஜப்பானில் உள்ளவர்களுக்கும், ஆசியா மக்கள் அனைவருக்கும், நம் இந்தியாவுக்கும் சேர்த்து பெரும்பாதிப்பை உண்டாக்கப்போகிறது. அது தோல் வியாதியையும், மரணத்தையும் உண்டாக்கும் ஆபத்தான வாயு ஆகும். மேலும் அந்த அணுக்கதிர் லட்சக்கணக்கான மக்களை கொன்றுவிடும். அந்த அணுக்கதிர் தாக்கிய இடத்தில் புல், பூண்டு கூட முளைக்காது. பல தலைமுறைக்கு பிறகும் குழந்தையெல்லாம் ஊனமாகவே பிறக்கும். இப்படிப்பட்ட அணுக்கதிர் காற்றோடு காற்றாக இப்போது பரவிக்கொண்டிருக்கிறதே! அந்த
பெரிய ஆபத்தைக்குறித்து நம் ஊர் தீர்க்கதரிசிகளுக்கு இவர்களின்
Mr.அருள்நாதர் இவர்களுக்கு காண்பிக்காதது ஏன்? என்று கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு ஊழியர்கூட இந்த
அணு உலை வெடித்ததால், அதன்மூலம் ஜப்பான், ஆசியா முழுவதிற்கும் உண்டாகப்போகும் நாசத்தைக்குறித்து கூறாமல் வாய் மூடிகளானது ஏன்? இவர்கள் முதல் தரிசனம் கண்ட களைப்பில் தூங்கிபோனார்களா? அல்லது வேறு வேலையில் இருந்தார்களா கொஞ்சம்கேட்டு சொல்லுங்கள். உங்கள் பாஸ்டரிடமாவது கேட்டு சொல்லுங்களேன். இவர்கள் யாவரும்
பத்திரிக்கை செய்தி வாசிப்பவர்கள் என்பதையும், இவர்கள்
தீர்க்கதரிசிகள் அல்ல என்பதையும் இனியாவது உணருங்கள். தீர்க்தரிசிகளை உருவாக்கும் தமிழ்நாட்டில் செங்கம் என்ற ஊர் தீர்க்கதரிசியான
சகோ.எசேக்கியா பிரான்சிஸ் ஜப்பானைப் பற்றியும் கூறவில்லை, ஆஸ்ட்ரோலியாவைப்பற்றியும் கூறவில்லை எதைப்பற்றியும் கூறவில்லையே! ஆச்சரியமாக இல்லை! தன் கூட்டத்தில் வந்தவர்கள் அனைவரையும்
தீர்க்கதரிசிகளாக மாற்றும் இவரே, ஒரு தீர்க்கதரிசனத்தைப்பற்றியும் கூறாமல் இருப்பதின் இரகசியம் என்ன? நான் எழுதிய இவர்கள் எல்லாரைப்பற்றியும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு கொஞ்சமாவது தெளிவு உண்டாகும்.
கடைசி காலத்தில்
கள்ளதீர்க்கதரிசிகள் இயேசுவின் நாமத்தைகூறி எழும்புவார்கள் என்று வேதம் பல நூறு வருடங்களுக்கு முன்பே நம்மை எச்சரித்துவிட்டது. இதை அறியாமல் உங்களைப் போன்ற வேதத்தை படிக்காமல் பாஸ்டரை அல்லது ஊழியரைமட்டும் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியாது! நான் எழுதியவை உங்களுக்கு பெருத்த அதிசயமாகத்தான் இருக்கும். உங்களை போன்ற கிறிஸ்தவ விசுவாசிகளைக்குறித்து பரிதாபப்படுகிறேன். இனிமேலாவது வேத வசனத்தை வாசித்து அதன்படி நடக்க முயலுங்கள். மற்ற விஷயத்தையும் நீங்கள் அறியவேண்டும். இன்றைக்கு உலகம் முழுவதும் மொத்தம் 32 நாடுகளில் 450 அணு உலைகள் இயங்கி வருகின்றன. இவைகள் நாட்டின் மின்சார தேவைகளுக்காக பயன்படுத்துகிறோம் என்று இவர்கள் (நம் இந்தியாவையும் சேர்த்து)கூறினாலும் பெரும்பாலும்
அணுகுண்டு போன்ற ஆயுத தயாரிப்புகளுக்கே இவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இன்றைக்கு உலகத்திலேயே நல்ல லாபம் உண்டாக்குவது
அணு ஆயுதம் தயாரித்து விற்பதுதான். இதை வாங்குபவர்கள் பெரும்பாலும் பல்வேறு நாடுகளில் உள்ள
தீவிரவாதிகளாவர். இந்த அணு உலையின் பேரழிவை மனதில்கொண்டுதான் பெரும்பாலான குறிப்பிட்ட சில உலக நாடுகள் புதிய அணு உலைகளை நிறுவுவது இல்லை. ஏற்கனவே அணு உலைகளை வைத்திருப்பவர்கள் அதை புதுப்பிப்பதும் இல்லை என்று பத்திரிக்கை செய்தி கூறுகிறது. ஆனால் நம் இந்தியா அந்த தொழில்நுட்பத்தை
ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து பெற்று தொடர்ந்து உபயோகித்து வருகின்றன. இது நம் நாட்டுக்கே நிச்சயம் ஆபத்தாக முடியும். இப்படி நான் கூறுவது தீர்க்கதரிசனமல்ல.
கடந்த மார்ச் 19ம் தேதி வானத்தில்
சந்திரன் நம் பூமியை மிகமிக அருகே நெருங்கி வந்தது. இதன்மூலம் பல இடங்களில் பெரியபெரிய
சுனாமி அலைகள் உருவாகலாம் என்று எதிர்பார்த்து கடந்த மாதமே எச்சரிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நெல்லை, சென்னை போன்ற இடங்களில்
அணு உலைகள் உண்டு. இதன் பாதுகாப்பு எப்படிப்பட்டதோ - சுனாமி தாக்கும் மிக அருகில் இந்த அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில்
தேர்தல் சூடு பிடித்த நிலையில் யார் இந்த ஆபத்தைக் குறித்து கவனிக்கப் போகிறார்கள்! யாருக்கு எத்தனை தொகுதி, யாரோடு கூட்டணி என்பதில் எல்லா அரசியல்வாதிகளும், மந்திரிகளும் பைத்தியம் பிடித்த நிலையில் அலைகிறார்கள். அரசாங்க அதிகாரிகளாவது மிக உன்னிப்பாக இந்த ஆபத்தை கவனித்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் நல்லது. கேள்வி கேட்ட நீங்களும் இவைகளுக்காக ஜெபியுங்கள்.
|
கேள்வி: ஜெபத்தினால் தேசத்தை மூடுங்கள் என்று சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் கூறும்போது இதை கர்த்தர் சொன்னார் என்று கூறி வாசகர்களுக்கு பல மாநிலங்களுக்கு சென்று ஜெபிக்க அழைப்பு கொடுத்திருக்கிறாரே! அப்படி போக எனக்கு ஆசை, ஆனால் என்னுடைய வீட்டார் அனுமதிக்கவில்லை. எனக்கு ஒரே விசனமாக இருக்கிறது? நான் என்ன செய்ய?
பதில்: ஊர் ஊராக சென்று சங்கிலி தொடர்போல நின்று அந்த ஊருக்காக அந்த மாவட்டத்துக்காக பிசாசை கட்டி ஜெபிக்க அழைப்பு விடுத்திருக்கிறார். இப்படி ஜெபிப்பதும் இதற்காக பஸ்கள் ஏற்பாடு செய்து விசுவாசிகளை அழைத்து செல்வதும் பிழையான வழி என்று மிக அருமையாக
Blessing - ஆசீர்வாத இயக்கம் வெளியிடும் பத்திரிக்கை மூலமாக அதன் ஸ்தாபகர் ஆங்கிலத்திலும், தமிழிலும் வேதவசன ஆதாரத்துடன் பல மாதங்களுக்குமுன் எழுதினார். அதை பலர் அவரவர்கள்
தனியாக அச்சடித்து வினியோகம் செய்தனர். நம் சொந்த இடத்திலேயே கூடி ஜெபிக்கும்போது ஜெபத்தில் எந்தெந்த ஊரை ஜெபத்தில் குறிப்பிடுகிறோமோ அந்த ஊரை, அந்த மாவட்டத்தை, அந்த நாட்டை கர்த்தர் ஆசீர்வதிக்கமாட்டாரா? கர்த்தர் அந்த ஜெபத்தை கேட்கமாட்டாரா? அந்த மாவட்டங்களுக்கு சென்று ஜெபித்தால்தான் கர்த்தர் கேட்பாரா? என்ன முட்டாள்தனம் இது! இவ்வளவு பேர் எழுதியும், அவ்வகை டூர் ஜெபத்தைக்குறித்து அது தவறு என்று குறிப்பிட்டு எழுதியும் இவர் இன்னும் அந்த டூர் ஜெபத்தை செய்ய அழைப்பு கொடுக்கிறார் என்றால் அவர் ஆதரவாளர்களின் முட்டாள் தனத்தை புரிந்துகொண்டுதானே அப்படி அழைப்பு கொடுக்கிறார்!
இதை பலர் புரிந்துக்கொள்ளவில்லையே!
இவருடைய குருநாதரின் மகனின் வழியை சகோ.மோகன் சி.லாசரஸ் பின்பற்றுகிறார். ஜெபத்தில் கர்த்தர் கூறாத பெயர்களை கூறி பொய் பேசும் ஊழியத்தை சகோ.DGS.தினகரனிமிடருந்து இவர் கற்றார். மாவட்டம்தோறும் ஜெபிப்பதை அவர் மகன்
பால் தினகரனை பின்பற்றுகிறார். டெல்லி பார்லிமெண்ட் பக்கத்தில் கட்டிடம் வாங்கி ஜெபகோபுரம் பணிந்து அங்கு தங்கி 24 மணிநேரம் ஜெபித்தால்
MPமார்களை, மத்திய அரசு மந்திரிமார்களை கர்த்தர் தொடுவார் என்று கர்த்தர் சொன்னாராம். அதனால் பல கோடிகள் செலவு செய்து கட்டிடம் எழுப்பி ஜெபம் ஏறெடுத்தார்கள்.
ஸ்பெக்ட்ரம்
2G மூலம் நம் வரிப்பணமான பல கோடிகளை கட்சியிலுள்ள
MP, மந்திரிகள், கூட்டணி
MPமார் விழுங்கினார்களே! நம்பிக்கை ஓட்டில் ஜெயிக்க பல கோடிகள் லஞ்சமாக கொடுக்கப்பட்டதை பார்லிமெண்ட் ஜெபகோபுர ஜெபத்தின் விளைவாக எடுத்துக்கொள்ளலாமா? என்ன ஏமாற்றுத்தனம் இது?
ஒலிம்பிக் ஊழல் பல கோடிகள், கார்கில் போரில் இறந்தவர்களுக்கு சொந்த வீடுகள் கட்டிய விஷயத்தில் பலமாடி கட்டிட ஊழல். இதெல்லாம் டெல்லிக்கே நேரில் போய் பார்லிமெண்ட் அருகே ஜெபகோபுரம் கட்டி ஜெபித்ததின் விளைவு என்பது விளங்குகிறதா? ஊழல்களை புகைப்படத்தோடு வெளியிட்டார்களே! இன்னும் ஊழல்கள் புற்றீசல்போல் ஒவ்வொரு நாளும் வெளிவந்துகொண்டிருக்கிறதே! அருள்நாதர் பார்லிமெண்ட் ஜெபகோபுரத்தில் ஏறமுடியவில்லையே!
இதுபோதாதென்று இஸ்ரவேல் மக்களுக்காக ஜெபிக்க
எருசலேமில் ஜெபகோபுரம் என்ற பெயரில், தங்கும் விடுதிகளையும் கட்டி எழுப்ப பல கோடிகள் செலவழித்து பல அடுக்கு கட்டிடம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவைகள் சீக்கிரத்தில் டூரிஸ்ட்டுகள் தங்கும் விடுதியாக மாறப்போகிறது. இந்த ஏமாற்று ஊழியங்களை அறிந்தும் இவர்கள் கூட்டங்களுக்கு தலைமை தாங்கும்
பிஷப்மார்களுக்கு புத்தி வரவில்லையே? இதை உண்மையென்று இவர்களுக்கு எப்படி நினைக்க தோன்றுகிறது? ஆசீர்வாதம்
TV சகோ.ஆலன்பால் தம்பதியினரும் இப்போது ஊர் ஊராக
ஜெபபிரயாணம் என்று தொடங்கிவிட்டதாக எழுதியுள்ளார்கள். ஆள் ஆளுக்கு வருமானம் வரும் வழி, ஜனங்கள் ஏமாறும் வழிகளை நன்றாக கண்டுபிடித்து செயல்படுகிறார்கள். இந்த கேள்வி கேட்டவர்கள் தயவுசெய்து உங்கள் வீட்டிலிருந்தே தேசத்துக்காக ஜெபியுங்கள். உங்கள் சபை ஜெபகூட்டம் மூலமாக தேசத்துக்காக ஜெபியுங்கள். மிஷனரி ஜெபக்குழுக்கள் ஆங்காங்கே வீடுதோறும் நடக்கிறது. அந்த ஜெபங்களில் பங்குகொண்டு ஜெபியுங்கள். இப்படிப்பட்ட ஜெபத்தைத்தான் கர்த்தர் கேட்பார்.
எயிட்ஸ் வியாதியை இயேசு சுகப்படுத்துகிறதை காண்கிறேன் என்று மோகன் சி.லாசரஸ் சொன்னது எப்படி
பொய்யோ அப்படியே அந்தந்த மாநிலம் சென்று ஜெபிக்க அருள்நாதர் அவரிடம் சொன்னார் என்பதும் 100க்கு நூறு
பொய். இப்படி பகிரங்கமாக பொய் பேசும் இவரை எப்படி உங்களால் மதிக்கமுடிகிறது! அது எனக்கு ஆச்சரியத்தைத்தான் கொடுக்கிறது.
|
கேள்வி: துதித்தால் வியாதி சுகமாகுமா?
பதில்: அப்படித்தான்
ஆசீர்வாதம் (Blessing)
TV சகோ.ஆலன்பால் பத்திரிக்கையில், சகோ.மோகன் சி.லாசரஸ் பத்திரிக்கையில், சகோ.சாம்ஜெபதுரை, சகோ.ராபின்சன் போன்றோரின் பத்திரிக்கைகளில் பலர் சாட்சி எழுதியதை காணலாம். இப்போது அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளிலும் இதைத்தான் படிப்பிக்கிறார்கள்.
துதித்தால் போதும் பிரச்சனை நீங்கும், கட்டுகள் அறுபடும், வியாதிகள் சுகமாகும். இவர்கள் யாவரும்
வசனத்தையும், பாவத்தையும் மறைக்கிறார்கள் என்பதை
கவனித்தீர்களா? ஜாக்கிரதை!
சங்
107:20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களை சுகமாக்கினார்.
யோ 15:7ல் என் வசனம் உங்களிலிருந்தால் நீங்கள் வேண்டிக்கொள்வது
எதுவோ அது கிடைக்கும். இது வேதம் போதிப்பது. இதை
நம்புகிறீர்களா?
மேலே நான் குறிப்பிட்ட பொய்
ஊழியர் கூட்டம் கூறியதை நம்புகிறீர்களா?
அவர்களைப்போலவே இன்று பல பெந்தேகோஸ்தே சபை ஊழியர்களும் இப்படி
கூறுகிறார்கள். இவைகளையும் நீங்கள் நம்புகிறீர்களா? அது உங்கள் இஷ்டம்!
|
கேள்வி: இயேசு சந்திக்கிறார்
GPS.ராபின்சன் அவர்கள், தகப்பன் தன் பிள்ளை மீனை கேட்டால் பாம்பை கொடுப்பானா, அதுபோல் நீங்கள்
பரிசுத்த ஆவியை கேளுங்கள். கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார். உடனே நான் பெற்றுக்கொண்டேன் இது எப்படி?
பதில்: இதற்கு
பெயர்தான் குருட்டு விசுவாசம். பரிசுத்தாவியை
பெறும் விஷயத்தில் சகோ.ராபின்சன் ஊழியம் மிகவும் பொய்யானது! பிழையானது! இவர் அங்கம் வகிக்கும்
திருப்பத்தூர் அணிகளும் இப்படித்தான் போதிக்கிறது. மேலே குறிப்பிட்ட வார்த்தை இயேசு மரிப்பதற்குமுன், பரிசுத்தாவி அருளப்படுவதற்குமுன் கூறப்பட்டது. வசனம் எந்த காலத்தில் கூறப்பட்டது என்பதை பிரசங்கிப்பவர்கள் மறைத்து பிழையாக போதித்தாலும் நீங்களாவது வேதத்தை வாசித்து நிதானியுங்கள். இயேசு மரித்து உயிர்தெழுந்தபின்தான் பரிசுத்தாவி அருளப்பட்டது. அதுவும்
பரிசுத்த ஆவியானவரை கேட்டு பெற்றுக்கொள்வது என்பது வேதத்தில் கூறப்படாத ஒன்றாகும். பரிசுத்தாவியானவரை சீஷர்கள் யாராவது
கேட்டுப் பெற்றுக்கொள்ள கற்றுக் கொடுத்தார்களா? அல்லது சீஷர்கள் யாராவது பரிசுத்தாவியானவரை கேட்டுப் பெற்றுக்கொண்டார்களா? புதிய ஏற்பாட்டு சபையில் பரிசுத்தாவியானவரை கேட்டுப் பெற்றுக்கொண்டதாக எங்காவது அப்படி எழுதியதை காட்டமுடியுமா?
ஆவியானவர் அவர்களை நிறைத்தார் என்றும் அவர்கள்
ஆவியினால் நிறைந்து பேசினார்கள் என்றும் மட்டுமே எழுதியுள்ளது. இவ்வளவு தெளிவாக வேதம் போதிக்க இன்னும் பல பெந்தேகோஸ்தே சபைகளில் ஆராதனை தொடங்கியவுடன் ஆவியானவரை கைத்தட்டி வரவேற்போம் என்று யாரோ மந்திரி உள்ளே நுழைந்த மாதிரி தவறான கற்பனையை இந்த பாஸ்டர்கள் பிழையாக கற்றுக்கொடுக்க, சபைமக்களும்
செம்மறி ஆடுகளைப்போல கைகளை வேகமாக தட்டி ஆவியானவரை வரவேற்று உடனே
அந்நியபாஷையில் பேசுகிறார்கள். இந்த கன்றாவியை பெரும்பாலான பெந்தே கோஸ்தே சபைகளில் நான் நேரில் கண்டதால் இதை அறிவிக்கிறேன். இப்போது
CSI சபையிலும் பிரசங்கம் செய்யும்முன் ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே இப்போ வரும் இறங்கி வரும் எங்கள் மத்தியிலே! என்று பாடுவது வழக்கமாகிவிட்டது. ஆவியானவர் சீஷர்கள் மேல் அறையில் ஜெபிக்கும்போது இயேசுவின் கிருபையால் சீஷர்கள்மேல் இறங்கியவர் திரும்பி போய்விடவில்லையே! பின் ஏன் ஆவியானவரை அழைக்கவேண்டும்? எபே 4:30ல் உங்களுக்குள் இருக்கும் ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள். யோ 14:16ன்படி என்றென்றும்
நம்மோடு தங்கியிருக்கும் திட்டத்தோடு வந்த ஆவியானவர் நம்முள் இருப்பதை
உணராதவர்கள், உள்ளத்தில் ஆவியானவரை பெற்றுக்கொள்ளாத சபை ஜனங்கள், பாஸ்டர்கள் ஆகிய இவர்கள்தான்
ஆவியானவரை கூப்பிடுகிறார்கள். அதிலிருந்து ஆவியானவர் யாரிடம் உண்டு, யாரிடம் இல்லை! என்பதை நன்றாக அறியலாம்.
ஆவியானவரை கூப்பிடாதீர்கள். அவர் வரமாட்டார். உங்கள் பாவத்துக்கு மனஸ்தாபப்பட்டு பாவமன்னிப்பு பெற்று
மனந்திரும்புங்கள்! ஆவியானவர் தானக உள்ளே வருவார். எபே 1:13. ஆவியானவர் உங்களுக்குள் வந்துவிட்டாரா என்பதை நீங்களே அறியமுடியும் என்று ரோ 8ம் அதிகாரம் கூறுகிறது.
|
கேள்வி: நாங்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது நீங்கள் அந்த காலத்தில் கற்றுக் கொடுத்த
"கொடு உனக்கு கொடுக்கப்படும், அள உனக்கு அளக்கப்படும்" என்ற பாட்டை தயவு செய்து எழுதி அனுப்புங்கள். இப்போது நான்
CSI குருவானவராக பெரிய சபையில் ஊழியம் செய்கிறேன். அந்த பாடலை காணிக்கை நேரத்தில் பாட எங்கள் சபை மக்களுக்கு சொல்லி கொடுக்கவிரும்புகிறேன். ஜாமக்காரனில் எழுதினால் எல்லாருக்கும் பிரயோஜனப்படுமே?
பதில்: உங்கள் ஆவிக்குரிய ஆவலை பாராட்டுகிறேன். ஆனால் அதைவிட அர்த்தம் உள்ள பாடல் உண்டு அது
FMPBயின் பாட்டு புத்தகத்தில் உண்டு அதை சொல்லிகொடுங்கள். அர்த்தத்துடனும் இருக்கும், ஆத்துமாவோடு அந்த பாடல் பேசும்
"அனைத்தும் கிறிஸ்துவுக்கே என் அனைத்தும் கிறிஸ்துவுக்கே...." என்ற அந்த பாடல்வரிகள் எனக்கு மறந்துப்போனது.
FMPBயின் பாட்டு புத்தகத்தை கேட்டு வாங்கி சபை மக்களுக்கு காணிக்கை போடும்போது அந்த பாடலைப் பாடச் சொல்லிக்கொடுங்கள். அந்த பாடல் அர்த்தம் உள்ள பாடலாக இருக்கும்.
|
கேள்வி: இப்போது
FM ரேடியோவில் 3 நிமிட கிறிஸ்தவ செய்தி இலங்கையில் ஒலிப்பரப்ப தொடங்கிவிட்டார்களே, அது இந்தியாவிலும்
FM ரேடியோவில் சத்திய வசன நிகழ்ச்சியில் கேட்க முடியுமா?
பதில்: உலக மீடியாக்களை கர்த்தரின் பணிக்கு பயன்படுத்துவோம். அதில் தவறேதும் இல்லை. ஆனால் 3 நிமிடத்தில் எத்தனை விஷயத்தை பேசமுடியும். எந்த அளவு அது பிரயோஜனப்படும் என்ற விவரம் இன்னும் நடைமுறையில் அதன் பலன்களை அறியவில்லை.
FM ஊழியம் என்று ஆரம்பித்து இப்போதுள்ள வானொலி ஊழியம்,
TV ஊழியம் ஆகியவைகள் நின்றுவிடாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். இந்த இரண்டு ஊழியத்தில் உள்ள பலன்கள் மிக ஏராளம், செலவும் ஏராளம். ஆனால் கர்த்தரின் செய்தி மக்களிடம் நன்றாக சென்றடைய
டிவியும், வானொலியும் நல்ல ஊடகமாகும். இப்போது சத்திய வசன டிவி, வானொலி நிகழ்ச்சிகள் நின்றுவிடாமல் இருக்க ஜெபிப்போம். காரணம் டிவி, வானொலி ஊழியம் நின்றுவிடும் ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஜெபியுங்கள்.
|
கேள்வி: திருச்சி பாஸ்டர்.விக்டர் ஞானராஜ் அவர்கள்
உலக முடிவுக்கான தேதி, மாதம், வருடமும் குறித்து கணக்கிட்டு அறிவித்த அவருடைய பிரசங்கத்தை நான் கேட்டேன். உலக முடிவு உண்மையில் அவர் சொல்லும் தேதியில், வருடத்தில் நடக்குமா?
பதில்: நீங்கள் உயிரோடிருந்து, அவரும் உயிரோடிருந்தால் நிச்சயம் அவரை நோக்கி கள்ள தீர்க்கதரிசியே என்று முகத்துக்கு நேராக கூறமுடியும். நிச்சயம் அப்படி அவரை கேட்க பலர் துடித்துக் கொண்டிருப்பதாக அவர் சபை அங்கத்தினர்களே தயாராக இருக்கிறார்கள்.
இவரைப்போலவே சகோ.சாது சுந்தர் செல்வராஜ், சகோ.வின்சென்ட் செல்வகுமாரும் தேதி கூறாமல் நம் காலத்திலேயே
உலக முடிவு, கிறிஸ்துவின் வருகை சம்பவிக்கப் போகிறதாக கூறினார்கள் என்று பலர் எழுதியுள்ளார்கள். இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகள்,
சீஷர்கள் வாழ்ந்த காலத்திலும், இயேசு கிறிஸ்து மனிதனாக வாழ்ந்த காலத்திலும் இருந்தார்கள். ஆகவேதான் இப்படிப்பட்டவர்களை நம்பாதீர்கள் என்று அன்றே கர்த்தர் எச்சரித்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி பலர் உலக முடிவை மனித ஞானத்திலும், தினசரி செய்திதாள்களில் காணப்படும் பல நிகழ்ச்சிகளை மனதில் கொண்டு உலகம் முடியப்போகிறது என்று கூறியிருப்பதை உங்களில் பலர் அறிவீர்களே!
2000 வருடம் தொடங்கியபோது
அமெரிக்காவும், உலக நாடுகளும் பயந்ததை அறிவோமே, விமானம் ஓடவில்லை, ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் எல்லாரும் வீட்டில் பதுங்கியிருந்தார்களே, பிறகு பயம் தெளிந்து ரயில்கள் ஓட்டவும், விமானத்தை இயக்கவும் தைரியப்பட்டனர்.
உலகத்தின் முடிவும் கிறிஸ்துவின் வரவும் மிகவும் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது நூற்றுக்குநூறு உண்மைதான். ஆனால் மாதத்தையோ, வருடங்களையோ யாருமே குறிப்பிடமுடியாது. குறிப்பிடக்கூடாது. சீஷர்கள் வாழ்ந்த காலத்திலேயே கிறிஸ்துவின் வருகையை எதிர்ப்பார்த்ததால்தானே
மாரநாதா என்று ஒருவரை பார்த்து மற்றவர் கூறிக்கொண்டார்கள்.
மாரநாதா என்றால் இயேசு வருகிறார் என்று அர்த்தம். இயேசுவின் இரண்டாம் வருகையை சீஷர்கள் காலத்திலேயே எதிர்ப்பார்த்தார்கள். ஆகவே விசுவாசிகளாகிய நாமும் அவர் வருகை எந்த நிமிடமும் நடக்கலாம் என்று சகல ஆயத்தத்துடன் நாம் தயாராக இருக்கவேண்டியது அவசியம். ஆனால் கிறிஸ்துவின் வருகையைக்குறித்து மாதம், வருடம் கூறும் பாஸ்டர்.விக்டர் ஞானராஜ் போன்றவர்களின் பிரசங்கங்களை நம்பாதீர்கள்.
FEBA வானொலி ஸ்தாபனத்தில் இவர் வேலை செய்துகொண்டிருந்தபோது வேதஞானம் உள்ள நல்ல ஊழியராக இருந்தவர். எப்போது
அந்நியபாஷையை நம்பினாரோ, எப்போது ஊதி ஜனங்களை கீழே விழவைக்கும் ஊழியத்தை தொடங்கினாரோ, அப்போதே அவர் விழுகை வெளிப்பட்டது. அவர் வழி விலகிபோனதால் அவர் பிள்ளைகளில் ஒருவரின் வழி விலகல் பற்றி ஏராளமானவர்கள் பேச ஆரம்பித்து விவரம் ஊர் அறிய ஆரம்பித்தது. வசனத்தை விட்டுவிலகும்போது சபை மட்டுமல்ல, குடும்பம் கூட பாதிக்கப்படுகிறது. சாட்சியையும் இழக்கிறது. ஜாக்கிரதை!
|
|
|
|
|
|