கர்த்தருக்குள் அன்பானவர்களே,
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துக்களை கூறுக்கொள்கிறேன்.
நம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக மனம்திரும்பின அனுபவமுள்ள விசுவாசிகள் பாரத்துடன் ஜெபிக்க வேண்டியது மிக அவசியம்.
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் ஆளும் கட்சி - எதிர்கட்சி ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கு இடையே ஜீவமரணபோராட்டம் நடக்கிறது. வாழ்வா - சாவா என்கிற நிலைக்கு இரண்டு கட்சி தலைவர்களில் நிலையும் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் இவர்கள் யாரும்
கொள்கைகள், நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுபோகும்
தூரப்பார்வை, மக்கள் நலம் எதையும் கவனிக்கமாட்டார்கள். ஜெயித்து ஆட்சியை பிடிப்பது ஒன்றுதான் இப்போதைக்கு இவர்களின் லட்சியம்.
இந்த இரண்டு கட்சிகளும் சுமார் 5 தலைமுறை நாட்டு மக்களை மதுபானத்துக்கு அடிமையாக்கிபோட்டார்கள்.
இளம் தலைமுறையினரும் மதுபானத்துக்கு அடிமையாகிபோனார்கள். அதன் காரணமாக எங்கு பார்த்தாலும் கொலை வெறி, கற்பழிப்பு, வழிப்பறிக் கொள்ளை, பணத்துக்காக தாயை, தந்தையை, சகோதர, சகோதரிகளை, மனைவியை, புருஷனை கொலை செய்யவும் தயங்குவதில்லை. எத்தனைக் கொடூரம். இவை அத்தனையும்
மதுபானத்தால், சாராயத்தால் வந்த விளைவு. தமிழ்நாட்டின் பெரும்பாலானவர்கள் வீட்டில் குடித்தே சொத்தை அழித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் பெற்ற பிள்ளைகளின் படிப்பு, திருமண வாழ்க்கை யாவும் சோகமும் தோல்வியுமானது. அதன் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபப்பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டேயிருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம்? நம் நாட்டை ஆள்பவர்கள்தான். மிக சுலபமாகவும் மிக அதிகமாகவும் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டி தருவது மதுபான கடைகளே!
கேரளா மாநிலத்தில்
ஓணம் போன்ற பண்டிகை நாட்களில் ஒரே ஒருநாள் சாராய மற்றும் கள்ளு கடைகளின்மூலம் அரசாங்கத்துக்கு கிடைத்த வருமானம் 91 கோடிகள். தமிழ்நாட்டிலும் ஏறக்குறைய அதே அளவு வருமானம் பண்டிகை நாட்களில் கிடைக்கிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுபானத்தை ஒழிக்கும் சட்டம் கொண்டுவரமுடியவில்லையே! அதைக்குறித்து எந்த கட்சியும் வாய்திறப்பதில்லையே! ஏன்? மறைந்த நடிகரும்,
முன்னாள் முதல்வரும், புரட்சி தலைவர் என்று புகழப்பட்ட திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் மதுபானத்தை ஒழிக்க முயன்றார்கள். ஆனால் ஆட்சி கவிழ்ந்துவிடும் அபாயம் ஏற்பட்டதை உணர்ந்து தன் பதவி நிலைத்திருக்க தொடர்ந்து மதுபான கடைகளை ஊக்கவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குடிகாரர்களால் கண்ணீர் வடிக்கும் தாய்குலம் ஒவ்வொருநாளும் நாட்டை ஆள்பவர்களை பார்த்து புழுதி வாரியிறைத்து சபிக்கிறது. காலமெல்லாம் கண்ணீர்! இந்த நிலை எந்த ஆட்சியில் மாறும்? என்று ஒரு கூட்டம் மக்கள் ஏங்குகிறார்கள்.
ஆளும் கட்சியின் அரசாங்கத்தை ஒழிப்பதுதான் என் முதல்வேலை என்பவர்களே எலக்ஷன் சீட்டுக்காக அதே ஆளும் கட்சியுடன் இணைந்து கூட்டணி வைத்து
ஓட்டு கேட்க வருவார்கள். அப்படியே எதிர்கட்சியின் பழங்கால ஊழல்களை அடுக்கடுக்காக எண்ணி அறிவித்து அவர்களை எள்ளி நகையாடினார்கள் ஒரு கூட்டம். அவர்கள்
MLA சீட்டுக்காக அதே கூட்டத்துடன் இணைந்து கூட்டணி வைத்து அவர்களும் வெட்கம் மானம் இல்லாமல் ஒரே மேடையில் அவர்களைப் புகழ்ந்துபேசுகிறார்கள். இப்படியெல்லாம் அவர்களைப்பற்றி மோசமாக பேசினோமே என்ற கூச்சம்கூட இல்லாமல், வெட்கம், மானம் இழந்துபோனார்கள். ஏறக்குறைய இதேபோல் எல்லா கட்சிகளுமே சோரம்போன நிலையில்தான்
ஓட்டு கேட்க வருவார்கள். கேட்டால் அரசியலில் இதெல்லாம் சகஜம், நிலையான நண்பனுமில்லை - எதிரியுமில்லை என்பார்கள்.
இந்த சூழ்நிலையில் கிறிஸ்தவ விசுவாசிகள் நம்
தமிழ்நாட்டு தேர்தலுக்காக கூடி இணைந்து ஜெபிப்பதோடு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் தனி ஜெபத்தில் ஒவ்வொரு நாளும், நம் நாட்டை ஊழல் இல்லாமுறையில் ஆட்சிசெய்து மக்கள் சமாதானத்துடன் வாழ நல்ல ஆட்சி தருபவர் கையில் நம் நாட்டை ஒப்படைக்க கர்த்தரின் உதவியை ஜெபத்தின்மூலம் நாடுவோம். உண்மை கிறிஸ்தவர்கள்
எந்த கட்சியையும் சாராதவர்களாக இருக்கவேண்டும். ஆனால் ஒட்டுபோட உரிமை உண்டு. எலக்ஷன் முடிந்து எந்த கட்சி ஆளுகை செய்தாலும் அவர்களுக்காக ஜெபிக்க கடமைப்பட்டவர்களாகிறார்கள்.
இந்த மாத ஜாமக்காரனை வாசிக்கும்
CSI அல்லாத மற்ற சபையில் உள்ள ஜாமக்காரன் வாசகர்கள், குறிப்பாக வெளிநாட்டில் வாழும் ஜாமக்காரன் கிறிஸ்தவ விசுவாசிகள், இப்படி நினைப்பார்கள் இது என்ன! தொடர்ந்து ஒவ்வொருமுறையும்
CSI சபை ஊழல்களைப்பற்றியே எழுதிக்கொண்டிருக்கிறாரே! என்று நினைப்பார்கள். ஆம், இம்முறையும் இந்த ஜாமக்காரனில்
CSIயில் நடந்த சினாட் கூட்டத்தில் கலந்துகொள்ளும் சினாட் மெம்பர்கள் பேசவேண்டியதை அறிவுறுத்தியிருக்கிறேன். இந்த சூழ்நிலையில்
CSIயின் தலைமையான சினாட்டின் செயல்முறைகளைப்பற்றி விமர்சித்துமிருக்கிறேன். எல்லா சினாட் மெம்பர்களுக்கும் தனித்தனியாக அந்த கடிதத்தை அனுப்பினேன்.
நான் பிறந்ததிலிருந்து அங்கம் வகிக்கும் என்
CSI சபையில் காணப்படும் தாறுமாறான ஊழல் நிலையை நான் கண்டும், அறிந்தும் எப்படி சும்மாயிருக்க இயலும். அதுவும் முக்கியமாக பிஷப்மார், மாடரேட்டர் தேர்ந்தெடுக்கும் நேரங்களில் உள்ளே நடக்கும் விஷயங்களை வாசகர்களுக்கு அறிவித்தால்தானே அவர்கள் ஜெபிக்கமுடியும். அவரவர்களின் சபையில் என்ன நடக்கிறது? என்பதை குறித்து யாருமே அறிய அக்கறை காட்டாதநிலையில், திருமண்டலத்தின் உள் விவகாரங்களை மக்கள் அறிய செய்தாலாவது சபையை குறித்தப்பாரம் அவர்களுக்குள் உண்டாகாதா? திருமண்டலத்தை திருத்த அவர்களால் இயன்ற நடவடிக்கைகளை எடுக்கமாட்டார்களா? என்றுதான் விவரங்களை அறிவிக்கிறேன். ஒவ்வொரு முக்கியமான கட்டங்களில்
அந்தந்த சபை விவரங்களை என் வாசகர்கள் அறியவேண்டி விளக்குகிறேன்.
அப்படி எழுதி அறிவித்ததின் காரணமாகத்தான் எங்கள் கோயமுத்தூர்
CSI டையோசிஸ் பிஷப்.Rt.Rev.துரை அவர்களை பலகோடிகள் பண ஊழல் காரணமாக
பதவி நீக்கம் செய்யப்பட்டதாக இதை எழுதிக்கொண்டிருக்கும்போது அறிந்தேன். இது ஊழலை வெளியே கொண்டுவந்து வெளி உலகத்துக்கு காட்ட முதல் முயற்சி எடுத்தவர்கள், சாத்வீக முறையில் உண்ணாவிரதம் இருந்தவர்கள், பணம் செலவு செய்து ஊழலை
நீதிமன்றத்துக்கு அறிவித்தவர்கள், இந்த விவரங்களை சிறியளவில் ஜாமக்காரன் பத்திரிக்கை மூலமாக கிறிஸ்தவ உலகத்துக்கு (இந்தியா - வெளிநாடுகள்) அறிவித்து ஜெபிக்க கேட்டுகொள்ளும்
சிறிய பணியைமட்டும் செய்த எனக்கும் இதை வெற்றி என்றோ!
சந்தோஷம் என்றோ! கூறமுடியாது. மிகுந்த மனவேதனையுடன் பெரிய ஆபத்தின் மத்தியில் இப்பணியை செய்தேன். திருச்சபை வரலாற்றில்
CSI சபை பிஷப் ஒருவர்
பதவி நீக்கம் செய்யப்படுவது இதுதான் முதல்முறையாகும். பதவி நீக்க முடிவு இன்னும் உறுதியாக்கப்படவில்லை என்றாலும் தற்காலிக பொறுப்புக்கு ஒரு பிஷப்பானவரையும், குருவானவரையும் நியமித்து உள்ளார்கள். இனி மறுபடியும் தேர்தல் நடத்தி
புது பிஷப் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். டையோசிஸ்ஸில் இருந்து பணம் கொள்ளையடிக்கும் வழிகள், நுணுக்கங்கள் யாவும் பழைய பிஷப்மூலம் பல குருமார்கள் அறிந்துவைத்துள்ளதால் இனிவரப்போகும் பிஷப் தெய்வ பயம் இல்லாதவராகவும், மனம் திரும்பிய அனுபவம் இல்லாதவராகவும் அமைந்தால் தீர்ந்தது! திருமண்டலத்தில் பழைய நிலைதான் டையோசிஸ்ஸில் தொடரும். ஆனாலும் டையோசிஸ் மக்களுக்கு இப்போது நல்ல விழிப்புணர்வு உண்டாகியுள்ளதால் ஊழல்களின் அளவு குறையும் அவ்வளவே! ஜெபிப்போம்.
எனக்கு
CSI மட்டுமல்லாமல், எல்லா சபைகளிலும் ஆயிரக்கணக்கில் வாசகர்கள் உண்டு. அவ்வப்போது ஒவ்வொரு சபைகளின் பிரச்சனைகளைக் குறித்தும் எழுதுகிறேன், விவரங்களை அறிவிக்கிறேன். இந்த செய்திகள் மற்ற சபையினருக்கு பிரயோஜனமாக இராது. ஆகவே அதை படிக்கவேண்டாம். மற்ற செய்திகளை வாசியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆகவேதான் பவுல் கூறுகிறதைபோல்
எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்கிறது. 2கொரி 11:28 என்கிறார். அன்றாட சுமையாய்யிருக்கிறது. 2கொரி 11:28 (கத்தோலிக்க மொழிபெயர்ப்பு) ஆகையால் அருமையானவர்களே! ஆண்டவரின் வருகையும், நம் வயதும் ஏற ஏற மரணமும் நம்மை நோக்கி
நெருங்கிவந்துக்கொண்டிருக்கிறது. ஆகவே நாம் எல்லாவற்றையும் சந்திக்க தைரியமுடையவர்களாய் நம்மை எல்லா நிமிடமும் ஆயத்தப்படுத்திக்கொள்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இனி வரும் நாட்கள் நம் பிள்ளைகளின் பரீட்சைகால மாதங்களாய் இருப்பதால், வாசகர்களின் பிள்ளைகள் அல்லது அவர்களின் பேரப்பிள்ளைகளின் தேர்வு நல்லபடியாக எழுத, வெற்றி பெற இப்போதே அவர்களுக்காக ஜெபிக்க தொடங்கிவிட்டோம். கடந்த மாதம் பலருடைய சாட்சி கடிதங்களை வாசித்து தேவனைத்துதித்தோம். கர்த்தருக்கே மகிமையும், கனமும், புகழும் உண்டாவதாக. தொடர்ந்து ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்போம். குறிப்பாக முக்கியமாக
தமிழ்நாட்டு தேர்தலுக்காக ஜெபிப்போம். அமைதியாக தேர்தல் நடைபெறவும், நல்ல ஆட்சி மலரவும் ஜெபிப்போம்.
தேசத்தில் நடக்கும் ... அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். எசே 9:4. வாசகர்கள் அனைவருக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறோம். நீங்களும் ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காப்பாராக. ஆமென்.
|